29/04/2019

எஜமானரை காப்பாற்றி தனது உயிரை விட்ட பாசக்கார நாய்...


தஞ்சையில் பாம்பிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றி, தனது உயிரை விட்ட வளர்ப்பு நாயின் செயல் நெகிழச் செய்வதாக உள்ளது.

தஞ்சை மாவட்டம் வேங்கராயன்குடிகாடு பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 4 வருடங்களாக பப்பி எனப் பெயரிட்டு ஒரு நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். வழக்கம்போல் நாயை அழைத்துக் கொண்டு தன் வயல் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது புதருக்குள் இருந்து வந்த 5 அடி நீளம் கொண்ட கருநாகப் பாம்பு, நடராஜனைக் கடிக்க சீறியுள்ளது.

செய்வதறியாது நடராஜன் திகைத்து நின்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது செல்லநாய் பாய்ந்து சென்று அந்த பாம்பைப் கடித்துக் குதறியுள்ளது. பாம்பு உயிரிழக்கும் வரை விடாத நாய், பாம்பு இறந்துவிட்டதை உறுதி செய்த பிறகே தனது கடியை தளர்த்தியுள்ளது. பாம்பிடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிய தனது செல்லநாயை அணைத்து நெகிழ்ந்த நடராஜன், நடந்த சம்பவத்தை தனது வீட்டாரிடம் தெரிவிக்க பப்பியைத் தூக்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

நடந்ததை தனது வீட்டில் உள்ளவர்களிடம் நடராஜன் கூறிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த பப்பி, சிறிது நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. எஜமானரின் உயிரைக் காக்க கருநாகப் பாம்புடன் நாய் சண்டையிட்டபோது, பாம்பைக் கொன்றிருந்தாலும், பப்பியை பாம்பு கடித்திருந்ததால் அதுவும் இறக்க நேரிட்டுள்ளது. இதையடுத்து, செல்லநாய் மற்றும் பாம்பு இரண்டையுமே நடராஜன் மண்ணில் புதைத்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.