25/03/2021

திராவிடலு பகுதி - 5...

 


ஆம், வெள்ளையர் ஆண்ட இந்தியாவில் இந்து-இசுலாமிய பிரித்தாளும் கொள்கை வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் நன்றாகவே வேலை செய்தது.

இன்றும் அது மக்களின் மனதில் நன்கு வேறூன்றியுள்ளது.

இதை நீதியரசர் மார்க்கன்டேய கட்ச்சு கூட சமீபத்தில் இடித்துரைத்துள்ளார்.

ஆனால் தெற்கில் அது எடுபடவில்லை.

ஆங்கிலேயர் இதற்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குடைந்து கொண்டிருந்தனர்.

மிண்டோ-மார்லி மற்றும் மாண்டேகு-செம்சுபோர்டு சீர்திருத்தத்திற்குப் பிறகு அரசுவேலை பெறும் இந்தியர்களை உற்றுநோக்கத் தொடங்கினர்.

மற்ற எந்தப்பகுதியிலும் இல்லாத அளவு பிராமணர் அதுவும் தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்கம் அதிகமுள்ளதையும், அதை வேற்றுமொழியினர் பொறாமையுடன் பார்ப்பதையும், மற்ற ஆதிக்கவர்க்கத்தினர் அப்பதவிகளை அபகரிக்கத்துடிப்பதையும் அவதானித்தனர்.

போதாதா?  தயாரானது திட்டம் ஒருபக்கம் ஆரியர் வரலாறையும், அவர்கள் திராவிடர் (Dravid) என்று அழைத்தாக தமிழர் வரலாறையும் தேவைக்கு தகுந்தபடி திருத்தி ஆராய்ச்சியாளர்கள் மூலம் வெளியிட்டு 'திராவிடர்' என்கிற சொற்பதத்தை உருவாக்கி வைத்திருந்தனர்.

இதை அவர்கள் 1800களிலிருந்தே செய்து வந்திருந்தனர் (அங்கேதான் நிற்கிறான் வெள்ளைக்காரன்).

ஆனால் பிராமண ஆதிக்கம் தலைதூக்கிய பின் திராவிடப் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி அவர்கள் சூழ்ச்சி வேலைசெய்ய ஆரம்பித்தது.

எப்படி தெற்கைத் தவிர மற்ற இடங்களில் இப்பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தவே 'இந்து' என்கிற எப்போதும் இல்லாத வார்த்தையை உருவாக்கினார்களோ அது போலத்தான்.

ஆம்; 'இந்து' என்கிற வார்த்தை எந்த வேதத்திலும் கிடையாது.இந்து என்கிற வார்த்தையே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.

கேட்டால் இசுலாமிய நாடுகளில் இந்தியத் துணைக்கண்டத்தை அல்-ஹிந்த் (எண்களின் நாடு) என்று அழைக்கின்றனர் என்பர் அல்லது 'சிந்து' ஆற்றின் பெயரிலிருந்து வந்தது என்பர் அல்லது 'பாகியான்' (Fagian) குறிப்புகளில் 'இந்து சமுத்திரம்' எனும் சொல் கையாளப்பட்டது என்பர்.

எது எப்படியோ. ஆனால்,  இதுவரை உலகில் அமைந்த ஆட்சிகளை எல்லாம்விட மிகப்பெரிய நிலப்பரப்பை ஆண்ட ஆங்கிலேயர் அதைக் கட்டமைக்க கடைப்பிடித்த தாரகமந்திரம் 'பிரித்தாளுதல்'..

எந்த நாட்டில் காலடிவைத்தாலும் அங்குள்ள மக்களை இனத்தால், மதத்தால், நிறத்தால், சாதியால் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் பிரிவினையைப் பரப்பி..

அவர்களை அவர்களாலேயே அழித்து தமது ஆதிக்கத்தை நிறுவுவதில் கைதேர்ந்தவர்கள்.

அவர்கள் செய்த வினையின் விளைவுகள் பல நாடுகளில் இன்றும் மோதல்களை தோற்றுவித்துக்கொண்டே இருக்கின்றன.

'இந்து' பிறந்த கதைக்கும் 'திராவிடம்' பிறந்த கதைக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

ஆங்கிலேயர் எங்கு சென்றாலும் மக்களை பிரிக்க, ஒன்று ஏற்கனவே உள்ள பிரச்சனையை பெரிதாக்குவார்கள் அல்லது இல்லாத ஒன்றை உருவாக்குவார்கள்.

'இந்து-இசுலாம்' முதல் வகை.

'திராவிடம்'  இரண்டாம் வகை.

ஏட்டளவில் 'திராவிடம்' எப்படி உருவாக்கப்பட்டது?

ஏட்டளவில் உருவாக்கப்பட்ட 'திராவிடம்' நடைமுறையில்  எப்படிப் பிறந்தது?

தமிழர் தமது வரலாற்றில் கூறியும் கேட்டுமிராத திராவிடம் எப்படி தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய ஆரம்பித்தது?

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.