05/01/2019

அடைக்கலம் தேடி வந்த குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய பெண் போலீஸ்.. குவியும் பாராட்டு...


ஹைதராபாத்தின் ஒஸ்மேனியா மருத்துவமனைக்கு முன்னாள் நின்றுகொண்டிருந்த, தனக்கு முன்பின் தெரியாத இளைஞர் இர்பானிடம், துப்புரவு வேலையை செய்யும் ஷபனா பேகம் என்கிற பெண், தனது குழந்தையை கொடுத்ததோடு, சிறிது தூரம் சென்று குடிதண்ணீர் பிடித்து வருவதாகச் சொல்லி நகர்ந்துள்ளார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் குழந்தையின் தாய் ஷபனா பேகம் வரவில்லை. இர்பான் மேலும் பதற்றமாக, அந்த சமயத்தில் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.  செய்வதறியாமல் பரிதவித்த இர்பான், கைகுழந்தையுடன் அருகில் இருந்த அப்துல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு சென்று தகவல் அளித்துள்ளார்.

அதற்குள் இரவாகிவிட்டது. அந்த காவல் நிலையத்தில் இரவுநேர பணியில் இருந்த காவலர் ரவீந்திரனும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்தபோது, அவர் தனது மனைவி பிரியங்காவுக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார்.


சற்றும் தாமதிக்காத பிரியங்கா உடனே காரை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு வந்து குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி குழந்தையின் அழுகையை போக்கியுள்ளார். பெண் காவலரான பிரியங்காவுக்கும், காவலர் ரவீந்திரனுக்கும் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. பேறு கால விடுமுறையில் பிரியங்கா, வீட்டில் இருந்துள்ளார்.

 இந்த நிலையத்தில் அவர், தாய்மை போற்றும் இப்படி ஒரு செயலைச் செய்ததற்காக கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகளால் பாராட்டினை பெற்றார்.  அதன் பொருட்டு நடந்த பாராட்டு விழாவில் அந்த குழந்தையும் இருந்தது.  இதில் பேசிய பிரியங்கா, ‘தனக்கு அதைத் தவிர வேறேதும் தோன்றவில்லை.. எந்த ஒரு தாயும் இதைத் தான் செய்திருப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.

ஒரு வழியாக குழந்தையின் தாய் ஷபனா பேகம் கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு, தான் இர்பானிடம் குழந்தையை கொடுத்த பின்பு, அந்த இடத்தை மறந்துவிட்டதாகவும், தானும் தன் குழந்தையைத் தேடி அலைந்ததாகவும் ஷபனா பேகம் கூறியுள்ளார்.  எனினும்  காவலராக இருந்தால் என்ன? தாய்மையுள்ளத்துக்கு எதுவும் தடையில்லை என்பதை பிரியங்கா நிரூபித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.