23/10/2021

சித்தராவது எப்படி - 30...


குண்டலினி சக்தி பயணம் - பாகம் ஆறு...

விழிப்பு நிலையின் விரிவு விளக்கம் சுவாச ஒழுங்கிலே பெற்ற ஆற்றலை முறை படுத்துவதின் மூலம் பிடரி ஆதாரத்தில் ஆசைகளின் ஏக்கங்களின் தாக்கங்களை தணித்த அல்லது நீக்கிய நிலையில் மேலும் அந்த ஆற்றலை தலையின் உச்சி வழியாக புருவமத்தியை அடையும் போது என்ன பிரமாண்டமான மாற்றங்கள் வருகின்றன என்பதை கவனிப்போம்..

சிவனாரின் மூன்றாவது கண்ணாக கருதப்படும் இந்த புருவ மத்தி ஆதாரம் அக்னியால் ஆனது..

முதலில் விழிப்பை பற்றி சற்று ஆழமாகப் பார்ப்போம்..

புத்தி என்பது தோன்றா நிலையாகிய பேரண்ட பேரறிவிலிருந்து உதிப்பது..

மனமோ தோன்றும் நிலையாகிய தேகத்தில் இருப்பது..

புத்தி காற்றின் அம்சமாகிய 'வ' என்ற பூதம்.. மனம் நெருப்பின் அம்சமாகிய 'சி' என்ற பூதம்...

இந்த புத்தியும் அறிவும் சேர்ந்த நிலைதான் விழிப்பு நிலையான சிவ நிலை..

ஆதாவது 'சி' யும் 'வ' வும் சேர்ந்த நிலை..

இந்த சிவநிலையான விழிப்பு நிலையில் மட்டுமே ஆற்றலும் ஆக்கமும் ஒருங்கே இணைந்து சீர் நிலைக்கு அதாவது சீரான முறையான பழுது இல்லாத நிலைக்கு எதையும் அழைத்துச் செல்லும்..

வ என்ற காற்று பூதம் அறிவையும், ஆற்றலையும் வழிகாட்டும் அக குருவான ஒரு இயக்கசக்தி.. சி என்பது செயல் பட பயன் படும், மனம் என்ற ஒரு இயங்கும் சக்தி..

இயக்கும் ஒன்றும் இயங்கும் ஒன்றும் இணைந்தால் தான் எது ஒன்று செயல் படும்.. இயக்குவது இயங்க முடியாது... இயங்குவது இயக்க முடியாது..

இது தான் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்.. 'ச்' வும் 'வ்' வும் இணைந்தால் மட்டுமே எல்லாம் சீர் ஆகும்..

சிவ சிவ என்றிட தீவினை மாளும் என்றார் திருமூலர்..

புத்தியும் மனமும் இணைந்தால் மட்டுமே சீர் கெட்ட செயல்கள் தொலையும், அதாவது தீவினை மாளும் என்றார். பின்னர் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் என்றார் திருமூலர்..

ஆம் புத்தியும் மனமும் இணையும் போது நம் உயிரும் சீர் பட தொடங்கி தேவர் நிலைக்கு உயர்த்தபடுவர் என்றார்..

சரி.. இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது எதுவென்றால், புத்தியாகிய விழிப்பு நிலை தான்.. மனிதனுக்கு இயல்பாய் இருப்பது மனம்.. பெற வேண்டியது புத்திதான்.. அதனால் தான் புத்தி முக்கியமாயிற்று...

அந்த விழிப்புநிலை இல்லையேல் நெருக்கடி நிறைந்த சாலையில் சில அடி தூரம் கூட வாகனத்தை ஓட்டி செல்ல முடியாது...

புத்தியின் முக்கியத்துவத்தை கருதியே வாசி யோகப் பயிற்சி முக்கியமாக விழிப்பு நிலையை பெருக்கக் கூடிய முறையில் வடிவமைக்கப் பட்டது...

புத்தி பெருக்கத்தில் உணர்வும் பெருகி உணர்வின் கூர்மையால் எதையும் முன் கூட்டியே அறியும் திறமையால் எந்த பிரச்சனையும் முளையிலே கிள்ளி எறியக் கூடிய அறிவும் பெறுகிறோம்..

நுண் உணர்வால் நுண் அறிவு.. நுண் அறிவால் பிரச்சனையும் நுட்பமாக இருக்கும் போதே எளிதாக அதற்கு தீர்வு காணப் படுவதால் பிரச்சனையே இல்லாதது போல் தோற்றம் ஏற்படுகிறது..

எந்த செயலோடும் விழிப்பு நிலையும் தொடரவில்லையென்றால் அந்த செயல் நிலைக்காது..

தெய்வ தரிசனம் கண்ட பக்தர்கள், கடவுளை கண்டேன் கண்டேன் என்று புலம்புவார்களே தவிர, கண்டு கொண்டே இருக்கிறேன் என்று ஒருவரும் சொல்வார் இல்லை..

இதற்கு காரணம் சிவ கலப்பில் இல்லாததே காரணம்..

விழிப்பு நிலையை தொலைத்து விட்டதாலும் அதை தக்க வைக்க முடியாததாலும், இறை தரிசனமும் இழந்து விடுகிறார்கள்..

சொர்க்கத்தையும் பெற்று இழந்து விடுகிறார்கள்..

பேர் ஆற்றலையும் பெற்று பின் இழந்து மரணம் அடைந்து தானே போய் விட்டார்கள்..

விழிப்பு நிலை இல்லை என்றால் சித்தர் நிலையையும் இழந்துதான் போய் ஆக வேண்டும்...

விழிப்பு நிலை தொலைந்தால் சிவகலப்பும் பிரிந்து உடைந்து விடும்.. பின் சவம் தான்.. அதாவது அநித்தியம் தான்...

இப்படியான உயிருக்கு நாடியாக திகழும் விழிப்பு நிலை எப்படி சுழிமுனையில் மிகுந்த பெருக்கம் அடைந்து உயிர் ஆற்றல் விரிவடைகிறது என்பதை வரும் பகுதியில் பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.