15/06/2018

தோழர் முகிலனை விடுதலை செய்...


சிறையில் உண்ணாவிரதம் இருந்த முகிலன் மருத்துவமனையில் அனுமதி...

பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் சுற்றுச்சூழல் போராளியான முகிலன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுத் திரும்பியபோது போலீஸாரால் கூடங்குளம்  போராட்ட வழக்குக்காகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 269 நாள்களாகப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு நீதி கிடைக்க வேண்டும், கூடங்குளத்தில் அப்பாவி மக்கள் ஒரு லட்சம் பேர்மீது தொடரப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 9 நாள்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதனால் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விடுவிக்க வலியுறுத்தி அநீதிக்கு எதிரான கூட்டியக்கம், காவிரி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பாகக் கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது 

இந்த நிலையில், காவிரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த மு.ராஜேஸ்வரி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சம்பத், நந்திரபாலன், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பைச் சேர்ந்த நெல்லை பீட்டர், எஸ்.டி.பி.ஐ மாநிலத் துணைத் தலைவர் முபாரக், பி.யூ.சி.எஸ் வழக்கறிஞரான அப்துல் நிஜாம், நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராஜா ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ``கடந்த 9 மாத காலமாக முகிலன் சிறையில் இருந்து வருகிறார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போதெல்லாம், நீதிபதியிடம், ‘என்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை. அதற்காக அரசு சார்பாக எத்தனை சம்மன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சிறையில் இருப்பதால் வழக்குகளை அரசு விரைவாக நடத்தி முடிக்க வேண்டும். என் மீதான வழக்குகளை மட்டும் தனியாகப் பிரித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும். வழக்குகள் குறித்த முழு விவரங்களையும் கொடுக்க வேண்டும்’ எனப் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அரசு சார்பாக முறையாக விவரங்கள் கொடுக்கப்படவில்லை.

தற்போது 5 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சிறைக்கு உள்ளேயே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இது போன்ற சூழலில், அவரிடம் சிறைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், சிறைத்துறையினரோ அரசு சார்பாகவோ அவரிடம் எந்தச் சமரச பேச்சுக்கும் தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருப்பதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அதனால் அரசு சார்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அத்துடன், அவரை சிறையிலிருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதற்காகத் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் நபர்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் அளிக்க உள்ளோம். சிறையில் 9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் முகிலன் தன் உடல் நலனைக் கவனத்தில் கொண்டு உடனடியாக அதைக் கைவிட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.