19/03/2019

தகவல் பரிமாற்றக் கருவியுடன் ஆம்புலன்ஸ் சேவை கோவையில் துவக்கம்...


தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் அதிநவீன தகவல் பரிமாற்றக் கருவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனை அறிமுகம் செய்தது.

மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யும்போது உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதோடு, நோயாளியுடன் பயணிக்கும் செவிலியருக்கு நோயாளியின் உடல்நிலையில் திடீரென ஏற்படும் நிகழ்வுகளைக் கண்டறிவதும் சமாளிப்பதும் கடினமாக இருக்கும், மேலும், ஆம்புலன்ஸ் மூலம் இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் உடல்நிலையை மருத்துவமனையில் இருந்து கண்காணிப்பதிலும் சிகிச்சை முறைகளை வழிநடத்துவதிலும் சிரமங்கள் தற்போது உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற குறைபாடுகளை சரி செய்யும் வகையில் ஆம்புலன்ஸில் பயணிக்கும் நோயாளிகளைப் பற்றிய மருத்துவக் குறிப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் அதிநவீன தகவல் பரிமாற்றக் கருவியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக கோவை, நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவக்கி உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதன் அறிமுக விழாவில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா நவீன ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன்,
இந்தத் தகவல் பரிமாற்ற வசதியின் மூலமாக, இடமாற்றம் செய்யப்படும் நோயாளியின் நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, இ.சி.ஜி. குறித்த தகவல்கள் உடனுக்குடன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்படும். மருத்துவமனையின் பிரத்யேக மருத்துவக் குழுவானது இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஆம்புலன்ஸில் நோயாளியுடன் பயணிக்கும் மருத்துவர், செவிலியருக்குத் தொடர்ந்து ஆலோசனை வழங்குவார்கள்.

அதேநேரம் நோயாளியின் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்படும். இந்த நவீன ஆம்புலன்ஸ் மூலம் நேரம் விரயமாவது தவிர்க்கப்படுவதுடன், சரியான சிகிச்சை வழிமுறைகளும் உடனடியாக கிடைக்கப்பட்டு உயிர்சேதம் தவிர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.