21/03/2019

இன அழிப்பு ஶ்ரீலங்காவுக்கு ஜெனிவாவில் சாதகமாக செயற்படவுள்ள இந்தியா: ஆங்கில ஊடகம் தகவல்...


ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் ஶ்ரீலங்கா தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஶ்ரீலங்காவுக்கு சாதகமான விதத்தில் இந்தியா தலையிட்டது என இந்தியாவின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஶ்ரீலங்காவின் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு சுவாசிப்பதற்கான சூழலை வழங்குவதற்கான இந்தியாவின் விருப்பத்திற்கு சர்வதேசசமூகம் ஆதரவாக செவிசாய்த்துள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இரண்டுவருடகாலஅவகாம் வழங்கப்படவுள்ளது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ஶ்ரீலங்கா தொடர்பான தீர்மானத்தை தயாரித்தவேளை அது குறித்து இந்தியாவிற்கு தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிவந்தது என இந்த விடயம் குறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன எனவும் இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

 ஶ்ரீலங்காவில் சமீபத்தில் உருவாகிய குழப்பமான அரசியல் சூழ்நிலை குறித்தும் இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவுகளில் காணப்படும் பதட்டம் குறித்தும் அனைத்து நாடுகளிற்கும் தெரியும் என குறிப்பிட்ட வட்டாரங்கள் தெரிவித்தன எனவும்; இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா அரசாங்கத்தின் மீது இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தருணம் இதுவல்ல என்ற கருத்து நிலவியதாக இந்திய அதிகாரியொருவர் தெரிவித்தார் எனவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் சில நோர்டிக் நாடுகள் இறுக்கமான நிபந்தனைகளை கொண்ட தீர்மானத்தை கொண்டுவரமுயற்சித்தன இந்த தருணத்திலேயே இந்தியா தலையிட்டு ஶ்ரீலங்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து பணிவாக நினைவுபடுத்தியது எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

எனினும் பெருமளவு தலையீடுகளிற்கான அவசியம் இருக்கவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் ஶ்ரீலங்கா அரசாங்கத்திற்கு சுவாசிப்பதற்கான சூழலை வழங்கவேண்டும் என்பது குறித்து சர்வதேச சமூகத்தின் மத்தியில் கருத்து காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளன.

நாங்கள் அதிகமாக எதனையும் செய்யவேண்டிய தேவையிருக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்தார் என இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஶ்ரீலங்கா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவில்லை என்றால் வாக்கெடுப்பு அவசியமாகலாம் என ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்தியாவும் சர்வதேச சமூகமும் மறைமுக செய்தியொன்றை தெரிவித்தன எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

வாக்கெடுப்பு இடம்பெற்றால் என்ன நடைபெறும் என தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள முக்கிய வட்டாரங்கள் வாக்கெடுப்பின்றி தீர்மானம் நிறைவேறும் என குறிப்பிட்டன எனவும் இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி - www.thaarakam.com

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.