25/10/2017

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் இந்த கடலையே நம்பி வாழும் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வை சூறையாட காத்திருக்கின்றது அதானியின் நண்பன் பாஜக மோடியின் கார்பரேட் அரசு...


வேளாண்மை எனப்படும் உணவு உற்பத்தி தொழிலுக்கு பிறகு அதிக அந்நிய செலாவணியை ஈட்டி தருவது மீன்பிடி தொழில். அதுவும் இந்த இந்து மா கடலின் மீன்களுக்கு உலக அளவில் அதிக சந்தை மதிப்பு உள்ளது. பல வளர்ந்த நாடுகளில் மீன்பிடி தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாக பல காப்பீடுகள் பெற்றவர்களாக மீனவர்கள் வாழ்கிறார்கள். கடல்வளம் என்பது மீன்பிடி தொழிலையும் தாண்டி அகண்டு நீண்டு உள்ளது அதனை சுரண்டுவதற்கு தடையாக இருப்பது பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் கடலை தாயாக பார்க்கும் மீனவ மக்கள் தான்.

நீலப்புரட்சி என்ற பெயரில் இந்த கடல் தாயை நம்பி வாழும் பல மீனவ குடும்பங்களை கடற்கரையை விட்டு அப்புறப்படுத்திவிட்டு கார்பரேட் நிறுவனங்கள் அன்னிய நாடுகளின் கப்பல்கள் அத்துமீறி மீன்பிடித்துவிட்டு செல்ல இங்கு வந்து நம் கடல் வளத்தை கபளிகரம் செய்ய இந்திய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது அதன் ஒரு முன்னோட்டமாக தான் சீன கப்பல்கள் இங்கு வந்து மீன்களை வாரி செல்வதும் நடக்கின்றது.

தமிழரின் வரலாற்று பகுதியான இந்து மா கடலில் சிங்களவர்கள் தமிழர் படகுகளை கைப்பற்றுவதும் மீன் வலைகளை அறுப்பதும் தொடர்ந்து நடந்து வந்தது. இப்போதோ இந்திய கடலோர காவல்படையே அதை தமிழர்களுக்கு செய்கின்றது. முழு தமிழர் விரோத அரசாக இந்திய அரசு மாறி நிற்கின்றது.

நிலத்தை உழுது வேளாண்மை செய்யும் உழவுத் தொழிலையும் மீத்தேன் போன்ற திட்டங்களால் அழித்துவிட்டு பாசனத்தையும் காவிரி ஆற்றை மறித்து தடுத்துவிட்டு நடுவர்மன்றத்தை அமைக்காமல் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்கிறது மத்திய அரசு.

மேலும் வேளாண்மையை மாநிலப் பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு மாற்றி கார்பரேட்களுக்கு வேளாண் துறையை தாரைவார்க்கும் அதிபயங்கர செயலை செய்திருக்கிறது, விதை சட்டம் போன்ற கொடுமையான சட்டங்களால் ஏழைகளிடம் இருந்து உழவு தொழிலை அழித்துவிடலாம் என செயல்படுகிறது.

கடல் வேளாண்மை என கருதப்படும் மீன்பிடி தொழிலையும் தமிழரிடம் இருந்து கைப்பற்றப்பார்க்கிறது. மத்திய அரசின் இந்த திட்டங்கள் அனைத்துமே தமிழ்நாடு அரசின் பொருளியல் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர்.

இதனை கடிந்து கண்டித்து எதிர்த்து தடை செய்ய வேண்டிய தமிழ்நாடு அரசோ தமிழர் உரிமைகளை விற்று ஊழலில் இருந்து பதவியை காப்பாற்ற பார்க்கிறது.

தமிழரின் தற்சார்பு அவயங்களான வேளாண்மையும் மீன்பிடி தொழிலும் பெருமுதலாளிகளுக்கும் அந்நிய நாடுகளுக்கும் கார்பரேட்களுக்கும் செல்வதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.

தமிழருக்கு என தமிழர் அரசு இருந்த காலத்தில், சோழர் ஆட்சி காலத்தில் இந்த தமிழக கடலோர கரைகளில் பல்லாயிரம் போர் கப்பல்கள் புலிக்கொடிகளுடன் நிறுத்தப்பட்டிறுந்தது. பாண்டியர் ஆட்சி காலத்தில் கப்பல்கள் கிழக்கே சாவகம் வரையிலும் மேற்கே ரோம் வரையிலும் நிறுத்தப்பட்டிருந்தது. சேரனின் கப்பல்கள் வில் அம்பு கொடிகளோடு மேற்கு கடற்கரையில் அரண் அமைத்து நின்றது. பிற்காலத்தில் ஓரிரு தசாப்த காலத்திற்கு முன்பு வரை நம் சமகாலத்தில் விடுதலை புலிகளின் கப்பற்படை இந்து மா கடலை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. நாம் எப்போதும் வல்லாதிக்கத்தை எதிர்க்கும் ஆளுமையுள்ள ஆண்மைமிக்க இனத்தின் மக்கள்.

வெல்லப்போவது மக்கள் விரோத அரசுகளின் நீலப்புரட்சியா?
தமிழர் முன்னெடுக்கும் மக்கள் புரட்சியா?

விடை தமிழர்களிடமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.