02/08/2020

யார் இந்த ஆரியர்கள் - 2...



இவ்வாறு கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் திகழும் ஒரு அரசியல் குழப்பமான தருணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள அது வரை இந்தியாவை வெவ்வேறு தருணங்களில் படையெடுத்து வந்து ஆண்டு பின்னர் மக்களுடன் கலந்த அன்னியர்கள் ராஜ்புட்ஸ் என்ற பெயரில் ஒன்று சேருகின்றனர். நீண்ட நாட்கள் இந்தியாவினை அவர்கள் கண்டு இருக்கின்றனர். இந்தியா மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கின்றது. ஆன்மீக ரீதியிலும் சரி அரசியல் ரீதியிலும் சரி. நிலைமை அவர்களுக்கு தோதாக இருக்கின்றது. வட இந்தியாவினை அவர்கள் கைக்கு கொண்டு வருகின்றனர். வட இந்தியாவில் அவர்களின் ஆட்சியை அமைக்கின்றனர்.

அந்த ஆட்சி தான் ஆரியவர்தம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் தான் ஆரியவர்த்தம் தொடங்கப்பெருகின்றது. இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள், குசானர்கள், ஹுன்னேர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்த ஆரியவர்த்தம் என்றும் அவர்கள் தான் ஆரியர்கள் என்றும் இக்காலத்திலேயே மனு தர்மமும், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்றப் பிரிவுகளும் பிறந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிராமணர்கள் - மத சம்பந்த செயல்களைச் செய்யும் ஆரியர்கள்.
சத்திரியர்கள் - யுத்தம் செய்யும் ஆரியர்கள்.
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்.
சூத்திரர்கள் - இந்தியர் அனைவரும்.
என்பதே அந்தப் பிரிவுகளின் அர்த்தம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

இப்பிரிவுகளைக் கொண்டே சதிகளால் மக்களை ஏமாற்றி அவர்களின் சமயங்களைப் பிடித்து இந்திய மக்களை அடிமையாக்க அவர்களுக்கு அமைதியான ஐநூறு கால ஆண்டுக் காலங்கள் கிடைக்கின்றன என்றும் அக்காலங்களிலேயே சமய நூல்களின் அர்த்தங்களும் சரி வரலாறும் சரி மாற்றப் படுகின்றது, மேலும் காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவுகளில் தங்களுக்கு ஏற்றார்ப்போல் பல பிரிவுகளை உருவாக்கிக் கொள்கின்றனர் அதாவது,

சிவாச்சாரியார் - பிராமண மயமாக்கப்பட்டவர்கள்.
சற்சூத்திரர் - ஆரியருக்கு துணை போனவர்கள்.
சூத்திரர் - ஆரியருக்கு அடிபணிந்தவர்.
பஞ்சமர் - ஆரியரை எதிர்த்தவர்கள்.
மலை சாதியினர் - மலைக்குத் தப்பி ஓடிப் போனவர்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதற்கு அவர்களுக்கு துணை போகும் பல விடயங்களில் ஒன்று தமிழர்கள்/இந்தியர்கள் உருவாக்கிய சமசுகிருத மொழியும் அவர்கள் உருவாக்கிய சைவ வைணவ சமயங்களுமே.

பல இனத்து மக்கள் கூடி இருக்கும் இந்தியாவில் கருத்துக்களைப் பரப்புவதற்கு தோதாக அனைத்து மொழிகளையும் கலந்த ஒரு மொழியை இந்தியர்கள் உருவாக்குகின்றனர் என்றும் அம்மொழியே பின்னர் அவர்களுக்கு எதிராய் பயன்படுகின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிப்பது போல் கி.பி நூற்றாண்டுகளிலேயே அதுவும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு பின்னரே தெளிவான சமசுகிருத படைப்புகள் நமக்கு கிடைக்கின்றன. மேலும் சமசுகிருதத்தில் பல மொழிச் சொற்கள் இருப்பதும் அவர்களின் கூற்றுக்கு சான்றாகத் தான் அமைகின்றது. அதாவது சமசுகிருதத்தில் தமிழ், பாலி, அர்த்தமாகதி, கிரேக்கம், லத்தின், பாரசீகம் மற்றும் அரமேயச் சொற்கள் இருப்பது இது அந்த மொழிகளின் கலப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும் என்றும் நாம் கருத வழி செய்கின்றது. சரி...

இம்மொழியினை தங்களுக்கு உதவுமாறு ஆரியர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதனை நாம் ஆராய்ந்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

எனவே இந்தியாவின் மீது படை எடுத்து வந்த சகர்கள் (Scythian), குசானர்கள் (Kushan), ஹுன்னேர்கள் (Huns), பெர்சியர்கள் (சுங்கர்கள் கன்வர்களை நினைவில் கொள்க), கிரேக்கர்கள் ஆகியோரின் வம்சத்தினரும் இந்தியாவுடன் வணிகம் செய்ய வந்து அங்கேயே தங்கி இருந்த ரோமர்களும் தான் ஆரியர்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.