30/06/2018

சேரனையும் புகழ்வோம்...


சேரன் கருவூரில் இருந்தான். சோழன் அவனைப் பார்க்க யானைமீதமர்ந்து வந்தான்.

அவன் படையெடுத்துதான் வந்துள்ளான் என்று நினைத்து சேரனின் வீரர்கள் சூழ்ந்துகொண்டனர்.

இதனால் சோழனின் யானைக்கு மதம் பிடித்துவிட்டது.

இதை புலவரும் சேரனும் மாடத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
புலவரிடம் இவன் யார் என்று சேரன் கேட்கிறான்.

புலவர் சோழனின் புகழை எடுத்துக்கூறி அவனைக் காப்பாற்றுமாறு பாடினார்.

(எப்பிடி பாத்தாலும் நம்ம பயடா இவன்)

உடனே சேரன் போய் யானையை அடக்கி சோழனைக் காப்பாற்றினான்.

சேரனின் பெயர்: சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை.

சோழனின் பெயர்: முடித்தலை கோப்பெருநற்கிள்ளி.

புலவரின் பெயர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

பாடல்: புறநானூறு 13.

இவன்யார் என்குவை ஆயின், இவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
சுறவுஇனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம,
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

இவன் யார் என்று கேட்கிறாயா?
இவன் அம்புகளால் துளைக்கப்பட்ட புள்ளிகளுடன் சிதைந்து காணப்படும் புலித்தோலாலாகிய கவசத்தைத் தன் வலிய அழகிய மார்பில் அணிந்து கூற்றுவன் போல் யானைமீது வருகிறான்.

அந்த யானை வருவது கடலில் ஒருமரக்கலம் வருவதைப்போலவும்
பல விண்மீன்களுக்கு நடுவே விளங்கும் திங்களைப்போலவும் காட்சி அளிக்கிறது.

அந்த யானையைச் சுற்றிலும் சுறாமீன்களின் கூட்டம் போல் வாளேந்திய வீரர்கள் சூழ்ந்துள்ளனர்.
அவர்களிடையே உள்ள பாகர்கள் அறியாமலேயே அந்த யானை மதம் கொண்டது.

இவன் நாட்டில் வயல்களில் மயில்கள் உதிர்த்த தோகையை உழவர்கள் நெற்கதிர்களோடு சேர்த்து அள்ளிச் செல்வார்கள்.

இவன் கொழுத்த மீனையும் முதிர்ந்த கள்ளையும், நீரை வேலியாகவும் உள்ள வளமான நாட்டுக்குத் தலைவன்.

இவன் இன்னலின்றித் திரும்பிச் செல்வானாக...

நன்றி: https:// ta.m.wikipedia. org/wiki/சேரமான்_அந்துவஞ்சேரல்_இரும்பொறை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.