21/07/2017


183 கிணறு... 1600 ஏக்கர் நிலம்... 25000 லிட்டர் தண்ணீர்... அவ்வளவுதான் எங்க தேவை  - ஓ.என்.ஜி.சி சொல்லும் அடடே கதை...

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலிடம் வெளிநாட்டவர் ஒருவர் ,'what is your culture' என்றார். அதற்கு படேல், "Our Culture Is Agriculture" என்று பதிலளித்தாராம். அந்த அளவிற்கு விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு இது. 1980 வரைக்கும்தான் அந்த விவசாயக் காலகட்டம். தமிழ்நாட்டில் டெல்டா பகுதிதான் முக்கியத்துவம் வாய்ந்தது. முப்போகம் விளைந்து மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப்பங்கு வகித்த அந்த நிலம்தான்,.. இப்போது இருபோகம், ஒருபோகம் என படிப்படியாக குறைந்து முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த விவசாயப் பேரழிவுக்குக் காரணம் ஓ.என்.ஜி.சி எனும் எமன் கால்பதித்ததுதான்  என்கின்றனர் டெல்டா வாசிகள். இதில் நெடுவாசல், கதிராமங்கலம் உள்ளிட்ட பல கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதனால் பல ஆண்டுகளாக வாய்திறக்காமல் இருந்து வந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் நேற்று (19.07.2017) பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அவர்கள் தரப்பில் திரும்பத் திரும்ப ஒப்பிக்கப்பட்ட தகவல் சுருக்கமாக குறும்படமாக காட்டப்பட்டது. அதில், "நாட்டின் வளர்ச்சிக்காக ஓ.என்.ஜி.சி பாடுபடுகிறது. தவறான தகவல் பிரசாரங்களாலும், வதந்திகளாலும் மக்கள் திசை திரும்ப வேண்டாம். நாட்டின் எரிசக்திக்காக எங்கள் நிறுவனம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறது. கடந்த 1957-ம் ஆண்டு முதல் 60 ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுதான் பிரச்னை தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் காவிரிப் படுகையில் மொத்தம் 700 கிணறுகளைத் தோண்டியுள்ளது. அதில் 183- கிணறுகள்தான் செயல்பாட்டில் உள்ளன. ஓ.என்.ஜி.சி தரப்பில் டெல்டாவில் 1600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. இது டெல்டாவின் மொத்தப் பரப்பில் 0.04 சதவிகிதம்தான். இந்த நிலங்களை மட்டும்தான் கையகப்படுத்தியுள்ளோம். இங்கு மீத்தேன், ஷேல்கேஸ் என எதுவும் எடுக்கப்படவில்லை. இப்போது கதிராமங்கலத்தில் நடந்த கசிவின்போது மக்கள் ஒத்துழைத்திருந்தால் அரைமணி நேரத்திற்குள் முடிந்திருக்கும். ஆனால் மக்கள் போராட்டம் என ஆரம்பித்ததால் நீண்ட நேரமாகிவிட்டது. அதன்பின்னர் 6.30 மணிக்குத்தான் ஆயில் கசிவு அடைக்கப்பட்டது" என்பதுதான்.

ஆனால், கள நிலவரமோ வேறுவிதமாக இருக்கிறது. மக்கள் கொதித்துக் காணப்படுகிறார்கள். குடிநீர் எண்ணெய் கலந்து மஞ்சள் நிறத்தில் வந்த வண்ணம் இருக்கிறது. டெல்டாவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்த ஓ.என்.ஜி.சி நிர்வாகம், குடும்பத்தில் உள்ள ஆட்களுக்கு வேலைத் தருகிறேன் என வாக்குறுதி கொடுத்ததாக சொல்கிறார்கள் அந்த நில உரிமையாளர்கள். ஆனால், இந்தச் சந்திப்பில் அந்தச் செய்தி தவறானது, அப்படி நாங்கள் எந்த வாக்குறுதிகளும் கொடுக்கவில்லை என மறுக்கப்பட்டது. இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 183 எண்ணெய்க் கிணறுகளையும் அமைக்க ஒரு கிணற்றுக்கு ஒரு நாளைக்கு 25,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கிணறு அமைக்கக் குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகும். ஒரு நாளைக்கு 183 கிணறுகளுக்கு 45,75,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். ஆனால், இதுவே 5 மாதங்களுக்குத் தண்ணீர் செலவு 68 கோடியே 62 லட்சத்து 50,000 லிட்டர் தண்ணீர் செலவாகியிருக்கும். இதுவே மொத்தமாகத் தோண்டிய 700 கிணறுகளுக்கும் என கணக்குப் போட்டால் 2 மில்லியன் 62 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகும் என்பதுதான் உண்மை. ஆனால் இதை ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் சாமர்த்தியமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் லிட்டர் எனப் பிரித்து சொல்கின்றனர். இதுதவிர ஓ.என்.ஜி.சியிடம் எந்த ஆய்வு குறித்தும் முழுமையான தகவல் இல்லை. அவர்களின் திட்டத்தில் முழுமையான ஒரு வடிவமும் இல்லை. மக்களுடன் கலந்துரையாடுவதாக சொல்கிறார்கள்... ஆனால் எந்தக் கிராமத்திலும் இவர்கள் முன்னெச்சரிக்கை கூட விடுவதில்லை. ஒவ்வோர் ஊரிலும் ஆளுக்கு இரண்டு காவலர்களைக் கொண்டு ஆயில் எடுக்கும் பணியை மேற்கொள்ள இங்கு அவசியம் இல்லை. மக்களிடையே சரியான விளக்கம் கொடுக்கவில்லை என்பதே நிஜம்... இதுதவிர 1995-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த அறிக்கையும் காண்பிக்கப்படவில்லை. 2008- முதலே சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை சமர்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது இன்றைய தலைமுறைக்கோ அல்லது அடுத்த தலைமுறைக்கோ பயன்படுவது அல்ல. இன்னும் நூறு வருடங்கள் கழித்து வரும் சந்ததிகளுக்கும் அது பயன்படுமாறு இருப்பதுதான் வளர்ச்சி. ஆனால் மத்திய அரசும், ஓ.என்.ஜி.சியும் எண்ணெய் எடுப்பதில் தீவிரம் காட்டி வருவது ஓ.என்.ஜி.சியின் பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.