27/10/2018

சித்தராவது எப்படி - 25...


முன் நின்று சாதித்தல், உடன் இருந்து சாதித்தல்..

இதுவரை முன் நின்று சாதிக்கும் முயற்சியில் அனைத்து மதங்களும் முயன்று முயன்று தோற்றுப் போய் விட்டன.. இதுவரை எந்த பலனையும் அப்படி ஒன்றும் பெரிதாக எதையும் பெற முடியவில்லை..

முன் நின்று சாதிக்கும் முயற்சியில் தோற்றுப்போய் சோர்ந்து விழுந்து விட்டு பின் தன்னை அறியாமல் தானே உடன் இருக்கும் முறைக்கு மாறியதால் பெருத்த பலனை அடைந்தார்கள்..

மதங்கள் எல்லாம் உச்சத்திற்கு ஒரு மிக பெரிய தோல்வி நிலைக்கு அழைத்து சென்று, அங்கு மனதை ஒடுக்கி பின் மனம் தாண்டிய நிலைக்கு அழைத்து செல்லப் படுவதால், அங்கு எண்ணியது கிடைத்தாலும், கிடைத்ததை செயல் படுத்த மனம் வலுவற்ற நிலையில், கிடைத்ததை பயன் படுத்த முடியாமல் போகிறது... இதுவும் மிக பெரிய தோல்வியே ஆகும்..

கை எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்..

ஆனால் உடன் இருந்து சாதிக்கும் ஒரு அற்புத வித்தையை மனிதன் கற்றுக் கொள்ளவும் இல்லை.. அவனுக்கு கற்றுக் கொடுக்கப் படுவதும் இல்லை..

ஒவ்வொரு மனிதனும் தோல்வியின் உச்சத்திலே மட்டுமே அடையும் அந்த வித்தையை அவன் மனித குலத்திற்கு சொல்லி கொடுக்க நினைத்தாலும், அது மற்றவர்களை துளியும் கவருவதில்லை.. அவன் மிக மோசமான நிலையை ஏற்கனவே அடைந்த காரணத்தால் அவன் தோல்வி நிலையை மையப் படுத்தப் படுவதால் கவர்ச்சியை விரும்பும் மனிதர்கள் அவனுடைய சொல்லை மதிப்பதில்லை..

அது சரி அது என்ன முன் நின்று சாதித்தல் உடன் இருந்து சாதித்தல் ?

இறைவன் முன் நின்று போராடி அழுது புலம்பி கெஞ்சி கொஞ்சி கதறி முறையிட்டு தனக்கு வேண்டியதை சாதிக்கும் பக்தனை போல உலகத்தவர் ஒரு பக்கம்..

இறைநிலை என்னவென்று அறிந்து அந்த நிலையோடு உடன் பட்டு இசைந்து வாழ்ந்து, அந்த இசையால் இறை ஆற்றலை தன்னுள் உள்வாங்கி கொண்டு வல்லவன் ஆகும் மற்றொரு முறை..

இந்த உடன் இருத்தலில் அந்த இறை ஆற்றலோடு இசையும் நிலைக்கு இருப்பதால் எந்த வித பயிற்சியும் இல்லாமல் இசைதல் என்ற உன்னத நிலை மூலம் இறை ஆற்றலையெல்லாம் பெற்று இறைநிலைக்கு நிகராக தன்னை ஆக்கி கொள்வதாகும்.. சும்மா இருக்கும் சுகம் என்பது இதுவே ஆகும்..

அப்படி சும்மா இருத்தலின் மூலம் இறை நிலைக்கு இசைந்து வாழ சூழ்நிலை ஏற்படுகிறது.. சும்மா இருத்தலின் மூலம் இசைந்து இருக்க தெரிந்து இருக்க வேண்டும்.. அப்படி இசைந்து இருக்க தெரியவில்லை என்றால் பல ஆண்டுகள் சும்மா இருந்தாலும் பலன் ஒன்றும் இல்லை..

இப்படி சும்மா இருப்பதின் மூலம் மட்டுமே இசைந்து இருக்க முடியும் என்பதும் மிக தவறான கருத்து.. நெருப்பில் நடக்கும் போதும் கூட இசைந்து இருக்க முடியும்.. இதை நாம் மறக்கக் கூடாது...

செயல் பாட்டிலும் சும்மா இருக்கும் நிலையும் சாத்தியப் படும்.. இது ஒன்றுதான் நம்மவர்களுக்கு புரியாததாக உள்ளது.. அதை பின்பு பார்த்துக் கொள்ளலாம்...

இப்படி இசைந்து இருக்கும் நிலையை பெருக்குவது எது என்றால் சுவாச ஒழுங்கு மட்டுமே..

எந்த வேலை செய்தாலும் சுவாச ஒழுங்கில் இருக்கும் போது சும்மா இருக்கும் சூழ்நிலை போன்ற அமைதியும், இசைந்து இருக்கும் உன்னத நிலையும் கிடைக்கிறது...

சரி அப்படி இசைந்து இருக்க, இசைப்பது ஒன்று இருந்தால் தானே அதற்கு நாம் இசைந்து இருக்க முடியும்.. வேறு எந்த பயிற்சியிலும் இசைக்கும் ஒன்றை காணவே முடியாது..

அந்த இசைக்கும் ஒன்று உருவானால் அதை வலுவுள்ள மனம் உடனே நீக்கி விடும்.. அதற்கு முன் சுவாச ஒழுங்கில் நம்மை இசைக்க வைப்பது எது..

எது ஒன்று சுவாசத்தை இசைக்க வைக்கிறதோ அதற்கு தானே நாம் சுவாச ஒழுங்கில் இசைகின்றோம்..

சுவாச ஒழுங்கில் நாம் இசைவது சுவாசத்தை இயக்கும் இறை சக்தியின் அம்சமான உயிர் சக்தி அல்லவா ? இதை யாராலும் நீக்க முடியாது..

நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது சுவாச ஒழுங்குடன் இருப்பது இறை ஆற்றலுக்கு இயங்கி, இசைந்து, உடன் இருத்தலுக்கு இணையானது... அதனால் முன் நின்று சாதிக்கும் வழக்கமான மிக கடினமான முறையை விட்டு விலகி உடன் இருந்து பயன் அடையும் ஒரு உன்னத ஆன்ம லாபம் தரும் நிலைக்கு வருகிறோம்..

முன் நின்று சாதிக்கும் நிலையில் பல கோடி சமயவாதிகள் ஏதோ கடவுள் தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடும் ஒரு மாயை தோற்றத்தில், கடவுளை விட்டு விலகியே இருக்கிறார்கள்.. ஆனால் உடன் இருக்கும் நிலையில் ஒரு சித்தன் கடவுளை பற்றி அதிகம் பேசாமல் கடவுளை மறந்தவன் போல் இருந்தாலும், கடவுளோடு உடன் இருக்கும் உன்னத நிலையில் இருக்கிறான்.. கடவுளுடன் இணைந்து இருக்கும் போது, கடவுளை விட்டு விலகி முன் நிற்கும் அவல நிலையை சித்தர் போன்ற மகான்கள் போவதில்லை...

சத்தியமான உண்மை இதுதான்.. கடவுள் யாரையும் காப்பாற்றுவதில்லை.. துளியும் காப்பாற்றுவதில்லை..

ஆனால் வல்லமை வாய்ந்த இசைக்கப் படும் இறை ஆற்றலுக்கு இசைந்து வாழும் உயிர்களே பல் வேறு உயிர் தோற்றங்களை பெற்று வாழ முடிகிறது..

இசைந்து வாழ்வதில் குறை ஏற்படும் பொழுது மரணத்தை தழுவுகிறது...

இறை ஆற்றலுக்கு இசைவதாலே மட்டுமே அனைத்தும் நடக்கிறது..

இந்த உண்மையால் மட்டுமே உண்மையான ஆன்மீகம் வெளிப்படும்..

ஆகவே சுவாச ஒழுங்கினை இறுகப் பற்றி விரைவில் சித்தராக முனைவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.