28/10/2021

சித்தராவது எப்படி - 36...

 


குண்டலினி சக்தி பயணம்--- பாகம் பணிரெண்டு...

விழிப்பும் உணர்வும் - எண்ணமும் மறைப்பும்...

எங்கெல்லாம் விழிப்பு நிலை உள்ளதோ, அங்கெல்லாம் உணர்வு இருக்கும்.. விழிப்பிலேயேயும் உணர்விலேயேயும் நம் இருப்பு தன்மை உள்ளது.. அந்த இரண்டில் நாம் நாமாக உள்ளோம்.

எண்ணத்தில் நாம் பிறராய் உள்ளோம் அல்லது மற்றவர்களாய் உள்ளோம்.. அதில் இருப்பு தன்மைக்கு மறைப்பு ஏற்பட்டு தன்னில் தானாய் இருக்கும் நிலை மறைக்கப் பட்டு நாம் எதை எண்ணுகிறோமோ அதுவாய் மாறி விடுகிறோம்..

கோபம் காமம் பொறாமை வெகுளி போன்ற குணங்களில் நம்மை இழந்து விட்டு நாம் எண்ணுகின்ற வடிவங்களாய் நமது ஆற்றல் அனைத்தும், அந்த வடிவங்களாய் மாறத் துடிக்கிறது..

அந்த வடிவத்தை பற்றிய எண்ணங்கள் தூண்டக்கூடிய சூழ்நிலை உருவாகும் போது எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்து, அந்த வடிவமாய் மாற துடிகின்றது..

அப்படி மாற நினைகின்ற போது அந்த வடிவத்தின் பஞ்ச பூதங்களில் இணைய முடியாமல், மனம் என்ற ஒரு பூதம் மட்டும் இணைய துடித்து அதுவும் தோற்று போய் விடுகிறது..

மனம் தன் மற்ற நான்கு பூதங்களை விட்டு விலகி நிற்பதால், இங்கா அங்கா என்ற குழப்பத்தில் முடிவில் தோல்வியில் இங்கு என சொல்லப் படும் தன்னிலையில் மீண்டும் சேரவேண்டிய நிலைக்கு வருகிறது..

மீண்டும் எண்ணத்தால் வெளியே செல்ல துடித்து மீண்டும் மீண்டும் தோல்விகளை சந்தித்துக் கொண்டே இருக்கிறது..

மனம் வெளியே செல்லும் போது மற்ற நான்கு பூதங்களும் மனதை தேடி செல்லுவதால் அவைகளும் செயல் இழந்து போகின்றன..

அதனால் தான் கோபக்காரனுக்கு புத்தி மட்டு அறிவு மட்டு என்கின்றனர்.. மட்டு என்றால் செயல் இழந்த தன்மையை குறிக்கிறது....

எண்ணத்தின் தன்மை இப்படி இருக்க உணர்வு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...

மிகவும் அரிய வகை மாம்பழம் ஒன்றை சுவைக்கத் தொடங்கும் போது, அதனை இரு வகையில் சுவைக்கின்றோம்..

ஒன்று எண்ணத்தால் மற்றது உணர்வால்.. எண்ணத்தோடு சுவைக்கும் பொழுது, அந்த மாம்பழம் எந்த வகையை சார்ந்தது?.

இது போன்ற சுவையோடு கூடியது மாற்று வகை மாம்பழம் வேறு எதாவது உண்டா?

இனிமேல் இது எங்கு கிடைக்கும்? எப்பொழுதெல்லாம் கிடைக்கும்.?. கிடைக்காத பட்சத்தில் நாம் என்ன செய்வது ? இதன் விலை என்னவோ ? இது கிடைக்கும் பருவ காலம் என்ன ? நம் இடத்தில் அந்த மரம் வைத்தால் அது வளருமா?

அதை மற்றவர்களுக்கு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், நமக்கென்று தனிபட்ட முறையில் கிடைக்க என்ன வழி இருக்கிறது?

இது போன்ற ஆயிரம் கேள்விகளுக்கு நடுவே நாம் அதனை சுவைக்கும் போது, நம் மனம் சதா மாம்பழ சுவையை விட்டு விலகி விலகி, ஏனைய நான்கு பூதங்களும் அந்த மாம்பழ சுவையோடு இணைய விடாமலும் செய்து விடுகிறது..

இந்த நிலையில் மாம்பழ சுவையின் அனுபவம் நூற்றில் ஒரு பங்கு கூட நாம் அனுபவிப்பதில்லை..

மீண்டும் அதனை அனுபவிக்க துடிகின்ற போது அது கிடைக்காத பட்சத்தில் அது நிறை வேறாத ஆசைகளாய் சித்தத்தில் பதிந்து விடுகிறது..

அதுவே எண்ண ஆதிக்கமாய் நம்மில் நிறைந்து, மனதை சதாகாலமும் வெளியே ஈர்க்கப் படுகிறது..

மற்ற பூதங்களும் மனதை தேடும் பணியிலே இருந்து தனக்குரிய வேலைகள் செய்ய முடியாமல் போய் விடுகிறது.. இப்படி தான் வாழ்வு வீணாகிறது..

மிக பெரிய சத்தியம், உண்மை என்ன வென்றால் பஞ்சபூதங்களும் ஒருங்கிணைந்த நிலையே, இருப்பு தன்மை..

அதாவது மனம் தன் இச்சைக்கு எதுவும் செய்யாமல் மற்ற பூதங்களோடு இணைந்து இருக்கும் போது, மனம் எண்ண ஆதிக்கமற்ற நிலையில் இருக்கிறது...

மனதின் வெளி தேடுதல் நிற்கிறது.. எப்பொழுது எல்லாம் மன தேடல் இல்லையோ அப்பொழுதெல்லாம் இருப்பு தன்மை உள்ளே வெளிபடுகிறது..

இருப்பு தன்மையில் மட்டுமே உள்ளதை உள்ளவாறு அறியும் விழிப்பு நிலை உருவாகுகிறது..

சரி இப்போது உணர்வால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்..

உணர்வோடு இருக்கும் போது பஞ்ச பூதங்களும் அனைத்தும் செயல் படுகின்றன.. அந்த பஞ்சபூத கூட்டில் மனம் வெளியே செல்லாமல் மற்ற பூதங்கங்களோடு இணைந்து இருப்பதால் தன்னில் தானாய் இருக்கும் இருப்பு தன்மையில் விழிப்பு நிலை பெருக்கம் அடைகிறது..

அதே மாம்பழத்தின் சுவையின் உணர்வில் மனம் லயித்து இருக்கும் போது மனம் எழுப்பும் கேள்விகள் காணாமல் போய் விடுகிறது..

புத்தி அதன் சுவையை பூரணமாக எடுத்துக் கொள்ள அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.. ஆகாய அறிவு அதை நீங்காத அனுபவமாக வைத்துக் கொள்ளமுடியும்..

சித்தமும் சுவையை பூரணமாக நினைவில் வைத்துக்கொள்வதால், மீண்டும் அதே அனுபவத்திற்காக நிறைவேறாத ஏக்கங்களாக வைத்துக் கொள்ள அவசியம் இல்லை...

இதனால் தேகத்தில் தேக முழுமைக்கும் சீரான சுவையின் ஊடுறுவல் நிகழ்கிறது.. ஆக அந்த பஞ்ச பூத கூட்டில் விழிப்பு நிலை பெருக்கம் அடைவதால் எல்லாமே உள்ளது உள்ளவாறு விளங்குகிறது...

இப்பொழுது மிக முக்கியமான கட்டத்திற்கு வருகிறோம்.. சுவாச ஒழுங்கை மனதால் பண்ணலாம் அல்லது உணர்வால் செய்யலாம்..

சுவாசமே விழிப்பு நிலையால் நடந்தாலும் மனம் அதை ஒழுங்கின்மை ஆக்கி கொண்டே இருப்பதால் பலர் சுவாச ஒழுங்கு பயிற்சியினை மனதாலே செய்து செய்து மிக குறைந்த பலனையே பெறுகின்றனர்..

உணர்வாலே பயின்று விழிப்பு நிலை பெருக்குவதில்லை... சிலருக்கு மனதாலே செய்து வருவதால் சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள்..

உணர்வால் எப்படி செய்வது ? சுவாச ஒழுங்கின் சமயம், காற்றின் ஓட்டத்தை நாசிகளிலும் தொண்டை குழாயிலும். மார்பு விரிவடைதலிலும் உள்ள உணர்வோடு இணைந்து சுவாசிக்க வேண்டும்..

4 வினாடி கால அளவில் உணர்வோடு செய்யும் போது ஏற்படும் விழிப்பு நிலை, அந்த கால அளவை தானே சரியாக கவனித்துக் கொள்ளும்..

மிக முக்கியமானது உணர்வோடு செய்வதில் அக்கரை அதிகம் எடுத்துக் கொண்டால் மற்றவை நல்லவைகளாக பின் தொடரும்..

இதனை உணர்வோடு பயிலும் போது ஏற்படும் மிக பெரிய வித்தியாசத்தை காணலாம்..

மேலே சொன்னது போல் உணர்வோடு சுவாச ஒழுங்கு பயிலுங்கள்.. ஏற்படும் மிகுந்த வித்தியாச அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.