18/02/2019

தமிழ்நாட்டில் வேற்றுமொழி வாக்காளர்கள்... புதிய தலைமுறை இதழில்..


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி...

தமிழ்நாட்டில் வேற்று மொழி வாக்காளர்கள் அதிகரித்திருப்பது குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் “புதிய தலைமுறை” வார ஏட்டுக்கு செவ்வி அளித்துள்ளார்.

21.02.2019 நாளிட்ட “புதிய தலைமுறை” இதழில் அவர் அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளதாவது :

“இப்போது வெளியாகியுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிறமொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள்.

இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள். தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.