06/08/2020

இந்தியாவில் எவ்வளவு பேர் இந்தி பேசுகிறார்கள்?



மும்மொழிக்கொள்கை முன்வைப்பவர்கள் முன்னெடுக்கும் முக்கியமான வாதம். இந்தி இந்தியாவின் மிகப்பெரும்பான்மையான மொழி, அதைப்படித்தால் இந்தியாவுக்குள் எங்கும் செல்லலாம் என்பது.

இந்தியாவே ஹிந்தி பேசுகிறது; எனவே எல்லோரும் பேசுங்கள் என்பதே அந்தக்குரல். எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் - பேச விரும்புகிறார்கள் என்றால், யாரைப் பார்த்து இன்னமும் ஹிந்தி பேசு என்கிறார்கள் இவர்கள்?

முதலில் இந்தியாவில் எல்லோரும் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது உண்மையா?

2011ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மொழிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்திய அரசு நடத்திய அந்தக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்த்து 12 மாநிலங்களில் மட்டுமே ஹிந்தி பேசப்படுகிறது.

சுமார் 130 கோடி பேர் வாழும் இந்தியாவில் 43.6% பேர் மட்டுமே ஹிந்தி பேசத் தெரிந்தவர்கள். இந்த 43.6% பேரும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இல்லை. வெவ்வேறு காரணங்கள் அடிப்படையில், தாங்கள் வாழும் சூழலால ஹிந்தியை பேசக் கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே.

இப்படி ஹிந்தி பேசுபவர்களும் இந்தியா முழுவதும் பரவி இல்லை. பசுக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களாக அறியப்பட்ட உத்திரப்பிரதேசம், உத்ரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களிலேயே இந்தி பேசுபவர்கள் பரவியுள்ளனர்.

இந்திய அரசு தரும் 2011 கணக்கின்படி, இந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் சுமார் 52.8 கோடி பேர் இந்தி பேசுகிறார்கள். ஆனால், இந்த 52 கோடி கணக்கு ஒன்றும் அவ்வளவு நேர்மையானதல்ல.

எது ஹிந்தி என்கிற கேள்வியின் கீழ் இருக்கிறது உண்மையில் எவ்வளவு பேர் ஹிந்தி பேசுகிறார்கள் என்பதற்கான சூட்சமம். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒன்றிய அரசு கொடுக்கும் பட்டியலில் ஹிந்தி என்கிற பட்டியலின் கீழ்,  32 கோடி பேர் மட்டுமே இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

ஹிந்தி என்கிற பட்டியலின் கீழ் அவாதி, பகாதி, பகேலி, பக்ரி ராஜஸ்தானி, பஞ்சாரி, பத்ரவாகி, போக்ரியா,ப்ரம்மவுரி, போஜ்புரி, பிஷோனி, பஜ்ரபாஷா, பண்டேலி, சம்பேலி, சத்தீஸ்கரி, சுராகி, துந்தாரி, கார்க்வாலி, கவாஃப்ரி, குஜ்ஜார், ஹந்தூரி, ஹவுராத்தி, ஹரியாண்வி,  ஜனுசரி, ஹ்ங்க்ரி, ஹரிபோலி , ஹோர்த்தா, குலுவி, குமௌனி,குமலிதர், லபானி, லரியா,லோதி, மஹத், மால்வி, மண்டேலி, மார்வாரி, மேவாரி, நாக்புரியா, நிமேதி, படாரி, பகாரி, பல்முகா,பஞ்ச் பர்கானியா,  பக்வாலி, பவாரி, புரான், ராஜஸ்தானி, சத்ரி, ஸ்ரீமௌரி, சோந்த்வாரி, சுகலி, சுர்குஜியா, சுர்ஜாபுரி என 53 மொழிகளை இந்தியோடு சேர்த்தே இந்தி என திரிக்கப்பட்டு, இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என பொய்க்கணக்கு காட்டப்படுகிறது.

இந்தி என்கிற பெயரில் சேர்க்கப்பட்டுள்ள ராஜஸ்தானி மொழியை 2.5 கோடி பேரும், சத்தீஸ்கரி மொழியை 1.67 கோடி பேரும், போஜ்புரி மொழியை 5.05 கோடி பேரும், மஹதி மொழியை 1.27 கோடி பேரும், ஹரியாணவி மொழியை 1 கோடி பேரும், கோட்டா மொழியை 80 லட்சம் பேரும் பேசுகிறார்கள். இதில், ஹிந்தி என்கிற பெயரில் சேர்க்கப்பட்டுள்ள 53 வெவ்வேறு தனித்தாய்மொழிகளில் சுமார் 27 மொழிகளை தலா 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் தாய்மொழியாக கொண்டு தனி மொழிதேசியமாக இயங்குபவர்கள்.

தலா 20 லட்சம் மக்கள் பேசும் 27 தனிப்பெரும் மொழிகளை இந்திக்காரர்கள் என்று இனிஷியலை மாற்றுவதன் மூலமே இந்தி என்பது இந்தியாவின் மிகப்பெரிய மொழி என்கிற பொய்ப்பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

தங்க நகை இல்லாதவர்கள், கவரிங்க் அணிந்துகொள்ள நினைப்பது தவறு அல்ல. ஆனால், அடுத்தவன் வீட்டு நகையைத் திருடி தன் கழுத்தை அலங்கரித்துக் கொள்ள நினைப்பது போன்றது இந்தியே பெரும்பான்மைமொழி என்கிற வாதம்.

இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் இந்தி பேசாத, தாய்மொழி அடையாளம் கொண்ட தேசிய இனங்களையே பெரும்பான்மையாக கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மொழிவாரி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்தி என்பது மக்களின் முதன்மையான மொழியாக இல்லை.

இதில், 16 மாநிலங்களில் மிக மிக சொற்பமானவர்கள் மட்டுமே ஹிந்தியை பேசத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அப்படி பேசத்தெரிந்தவர்களிலும், ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மிக மிக மிக சொற்பமானவர்களே.

இந்திய அரசு அளித்திருக்கும் அறிக்கையின்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா - தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா,  மேகாலயா போன்ற மாநிலங்களில் சுமார் 3% பேர் மட்டுமே இந்தி பேசத் தெரிந்தவர்கள்.

இந்தி பேசப்படும் மாநிலங்கள் என்று கருதப்படுகிற பெரும்பான்மை மாநிலங்களிலேயே, இந்தி குறைந்த அளவே பேசப்படுகிறது. சுமார் 6 கோடி பேர் இருக்கும் குஜராத்தில் 42 லட்சம் பேரும், 5 கோடி பேர் வாழும் ஒடிசாவில் 12 லட்சம் பேரும் மட்டுமே ஹிந்தி பேசுகிறார்கள்.

ராஜஸ்தானில் உள்ள 7 கோடி பேரில், 2.5 கோடி பேர் ராஜஸ்தானியும், சுமார் 1.2 கோடி பேர் மார்வாரி, மேவாரி மொழிகளையும் பேசுகிறார்கள். ஆனால், இந்த ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி எல்லாவற்றையும் ஹிந்தி என்றே குறிப்பிடுகிறது இந்திய அரசு.

இப்படி குறிப்பிடுவதை நிறுத்தினாலே, இந்தி பெரும்பான்மை மொழி என்றவாதம் நொறுங்கிவிடும்.

இந்தி இந்தியாவின் முதன்மையான மொழி கிடையாது என்பது போல, தங்கள் தாய்மொழிக்கு அடுத்து விருப்ப மொழியாக தேர்ந்தெடுக்கும் இரண்டாவது மொழி இடத்திலும் இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி இல்லை.

தமிழ்நாடு, மேற்குவங்கம், ஒடிசா, குஜராத், திரிபுரா, மேகாலயா, நாகலாந்து, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் வாழும் சுமார் 60 கோடி மக்கள், தங்கள் தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்தையே தங்களது உடனடி தொடர்புமொழியாக வைத்திருக்கிறார்கள்.

பஞ்சாப், மகாராஷ்டிராத்தில் மட்டுமே தங்கள் தாய்மொழிக்கு அடுத்து இந்தியை அம்மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், சமீபமாக அந்த மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன.

உண்மை இப்படி இருக்க, உலகப்பெருமொழியான மெல்ல ஆங்கிலத்தையும் கைவிட்டு, இந்தி பேசாத பெரும்பான்மை இந்தியர்களை இந்தி கற்கச் சொல்வது, இந்தித் தாய்மொழி சிறுபான்மையினர் நலனுக்காக, தங்கள் தாய்மொழிகளை தாங்களே கொலை செய்ய வேண்டும் என தேசிய இனங்களை நிர்பந்திப்பது அப்பட்டமான பாசிசம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.