28/03/2021

தேர்தல் நிதி பத்திரங்கள் - Electrol Bonds.. பாஜக மோடி அரசின் கொள்ளை...

 


முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று ,  தீர்ப்பு எப்படி இருக்கபோகிறதோ என்று காத்துக்கொண்டிருந்தேன் . ஆச்சரியம் ஏதுமில்லை, எதிர்பார்த்தபடியேதான் தீர்ப்பு வந்திருக்கிறது . அட எதிர்பார்த்தது நடந்துவிட்டதே என்பதை விட ஊகிப்பவை எல்லாம் நடக்கிறதே என்னும் வருத்தம் தான் எஞ்சுகிறது . 

உச்சநீதி மன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கும் வழக்கு Electoral Bonds எனப்படும் தேர்ந்தல்நிதி பத்திரங்கள் விற்பதற்கான  தற்கால தடை விதிக்க கோரி நடந்த வழக்கு . மூவர் அடங்கிய உச்சநீதி மன்ற பெஞ்ச் அப்படியெல்லாம்  தற்காலிக தடை விதிக்க முடியாது என்று வழக்கை முடித்து வைத்திருக்கிறது . 

டிமானி திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதற்கு அளிக்கப்பட்ட முக்கிய ஜஸ்டிபிகேஷன் அது கருப்பு பணத்தை ஒழிக்கும் என்பது . கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்த எல்லா பணமும் திரும்ப வந்துவிட்டது . கருப்பு பணம்  ஒழியவில்லை , பல சிறு குறு தொழில்கள் நொடிந்து மக்கள் இன்னலுற்றல்தான் மிச்சம் .இந்திய  பொருளாதாரம் என்ற சீரான வேகத்தின் போய்க்கொண்டிருக்கும் பேருந்தின் எல்லா டயர்களிலும் ஒரே சமயத்தில் காற்றை பிடுங்கிவிட்ட அற்புதமான திட்டம் .  

அப்படி கருப்பு பணத்துக்கு எதிராக கண்ணீர் மல்க போராடிய அரசு தான் பின்னர் அதே கருப்பு பணத்தை தேர்தல்நிதி வடிவில் மிக எளிதாக வெள்ளையாக்கும் சட்டங்களை கொண்டுவந்தது . என் நோக்கில் இந்த அரசு கொண்டு வந்ததிலேயே அப்பட்டமான நேர்மையற்ற திட்டம் என்றால் அது இதுதான் . 

கட்சிகள் நிறுவனங்கள் அல்ல வருமானத்தை உருவாக்க  ஆனால் கட்சி நடத்த , தேர்தலில் போட்டியிட பணம் அவசியம் . மரபாக இந்த செலவுகள் பொதுமக்கள் மற்றும்  நிறுவங்களிடம் வழங்கும் நிதியில் இருந்து நடக்கும் . இவ்வாறு வழங்கப்படும் நிதி வேறு சலுகைளை எதிர்பார்த்து வழங்கப்படக்கூடாது ( quid pro quo ) அல்லது ஒரு நபர் அல்லது நிறுவனம் அதீதமாக நிதி அளித்து தனக்கு சாதகமாக சட்டங்களை , அரசு ஒப்பந்தங்களை பெறுதல் போன்றவை நடக்கக்கூடாது .

இதை மனதில் கொண்டு இவ்வாறு அளிக்கும் நிதி குறித்த தகவல்களை பொதுவில் வெளியிட  வேண்டும் , நிதி அளிக்க  ஒரு உச்ச வரம்பு இருக்க வேண்டும் , அன்னிய நாட்டு நிறுவனங்களில் இருந்து நிதி பெறக்கூடாது போன்ற கெடுபிடிகள்  இருக்கும் . இந்தியா என்றில்லை வேறு பல ஜனநாயக நாடுகளிலும் இதை ஒட்டிய கறாரான வரைமுறைகள் உண்டு . நடைமுறையில் இதில் சில மீறல்கள் இருந்தாலும் சட்டரீதியாக அவை குற்றங்களே.

ஆஸி போன்ற சிறிய நாடுகளில் அரசு கஜானாவில் இருந்தே  இந்த தேர்தல் நிதி அளிக்கப்படும்   , போன தேர்தலின் பெற்ற வாக்குகளின் சதவிகிதத்தை பொறுத்து அந்த நிதி இருக்கும் . அதாவது ஒரு கட்சிக்கும் உண்மையிலேயே மக்கள் ஆதரவு இருக்கும் என்றால் அவர்களின் தேர்தல் நிதிக்கு அவர்கள் கார்ப்பரேட்களின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை வராது . அப்படி நிதி வாங்காமல் இருந்தால் அவர்கள் அளிக்கும் அழுத்தங்களுக்கும் இடம் இருக்காது . 

ஆனால் பிஜேபி அரசு கொண்டு வந்திருக்கும் இந்த நேர்தல்நிதி பத்திர திட்டம் இந்த மூன்று வரைமுறைகளையுமே அப்பட்டமாக மீறுகிறது . ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ வங்கிகளில் பணம் செலுத்தி இந்த பங்குகளை வாங்கி தாங்கள் விரும்பும் கட்சிக்கு நிதியாக அளிக்கலாம் . அந்த பங்கில் அளிப்பவர் பெயரோ அல்லது எந்த கட்சிக்கு அவர் அதை அளிக்கிறார் என்ற விபரமோ இருக்காது . வங்கியிடம் மட்டுமே அதை யார் வாங்கினார் எனும் தகவல் இருக்கும் ஆனால் அது ரகசியமாக காக்கப்படுமாம். 

மேலும் இதில் உச்ச வரம்பு என்றும் ஒன்று கிடையாது , யாரும் , எவ்வளவு கோடி வேண்டுமானாலும் நிதி அளிக்கலாம் . 

முன்னர் இது குறித்த உச்ச வரம்பு இருந்தது அதாவது நிறுவனங்கள் , கடந்த மூன்று வருடங்களில் அவர்கள் ஈட்டிய சராசரி  லாபத்தில் அதிகபட்சமாக  ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தையே ( 7 சதம் என்று நினைக்கிறேன் ) நிதியாக அளிக்க முடியும் .அப்படி அளிக்கப்படும் நிதி அந்த நிறுவனத்தில் வரவு செலவு அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் . Simple accountability and transparency rules.

இந்த கெடுபிடிகள் எதுவுமே இப்போது இல்லை . ஒருவர் இன்று ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதே நாள்   ஆயிரம் கோடிக்கு இந்த electoral bond களை வாங்கி எந்த கட்சிக்கும் அளிக்கலாம் . இந்தப் பணம் எங்குருந்து வந்தது என்ற கேள்வியை யாருமே கேட்க மாட்டார்கள் , இந்த நிதிக்கு வருமான வரியும் கிடையாது . கருப்பு பணத்தை இதைவிட எளிதாக வெள்ளையாக மாற்ற முடியுமா என்ன ? அதுவும் அரசே உருவாக்கி அளிக்கு சட்டங்களின் மூலம் ?

இந்த நிதியை நிறுவன வரவு செலவு அறிக்கையிலும் வெளிப்படையாக என்ன செலவு என்று குறிப்பிட வேண்டியதில்லை . இப்படி நிதி அளிக்கும் நிறுவனத்தை ஒரு shell நிறுவனமாக உருவாக்கி சிக்கலான multiple layer holding களை உருவாக்கிவிட்டால் பணம் எங்கிருந்து  வருகிறது என்பதை கிட்டத்தட்ட கண்டுபிடிக்கவே முடியாது. 

இறுதியாக தேர்தல்நிதி பங்குகள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களும் கூட நிதி அளிக்கலாம் என்ற வசதியை உருவாக்கியிருக்கிறது . வெளிநாட்டு நிறுவனங்கள் ஏன் இந்திய தேர்தலுக்கு நிதி அளிக்கவேண்டும் ? வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் இந்தியா குறித்து ஒரு டிவீட் போட்டாலே பதறுகிறோம் ? வெளிநாட்டில் இருந்து நிதி வருகிறது என்பதால் அதை முடக்கி பல NGO க்கள் செயல்படவே முடியாமல் செய்து விட்டோம் . அப்படியாப்பட்ட தேசபக்தர்கள் ஏன் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதிபெற வேண்டும் ?

இந்த கேள்விகளை RBI மற்றும் தேர்த ஆணையமுமே எழுப்பியுள்ளன . இந்த நிதி வருகையில் சுத்தமாக transparency யே இல்லை என்று . மேலும் இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் திரு.வேணுகோபால் "தேர்தல்நிதி எங்கிருந்து வருகிறது என்று வாக்காளர்கள் ஏன் கவலைப்பட வேண்டும் " என்று ஒரே போடு போட்டிருக்கிறார் . 

இதை ஏதோ பிஜேபிக்கு மட்டுமே உவப்பான விஷயம் என்று கருதிவிடக்கூடாது , எந்த கட்சிக்குமே இதில் பெரிய ஆட்சேபம் இருக்காது . நாளை வேறொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது போன்ற ஒரு வசதியான சட்டத்தை மாற்ற விரும்பாது . இது அடிப்படையில் தேர்தலையே வியாபாரமாக்கும் ,ஊழலாக்கும் . இந்த தடை உத்தரவை கோரிய வழக்கில் இணைந்த ஒரே அரசியல் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான் . 

தேர்தல் செலவுக்கு நிதி வேண்டும் , நிதி வழங்குவதும் ஒரு அரசியல் செயல்பாடுதான் ஆனால் அதற்கு வரைமுறைகள் வேண்டும் , யார் வழங்குகிறார்கள் என்ற பொதுவில் தெரியவேண்டும்  , யாருக்கு வழங்கப்படுகிறது என்பதும் . 

SBI வங்கிதான் இந்த பத்திரங்களை விற்பனை செய்யப்போகிறது . இதுவரை 6000 கோடிக்கு மேல் மதிப்புள்ள  பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 1 அடுத்த கட்ட விற்பனை ஆர்ம்பிக்க போகிறது  மேலும் ஒரு ஆயிரம் கோடியாவது தேறும் என்று நினைக்கிறேன்..

Electoral Bonds...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.