11/08/2020

வேத கணிதமாக மாற்றப்பட்ட தமிழர் கணிதம்...



தற்போது இந்தியாவெங்கும் வேத கணிதம் என்ற பெயரில் மிகப்பெரிய வணிகம் நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களிடையே இது குறித்து பெரும் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது.

வேத கணிதம் என்றவுடன் பலரும் இது ஆரிய வேதங்களில் இருந்து உருவான கணக்கு முறை என்று தவறாக நினைத்து விடுகிறார்கள்.

உண்மையில் வேதத்திற்கும் இந்த கணக்கு முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த கணித முறையை வெளி உலகிற்கு கொண்டு வந்தது பாரதி கிருஷ்ணா என்ற ஆரிய பிராமணர். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் இக்கணித முறை அதர்வண வேதத்தில் உள்ளதாக முதலில் கூறினார்.

பேராசிரியர் சுக்லா என்பவர் இக்கணிதம் வேதத்தில் இடம்பெற்றுள்ளது என்பதற்கான சான்றுகள் எங்கே என்று பாரதி கிருஷ்ணாவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பாரதி கிருஷ்ணா, இந்த கணக்கு முறை தன்னுடைய சொந்த முயற்சியால் கண்டு பிடிக்கப் பட்டது என்றும், இதை வேறு எந்த நூலிலும் காண முடியாது என்றும் கூறிவிட்டார்.

ஆகவே இந்த கணித முறையை பாரதி கிருஷ்ணா வேத கணிதம் என்ற பெயரில் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது தெளிவாகிறது.

அன்று முதல் இது வேத கணிதம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இக்கணித முறை மிகவும் பயனுள்ள மனக்கணக்கு முறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

உலகிலேயே தமிழர்கள் தான் மிகச் சிறந்த கணக்கு வல்லுனர்கள் என்பது உலகறிந்த விடயம்.

இன்றும் வெளிநாடுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் பெரிதளவில் கணக்கு ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

தமிழகத்தில் தான் சிறப்பான மனக்கணக்குமுறை தோன்றியது.

பண்டைய தமிழர்களின் கால அளவு, நேர அளவு, மாத்திரை அளவு, சொல் அளவு, நெல் அளவு, எடை அளவு, நில அளவு, கடலளவு முறை அனைத்தும் மிகத் துல்லியமானது. தமிழர்கள் உருவாக்கிய Multiples of ten - பதின்பெருக்கம், Partitive numerals - பகுத்தல், Fractions - பின்னம், Transcribing fractions - பின்னம் எழுத்தல், Common fractions - பொது பின்னங்கள், Decimals - பதின்மம் போன்றவை தான் உலகம் முழுவதும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இது குறித்த பல செய்திகள், பாடல்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகிறது.

மேலும் இப்படியான கணக்கு முறை இன்றும் தமிழக கிராமங்களில் மூத்தோர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கணித முறையை தமிழர்கள் ஒரு தொகுப்பாக தொகுக்காமல் விட்டது தான் பெரிய பிழையாகி விட்டது.

இப்பிழையை தனக்கு சாதகமாக பயன்படுத்திய பிராமணர்கள், தமிழர் கணக்கு முறையை வேத கணிதமாக உலகிற்கு அறிமுகப்படுத்தினர்.

எப்படி தமிழர் ஓகக் கலை யோகா என்று மாறியதோ, தமிழிசை கர்நாடக இசையாக மாறியதோ, சித்த மருத்துவம் ஆயுர்வேதம் என்று மாறியதோ அவ்வாறே தமிழர் கணிதமும் வேதக் கணிதமாக கச்சிதமாக மாற்றப்பட்டது.

அதனால் தமிழர் கணித முறை என்று ஒன்று இல்லவே இல்லை என்ற நிலையும் உருவாக்கப்பட்டது.

இதை மாற்றவும், தமிழர் கணக்கு முறையை மீட்க வேண்டிய பொறுப்பும் தமிழர்களையே சாரும். தமிழ்க் கணித வல்லுனர்கள் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்டைய கணக்கு முறையை மீட்டு தமிழர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இந்த வேத கணக்கு முறையில் காணப்படும் அனைத்தும் தமிழர்களின் பண்டைய கணக்கு முறை தான் என்பதிலும் நமக்கு ஐயமில்லை.

எனினும் தமிழர்களின் கல்வெட்டு, ஓலை சுவடிகள், இலக்கியங்கள் மூலமாக பல ஆதாரங்களையும் திரட்டி இந்த வேத கணித முறை தமிழர்களின் கணக்கு முறை என்பதை மீண்டும் நிறுவுதல் நம் கடமையாகும்.

வேதகணிதம் என்ற இந்த நூலை தமிழர் Anbazhagan Devaraj அன்பழகன் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார்.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும் எளிமையாக புரியும்படி இந்த நூல் வேத (தமிழர்) கணக்கு முறையை எடுத்துக் கூறுகிறது.

தமிழ்ப் பிள்ளைகள், மாணவரகள் இந்த நூலை படித்து பெரிய அளவில் பயன்பெறலாம்.

இந்த நூலில் தமிழர் கணக்கு முறையை பற்றி நல்ல அறிமுகம் கொடுத்துள்ளார் அன்பழகன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.