01/04/2019

போலீஸ்காரர் ஒருவரின் பாலியல் தொந்தரவு காரணமாக, தற்கொலை செய்த பெண் போலீஸ்...


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முத்துவாளன் (வயது 40). அவருடைய மனைவி அமுதா (35). இவர் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். கடந்த சில வாரங்களாக மாற்று பணியாக உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அவருடைய கணவர் முத்துவாளன், ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர்களுக்கு ஜான்சி (15) என்ற மகளும், அன்பு (14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 24–ந்தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அமுதா வீட்டினுள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பெண் போலீஸ் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அமுதாவிற்கு, போலீஸ்காரர் ஆறுமுகம் என்பவர் சமூக வலைதளம் வழியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:–

அமுதா தற்கொலைக்கு பின்னர் அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார், கடைசியாக அவர் யார், யாரிடம் பேசினார் என்பது குறித்தும் மற்றும் அவருக்கு வந்த வாட்ஸ்–அப் தகவல்கள் குறித்தும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் தேனூரை சேர்ந்த போலீஸ்காரர் ஆறுமுகம் (35) என்பவர் அடிக்கடி அமுதாவுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. உடனே ஆறுமுகத்தை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

ஆறுமுகமும், அமுதாவும் 2010–ம் ஆண்டு போலீஸ் பணிக்கு தேர்வாகியுள்ளனர். ஒரே நேரத்தில் தேர்வான அவர்கள், மதுரை ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்தனர். அப்போது அடுத்தடுத்த வீட்டில் குடியிருந்துள்ளனர். பக்கத்து வீடு என்பதால் அமுதா, ஆறுமுகத்திடம் நட்பாக பழகி வந்துள்ளார். அதன்பின்பு ஆறுமுகம் சோழவந்தான் போலீஸ் நிலையத்திற்கும், அமுதா வாலாந்தூர் போலீஸ் நிலையத்திலும் வேலை செய்து வந்தனர்.

அதன்பின்னரும் அமுதாவுடன், ஆறுமுகம் அடிக்கடி செல்போனில் பேசுவதும், குறும்படங்கள் அனுப்புவதுமாக இருந்துள்ளார். மேலும் அமுதாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரியவருகிறது. இந்தநிலையில் கடந்த 24–ந்தேதி இரவு செல்போனில் தொடர்பு கொண்ட ஆறுமுகம், அமுதாவின் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். அதன்பின்பு 2 மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட அவர், வீட்டின் முன்பு நிற்பதாக அமுதாவிடம் கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அமுதா அன்றைய தினம் இரவே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆறுமுகத்தை போலீசார் நேற்று கைது செய்து உசிலம்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீஸ்காரர் ஆறுமுகத்திற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.