30/09/2017

ஒரு லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில் விடும் தேசம் இந்தியா...


உ.பியின் இரண்டாவது பெரிய நகரம், அரசியல் தலைநகரம் அலகாபாத். அந்த அலகாபாத்தில் மாநகர பேருந்துகள் எதுவும் கிடையாது. ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா, குதிரை வண்டிதான் மாநகர போக்குவரத்து சாதனங்கள்.

அலகாபாத் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் குபீர்னு ஒரு கெட்ட நாத்தம் அடிக்கும். அது குதிரை சாணி நாத்தம்.

இதுதான் உத்திரபிரதேசத்திற்குள் வந்துவிட்ட அறிகுறி.

அப்புறம் தார் ரோட்டு ஓரமாவும், எதாவது சுவர் இருந்தா அதெல்லாம் திட்டு திட்டா சிவப்பு சிவப்பா இருக்கும். அதெல்லாம் பான்பராக் வாயனுக வரைந்த கோலம்.

ஆங்கிலத்தில் சொல்லும் அட்ரசை புரிந்து கொள்ளக்கூடிய ஆட்டோ டிரைவர் உங்களுக்கு கிடைத்தால் அது உங்க முன்னோர் செய்த புண்ணியமாத்தான் இருக்கும்.

ஓரமா நின்னு எதையாவது நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கும்போது எதுவோ ஒன்னு உங்களை உரசிக்கிட்டு போவும். அதன் பெயர் குதிரை என அறிக.

உண்மையிலேயே நம்மை பொறுத்தவரை அது வேறவொரு உலகம்தான்.

நான் என் நண்பர்களோட தங்கியிருந்தது நகரின் முக்கியமான பகுதி. அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து 500 மீ தொலைவில்தான்.

அவ்ளோ லேசுல ஆட்டோ கிடைக்காது. அதனால ஒரு குதிரை வண்டி புடிச்சி அலகாபாத் பஸ் நிலையம் வந்தோம்.

மாநில அரசு பேருந்துகள் பெருசா இல்லை. தனியார் பேருந்துகள் அரசு அங்கீகாரம் பெற்ற பேருந்து சேவை என்ற பெயரில் ஸ்வராஜ் மஸ்தா நிறைய நிற்கும். அதெல்லாம் மீரட், வாரணாசி, ஆக்ரான்னு வெளியூருக்கு போகும் பேருந்துகள் ( வேன் மாதிரி).

அங்க போயி ஒரு டிராஃபிக் போலிஸ்கிட்ட 'லோக்கல் பஸ் எங்க நிக்கும்'னு கேட்டேன்.

'கியா'ன்னான்.

புரியலை போலருக்குனு நினைச்சி 'சிட்டி பஸ் எதுவும் இல்லையா?'னு கேட்டேன்.

சரி விளக்கமா சொல்லுவோம்னு நினைச்சி 'ஆனந்தபவன் போகனும் (நேரு , இந்திரா காந்தி பிறந்த வீடு) எந்த பஸ்சுன்னு கேட்டேன்.

' 5 கி.மீ தூரம் போக உனக்கு பஸ்சு கேக்குதா? இப்படியே இந்த ரோட்டு மேலயே முக்கா மணி நேரம் நடந்து போனா ஆனந்தபவன் வரும்'னு சொல்லிட்டு சிரிக்கிறான்.

கர்மம்புடிச்சவனுகளா உங்க ஊர்ல 5 கி.மீ தூரத்தைக்கூட நடந்துதான் போவீங்களாடான்னு நினைச்சி ஆட்டோ பிடிச்சோம் நேரு வீட்டுக்கு போக.

அப்பதான் தெரியும் அந்த ஊர்ல மெட்ரோ பஸ் எதுவும் இல்லை. உள்ளூருக்குள்ள பஸ்சில் போகும் பழக்கம் அந்த மக்களுக்கு இல்லைனு.

பெரும்பாலும் மக்கள் கால்நடையாதான் போறாங்க. காசு இருப்பவன் சைக்கிள் ரிக்க்ஷா, ஆட்டோ. இவ்ளோதான் அவுங்க போக்குவரத்து.

ஒரு மாநகரத்துக்கே இந்த நிலைமைனா கிராமப்புற பகுதிகளை நினைத்து பாருங்க.

இங்க நாம சிட்டி பஸ்,டவுன் பஸ், மின்சார ரயில், பறக்கும் ரயில்,மெட்ரோ ரயில் என அனைத்தையும் தாண்டி சின்ன சின்ன குக் கிராமங்கள்வரை மினி பஸ்சால் இணைத்து வைத்திருக்கிறோம்.

தற்போதைய தமிழகம் இருக்கும் இந்த கட்டமைப்புகளை எட்டிப்பிடிக்க இன்னும் 30 ஆண்டுகளாவது தேவைப்படும் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு.

ஒரு பக்கம் நகர பேருந்துகள் என்றாலே என்ன என தெரியாத மக்கள், இன்னொரு பக்கம் லட்சம் கோடி ரூபாயில் புல்லட் ரயில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.