26/07/2017

அதிரவைக்கும் புதிய தகவல்கள்: பெங்களூரு சிறையில் சசிகலா நடத்திய சட்டவிரோத சாம்ராஜ்யம்...


சசிகலா பெங்களூரு சிறையில் எந்தெந்த அதிகாரிகளை வளைத்துப் போட்டு எப்படியெல்லாம் சட்டவிரோத சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார் என்கிற அதிரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வந்ததை முன்னாள் டிஐஜி ரூபா அம்பலப்படுத்திய நிலையில் புதிய கடிதம் ஒன்றில் ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பெங்களூரு சிறையில் சசிகலா மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரி கங்காராம் படேரியா, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஜெயச்சந்திரா உள்ளிட்ட பலரும் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனராம்.

குறிப்பாக சிறை அதிகாரிகளுக்கும் சசிகலா குடும்பத்தினர் மற்றும் அதிமுகவினருக்கும் புரோக்கராக செயல்படுவது கர்நாடகா தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் கஜராஜ் மாகனூர்தானாம். இந்த கஜராஜ், சிறையில் பார்வையாளர்கள் பகுதிக்கான வாயிலின் பொறுப்பாளர்.

இவர்தான் அதிமுக தலைவர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், சசிகலாவை சந்திப்பதற்காக கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லக் கூடியவராம். அதுவும் சிறையில் பார்வையாளர்கள் நேரம் முடிவடைந்த பின்னரே இந்த சந்திப்புகள் நடைபெறுவது வழக்கமாம்.

சிறை கண்காணிப்பாளர் அறையை சசிகலா கட்சி அலுவலகம் போல பயன்படுத்தி சுமார் 2 மணிநேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இப்படி சசிகலாவை சந்திக்க வரும் விஐபிகள் பெயர்கள் ரெஜிஸ்டரில் இடம்பெறுவதும் இல்லையாம்.

தினகரன், விவேக், கர்நாடகா புகழேந்தி, வழக்கறிஞர் செந்தில் ஆகியோர் தினந்தோறும் இரவு 7 மணிக்கு பின்னர் சசிகலாவை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். அதிமுகவினர் நேராக கஜராஜை சந்திப்பர்.. அவர்தான் அதிமுக பிரமுகர்களை சசிகலாவிடம் அழைத்துச் செல்வார்.

மேலும் சசிகலாவின் சமையலறைக்கான காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களை இந்த கஜராஜ் சிறைக்குள்ளேயே ஒரு தனியறையில் வைத்து பராமரித்து வருவதும் வாடிக்கையாம். சசிகலாவின் சமையலறையில் பிரிட்ஜ் இருந்ததையும் ரூபா ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தார்.

கஜராஜ் மாகனூர் மூலமே சிறை அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாவும் அந்த கடிதம் கூறுகிறது. முன்னாள் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், மாகனூர் மறும் முன்னாள் உள்துறை அமைச்சரும் கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பரமேஸ்வரின் பிஏ பிரகாஷ் ஆகியோர் சசிகலா குடும்பத்திடம் லஞ்சப் பணம் பெற்றிருக்கின்றனராம். இவர்கள் மூலமே முன்னாள் சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக அந்த கடிதத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.