11/07/2018

காரண சரீரம்...


காரண சரீரம் என்பது அந்தராத்மாவின் கொள்கலம். மனிதனின் தன்முனைப்பு (Ego) அல்லது அஹங்காரம் இச்சரீரத்திற்குரியது.

பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனின் தனித்தன்மை உருவாகும்பொழுது மிருக உடலில் இருந்த பிரக்ஞை தனக்கென்று ஒரு காரண சரீரத்தைப் பெற்று மனிதனாகி விடுகிறது. இந்நிலையில் பரமாத்மாவின் சுடர்பொறியே காரணசரீரத்தில் புகுந்து ஜீவாத்மன் ஆகின்றது.

“காரண சரீரங்களின் மொத்தமே ஈஸ்வரன். ஜீவனின் காரண சரீரம் ஈஸ்வரனின் சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது” – மாண்டுக்கியோபநிஷதம்.

கடந்த பிறப்புகளின் அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இச்சரீரத்தில் தேங்கி நின்று நமது அடுத்த பிறப்புக்கு காரணியாக அமைகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி இச்சரீரத்தில் பிரதிபலிக்கின்றது. ஏனைய சரீரங்கள் ஒவ்வொன்றாக அழிந்த பின்னர், காணர சரீரம் மட்டும் பிறவிகள் தோறும் நிலைத்து நிற்கின்றது. ஒவ்வொரு பிறப்பிலும் ஆத்மா பெறும் அனுபவங்கள் காரண சரீரத்தை மேலும் மேலும் விருத்தி அடையச் செய்கின்றது.

காரண சரீரத்தை இந்த வேதங்கள் விஞ்ஞானமய கோஷம் என்று குறிப்பிடுகின்றன. வேறுபடுத்தி தேர்வு செய்யும் கோஷம் (Discriminating Sheath) என்று இதை அர்த்தப்படுத்தலாம். அதாவது ஏனைய சரீரங்கள் மூலமாக பெற்ற அனுபவங்களை காரண சரீரம் ஒழுங்குபடுத்தி நல்லது கெட்டது எது எனப் பிரித்தெடுத்து தன்னிடம் தக்க வைத்துக் கொள்கிறது. காரண சரீரத்தின் பெறுபேறுகளைக் கொண்டே மறுபிறப்பில் எமக்குரிய குணம் நாட்டம் திறமை எல்லாம் நிர்ணயிக்கப்படுகின்றன. இச்சரீரத்தில் பிரதிபலிக்கப்படும் காரணங்களைக் கொண்டு எமது எதிர்காலம் அமைக்கப்படுவதால் தான் இது காரண சரீரம் எனப்படுகிறது.

காரண சரீரத்திலேயே மனிதனின் கிரியாசக்தியிருக்கிறது. மனிதனின் உயர்மனசு தெய்வீகமானது. மனிதன் தனது மனதைக் குவித்து ஒருநிலைப்படுத்தி தியானித்து தனது சிந்தனையால் “படைக்கும் ஆற்றலை” (Creative Power) பெறலாம். அவ்வாற்றலின் மூலமாக அவனது உயர்சிந்தனைகள் அவனை அறியாமலேயே செயல்வடிவங்கள் பெறுகின்றன.

காரண சரீரத்தில் உதிக்கும் எண்ணங்கள் அரூபமானவை (Abstract) மனோசரீரத்தில் தோன்றும் சிந்தனைகள் ரூபமானவை (Concrete).
காரண சரீரத்தை விருத்தியடையச் செய்து சித்தபுருஷர்கள் கடந்துபோன பிறப்புக்களை ஞாபகத்துக்குக் கொண்டு வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.