26/07/2017

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: வந்தே மாதரம் பாடலை பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்த கூடாது...


திருக்குறளைப் போல தமிழகத்தில் வந்தே மாதரம் பாடலையும் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதேநேரத்தில் பாட விரும்பாதோரை கட்டாயப்படுத்தினால் அவர்களுக்கு நாட்டின் மீது வெறுப்பு அதிகரிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளில் வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என கேட்கப்பட்டது. இதற்கான கீ ஆன்சரில் சமஸ்கிருதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்ட நிலையில் கீ ஆன்சர் தவறாக இருந்ததால் தமக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை என கூறி வீரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருதப் பாடல் என புரியாத பதிலளித்தார்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என ஆதாரங்களை தாக்கல் செய்தனர். இதனை ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், வந்தே மாதரம் வங்க மொழியில்தான் எழுதப்பட்டது என ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களைத் தாக்கல் செய்த வழக்கறிஞர் சுஜாதாவை பாராட்டுகிறோம்.

ஏற்கனவே திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் பாட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனும் பள்ளிகளில் திருக்குறள் கட்டாயமாக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த வரிசையில் தேசபக்திப் பாடலான வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்வி நிறுவனங்களில் வாரம் ஒருமுறையும் அரசு, தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மாதம் ஒருமுறையும் கட்டாயம் பாட வேண்டும் என உத்தரவிடுகிறேன் என்றார்.

அதேநேரத்தில் வந்தே மாதரம் பாடலைப் பாட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது; அப்படி செய்வர்களிடம் உரிய விளக்கம் பெறலாம்; கட்டாயப்படுத்தினால் நாட்டின் மீதான வெறுப்புணர்வு அதிகரித்துவிடும் எனவும் நீதிபதி முரளிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.