15/07/2020

பதில் சொல்லுங்கள் அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களே...



சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் காணாமல் போன Corona தொற்றால் பாதிக்கப்பட்ட 74 வயது முதியவரை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டு இருக்கும் குடும்பத்திற்கு அமைச்சர் விஜய பாஸ்கர் என்ன பதில் சொல்ல போகிறார்?

Corona தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜூன் 11 அன்று அவரை அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸ் முதலில் KMC அதற்கு பிறகு ராஜிவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் இறக்கிவிட்டு சென்றுவிடுகிறது. அதற்கு பிறகு அவர் அடுத்த 8 மணி நேரத்திற்கு மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிவது CCTVக்களில் பதிவாகி உள்ளது. அதற்கு பிறகு இரவு அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதும் CCTVல் பதிவாகி இருக்கிறது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகார் ஒரு மாதமாக விசாரிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை அறிக்கை கேட்ட நிலையில் வழக்கு விவரங்கள் ஒரு காவல்நிலையத்தில் இருந்து இன்னொரு காவல்நிலையத்திற்கு கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக சொல்லி ஒரு வாரமாக இழுத்தடிப்பு செய்கிறார்கள். வழக்கு விவரங்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு சென்று விட்டதையும் வழக்கு விசாரணை துவங்கி விட்டதையும் நாளை நீதிமன்றத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று இன்றைய விசாரணையின்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

Corona பாதிப்பில் இருந்த 74 வயது நபரின் மனைவியை வீட்டில் தனிமைப்படுத்த சொல்லி தனியாக அவரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்த மாநகராட்சி ஊழியர் அவர் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதை உறுதி செய்திருக்க வேண்டும்.

மருத்துவமனை வாசலில் இறக்கி விட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சரியான நபரிடம் தகவல் அளித்து அவர் அட்மிட் செய்யப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸில் ஒரு Corona நோயாளி வருவதையும் அவர் சிகிச்சை அளிக்கப்படாமல் மருத்துவமனை வளாகத்தில் 8 மணி நேரம் பெறுவதையும் மருத்துவமனை ஊழியர்கள் கவனித்து இருக்க வேண்டும்.

அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை என்ற தகவல் தெரிந்து புகார் அளிக்கப்பட்டவுடன் காவல்துறை விரைந்து விசாரணையை துவக்கி இருக்க வேண்டும்.

ஆனால் இவை எதுவும் நடைபெறவில்லை. விளைவு ஒரு தந்தையை ஒரு குடும்பம் இழந்து நிற்கிறது. ஒரு Corona நோயாளி ஆபத்தான வகையில் வெளியில் சுற்ற அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கு யார் பொறுப்பு? இது போல் மேலும் எத்தனை பேர் தமிழகத்தில் காணாமல் போய் இருக்கிறார்கள்?
சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளிப்பாரா?

https://m.timesofindia.com/city/chennai/coronavirus-in-chennai-patient-goes-missing-after-being-dropped-at-rajiv-gandhi-government-general-hospital/articleshow/76755534.cms?utm_source=facebook.com&utm_medium=social&utm_campaign=TOIMobile

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.