06/04/2017

மதங்களும் இறைவனும் - 2...



முக்கியச் செய்திகள்:

இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறினார் அம்பேத்கர்…

வடநாட்டில் சீக்கியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே கலவரம்…

என்னடா முக்கியச் செய்திகள் அப்படின்னு சொல்லிட்டு அரதப் பழசான செய்தியைச் சொல்றானேன்னு பார்க்காதீங்க.

அந்த செய்திகளில் ஒரு விசயம் இருக்கின்றது…

கடந்த பதிவில் கிருத்துவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களைத் தவிர மற்ற மதத்தினைச் சேர்ந்தவர்களை இந்துக்கள் என்று எப்படி அழைக்கத் தொடங்கினார்கள் என்றுப் பார்த்தோம்.

ஆனால் இப்பொழுது மீண்டும் முதலில் கொடுத்து இருக்கும் செய்திகளை படித்துப் பாருங்களேன்.

அந்தச் செய்திகளின்படி,

இந்து மதம் வேறு புத்த மதம் வேறு…
இந்து மதம் வேறு சீக்கிய மதம் வேறு…
இந்து மதம் வேறு சமண மதம் வேறு…

அப்படி என்றால் இந்து மதம் என்றால் என்ன என்றக் கேள்வி எழுகின்றது.
அக்கேள்விக்கான விடை…

இந்து மதம் என்பது சைவம் மற்றும் வைணவம் ஆகிய இரு மதங்களின் தொகுப்பே ஆகும்.

இந்துக்கள் என்பவர்கள் சைவம் மற்றும் வைணவம் ஆகிய மதங்களை பின்பற்றியவர்களே ஆவார்கள்.

சைவம் மற்றும் வைணவம் பற்றி அறியாத நண்பர்களுக்கு… இதோ தசாவதாரத்துல (அதாங்க கமல் படம்) இருந்து ஒருக் காட்சி…

நெப்போலியன் (பாண்டிய மன்னன்) : ஓம் நமச்சிவாய என்று சொல்லிவிடு நம்பி… உனக்கு உயிர் பிச்சை அளிக்கின்றேன். (இவரு சைவம்).

கமல் (இவரு வைணவத் துறவி) : ஓம்….. நமோ நாராயணா … (இவரு வைணவம்).

பொதுவாக சொல்ல வேண்டும் என்றால்,
சிவனை வணங்குபவர்கள் சைவர்கள்…
திருமாலை வணங்குபவர்கள் வைணவர்கள்…

இப்பொழுது நாம் இந்து மதம் என்றால் என்ன என்று அறிந்துக் கொண்டோம்…

இப்பொழுது இந்து மதம், அதாவது சைவம் மற்றும் வைணவ மதங்கள் எங்கே உருவாகியன என்பதினைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னாடி நீங்கள் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்… இந்து மதம் எங்கே ஆரம்பம் ஆகி இருக்கக்கூடும் என்று…

உங்கள் மனதில் இமயமலை (வட நாடு) என்ற எண்ணம் வந்ததா?

ஏன் எனில் கயிலாயம், அதாங்க சிவன் இருக்குறதா சொல்றாங்களே அந்த இடம், இமயமலையில் இருக்கின்றது. சிவனின் தலையில் இருந்து படரும் கங்கையும் அங்கேத் தான் இருக்கின்றது… வேதங்கள் என்று சொல்பவைகளும் இமய மலையில் உள்ள மாமுனிகளால் தான் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்… எனவே வட இந்தியாவில் உள்ள இமயமலையில் தான் இந்த மதங்கள் தோன்றி இருக்க வேண்டும்.. என்றக் காரணங்களும் தோன்றியனவா
நல்லது…

ஏன் எனில் அவற்றைத் தான் நாம் படித்து இருக்கின்றோம். அவற்றைத் தான் நமக்கு கற்பித்தும் இருக்கின்றார்கள்.

இப்பொழுது ஒருக் கேள்வி…

சைவம் மற்றும் வைணவ மதங்கள் வட நாட்டினில் தோற்றம் பெற்று இருந்தன என்றால், அம்மதங்களின் தலைமைக் கோவில்கள் வடநாட்டில் அல்லவா இருக்க வேண்டும். மாறாக அவ்விரு மதங்களுக்குரிய தலைமைக் கோவில்கள் ஏன் இந்தியாவில் வேறு எங்குமின்றி தமிழகத்தில் இருக்கின்றன?

சைவத்தின் தலைமைக் கோவில்  : சிதம்பரம் - தமிழகத்திலேயே இருக்கின்றது.

வைணவத்தின் தலைமைக் கோவில் : திருவரங்கம் - இதுவும் தமிழகத்திலேயே இருக்கின்றது.

தலைமைக் கோவில்கள் மட்டும் தமிழகத்தில் அமைந்ததோடு நிற்கவில்லை…

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட சிவன் கோவில்கள் ஏறத்தாழ 280 இதில் 235 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..

ஆகம முறைப்படி தொன்மை இந்தியாவில் கட்டப்பட்ட வைணவக் கோவில்கள் ஏறத்தாழ 108 இதில் 96 கோவில்கள் தமிழகத்தில் இருக்கின்றன..

மேலும், சைவம் வளர்த்த நாயன்மார்கள் 63 பேர். அனைவரும் தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள்.

வைணவம் வளர்த்த ஆழ்வார்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் கூட தமிழ் நாட்டினைச் சார்ந்தவர்கள் தான்.

சைவ வைணவ இலக்கியங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்கின்றன…

ஏங்க சமசுகிருதத்தினால் வட நாட்டினில் உருவாகியது என்று இன்று சொல்லப்படுகிற மதங்களுக்கு,
தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் இவ்வளவு சிறப்பு ஏங்க?

சமசுகிருதம் தான் கடவுளின் மொழி என்றால் நியாயப்படி இந்த மதங்கள் எல்லாம் சமசுகிருதம் பேசப்பட்ட இடத்தில சமசுகிருதத்தை பேசியவர்களால் சமசுகிருததால் தானே உருவாக்கப் பட்டு இருக்க வேண்டும்?

ஆனால் ஏன் இந்த மதங்கள் தமிழ் மண்ணில் தோன்றின?

கடவுள் இல்லை என்று சொல்லிய மதங்கள் ஆன பௌத்தமும் சமணமும் வட நாட்டினில் தோன்றிய பொழுது, கடவுள் உண்டு என்றுக் கூறிய இந்த மதங்கள் ஏன் வட நாட்டினில் தோன்றாமல் தமிழகத்தில் தோன்றி இருக்கின்றன?

பதில் கூற மாணிக்கவாசகர் ஐந்தாம் நூற்றாண்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன் கி.மு ஒன்றாம் நூற்றாண்டில் அசோக சக்ரவர்த்தியையும் பௌத்த மதத்தினையும் சற்றுப் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.