20/08/2020

மூன்றாவது மொழியாக இந்தியை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? கோவை மாநகாட்சி பள்ளி கேள்வியால் சர்ச்சை...



கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என அடைப்புகுறியில் வைத்து கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்பப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் பணியை தொடங்கி உள்ளது. இதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது,.

1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த கேள்வியால் இந்தி மொழி அரசு பள்ளிகளில் கற்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், அதில் இந்தி கட்டாயமல்ல என்றும் ஏதேனும் ஒரு இந்திய மொழியைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மாணவர் சேர்க்கை விண்ணப்பம்
கோவை மாநகராட்சி அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி உள்ளது. அந்த மாணவர் சேர்க்கை படிவத்தில் "மாணவரின் தாய் மொழி ஒரு கேள்வியாக கேட்கப்படுகிறது.

இந்தி படிக்க விருப்பமா
அதற்கு அடுத்தபடியாக முதல் மொழியின் கீழ் மாணவர் எடுத்துக் கொள்ள விரும்பும் உத்தேச மொழிகள் என்ற கேள்வி உள்ளது. மூன்றாவது மொழி (இந்தி) எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களா அல்லது கைதொழில் ஒன்றை அதிகப்படியாக கற்றுக்கொள்ள விரும்புகிறார்களா? என்று உள்ளது.

இரு மொழிக்கொள்கை
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே நீடிக்கும் என்றும் மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் திட்டவட்டமாக அறிவித்தார். அப்படிப்பட்ட சூழலில் இந்த விண்ணப்ப படிவத்தில் உள்ள கேள்வியால் மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை ஆணையர் மறுப்பு
3வது மொழியாக இந்தி படிக்க விருப்பமா என மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கேட்கப்படவில்லை என்றும் அந்த விண்ணப்ப படிவம் நான் பதவியேற்ற பின் வெளியிடப்படவில்லை. என்றும் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு பள்ளியில் மட்டுமே அப்படி ஒரு விண்ணப்பம் வந்ததாகவும், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , போலியான விண்ணப்பம் என்றும் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.