19/04/2021

எலும்புச் சிதைவைத் தடுக்கும் மஞ்சள்...

 


நமது பாரம்பரியமான உணவுகளிலும், அழகுசாதனப் பொருட்களிலும் மருத்துவக்குணம் வாய்ந்த பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

அவற்றின் சிறப்பை, மேலைநாட்டினர் அவ்வப்போது செய்யும் ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன.

புதிய கண்டுபிடிப்பாக, மஞ்சள் கிழங்கானது ஆஸ்டியோபோரசிஸை (எலும்புச் சிதைவு) தடுக்கும் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழத்தின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஜேனட் பங்க், மஞ்சளின் மருத்துவகுணங்களைத் தான் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, எலும்புச் சிதைவு நோய்க்கு மஞ்சள், அணை போடும் என்று ஜேனட் தெரிவித்திருக்கிறார்.

மாதவிலக்கு நின்ற பெண்களை அதிகமாகப் பாதிப்பதாக 'ஆஸ்டியோபோரசிஸ்' உள்ளது.

இஞ்சி வகையைச் சேர்ந்த தாவரமான மஞ்சள், இந்தியச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டு காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல்வேறு வகையான உடல்நலக் குறைவுகள், வயிற்று வலி, மூட்டு வீக்கம் போன்றவற்றுக்கு மஞ்சள் கைகண்ட மருந்தாகக் கருதப்படுகிறது.

வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மஞ்சளானது உணவு வகைகளில் ஒரு நறுமணப் பொருளாக அதிகளவில் சேர்க்கப்படுகிறது. எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கிறது.

உடலியல் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் 'எண்டோக்ரைன் சுரப்பி' நிபுணரான ஜேனட், மஞ்சள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார்.

ஆய்வுக்கு என்றே பதப்படுத்தப்பட்ட மஞ்சளை கவனமாக, நுணுக்கமாக ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்போது, எலும்புகளின் சிதைவைத் தடுப்பதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பாதிப்பை மஞ்சள் தடுக்கிறது என்று ஜேனட் கண்டறிந்தார். 'மெனோபாஸ்' ஆன பெண்களுக்கும் எலும்புச் சிதைவையும், எலும்பு இழப்பையும் மஞ்சள் கட்டுப்படுத்துகிறது என்று ஜேனட் பங்க் உறுதியாகக் கூறுகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.