31/05/2017

ராஜபக்சே கொடுத்த பணத்தில்தான் ஈழம் பற்றி படம் எடுத்தார்கள் – நடிகர் ராஜ்கிரன்...


ராஜ்கிரண் : இந்தப் படம் புலம் பெயர்ந்து தமிழகம் வரும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிடத் தொழிலாளிக்கும் இடையில் மலரும் காதலைச் சொல்லும் படம் இது.

மனிதாபிமானம் என்பது அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று. இருந்தாக வேண்டிய ஒன்று. அதன் தேவையென்ன என்பதை இந்தப் படம் நிச்சயமாக உணர்த்தும்.

படத்தில் காதலும் உண்டு. ஆனால் அதன் பின்னணியில் அந்தப் பெண்ணுக்கு ஒரு சோக்க் கதையும் உண்டு. அதில்தான் ஈழத்தின் பிரச்சினை சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் எந்தவொரு அரசியலும் இல்லை. அரசியல் சார்பான கருத்துக்களும் இல்லை. ஆனால் அதையும் தாண்டி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய மனிதாபிமானத்தைச் சொல்கிறது.

ஈழத் தமிழர் விடுதலை போராட்டம் பற்றிய உண்மையான படங்கள் எதுவும் தமிழில் இதுவரை வந்ததில்லை.

சமீபத்தில் ரிலீஸான ஈழம் தொடர்பானது என்று சொல்லப்பட்ட இரண்டு தமிழ்த் திரைப்படங்களும் சிங்களச் சார்புடன், ராஜபக்சே கொடுத்த பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள்தான்.

அவைகள், ஈழத் தமிழர் போராட்டத்தையும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்திய படங்கள்தானே தவிர, அவை ஈழத் தமிழர் பற்றிய உண்மையான படங்களே அல்ல.

இங்கேயுள்ள அகதி மக்கள் படும் கஷ்டத்தை அரசியல்வாதிகளும், அதிகாரவர்க்கமும் உணரவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பர்மா போன்ற நாடுகளின் அகதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் இந்திய மக்களைப் போன்ற வசதி, வாய்ப்புகளை வழங்கியிருக்கும் இந்திய ஏகாதிபத்திய அரசு, ஈழத் தமிழ் அகதி மக்களுக்கு மட்டும் அந்த சம உரிமையை வழங்க மறுத்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மறுவாழ்வு திட்டத்தில் இந்திய அரசு பல்லாண்டு காலமாக கையொப்பமிட மறுத்து வருகிறது. அதில் கையெழுத்திட்டால் ஈழத்து அகதிகளுக்கு முறையான வசதி, வாய்ப்புகளை செய்து தர வேண்டுமே என்று மத்திய அரசு அஞ்சுகிறது.

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கே படம் எடுக்க முடியாது. காரணம் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையும், அதை முழு மூச்சாகப் பின்பற்றும் திரைப்பட தணிக்கைக் குழுவும் அதை அனுமதிக்காது.

எனவேதான் இயக்குநர் சத்யசிவா, இந்தப் படத்தை ஒரு காதல் கதையாக எடுத்திருக்கிறார். இதனால்தான் படத்திற்கு  ஒரு வெட்டுகூட சொல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது தணிக்கைக் குழு.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட துயரங்களை நினைவு கூறவும், ஈழத் தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ளவும், மனித நேயத்தை புதுப்பித்துக் கொள்ளவும் இந்தப் படம் நிச்சயம் துணை செய்யும்.. என்றார் ராஜ்கிரண்...

-29.04.2015.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.