07/11/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி : அத்தியாயம் - 2... உண்மைகள் உறங்குவதில்லை - பகுதி 4...


உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிடப்படும் தீர்க்க தரிசனங்கள் யாவும் “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிட்ட 66 தீர்க்க தரிசனங்கள் எவ்வாறு ஆரம்பித்து நடக்கப் போகின்றன என்பதற்கான விளக்க குறிப்புகளே தற்போது உண்மைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் நாம் வெளியிடுகிறோம்.

இங்கு ஒரு முக்கிய குறிப்பை தர விரும்புகிறேன். அதாவது இங்கு வெளியிடப்படும் தீர்க்க தரிசனக் குறிப்புகள் யாவும் ஏற்கனவே நமது முன்னோர்கள், சித்தர்கள், ஞானிகள், மகான்கள், தீர்க்க தரிசிகள், வேதக்குறிப்புகள் போன்ற தொகுப்புகளிலிருந்தோ, சொல்லப்பட்ட தீர்க்கதரிசனக் குறிப்புகளிலிருந்தோ எடுத்து தரப்படும் செய்திகள் அல்ல. இவை யாவும் எமக்கு இறைஅருளால் வழங்கப்படும் குறிப்புகளே ஆகும். ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பமே.

இனி உண்மைகள் உறங்குவதில்லை என்ற தீர்க்க தரிசனப் பகுதியில் நாம் தெரிந்து கொள்ள இருப்பது 4-ம் தீர்க்க தரிசனப் பகுதியின் குறிப்புகள் ஆகும். அவைகளை பற்றி இங்கு விரிவாக காண்போம்.


4-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று முதலாவதாக இடம் பெறுவது கடையேழு வள்ளல்களில் தலைசிறந்த “வல்வில் ஓரி“ என்கிற மன்னன் ஆண்ட கொல்லி மலையில் ஒரு வியத்தகு அதிசய சம்பவம் தற்போது நடைபெற உள்ளதாகவும், வல்வில் ஓரியைப் பற்றி குறிப்புகள் இதன்வழியாக தமிழக மக்கள் மற்றுமின்றி உலக மக்களும் அறிந்து கொள்ளும் ஒரு வியப்பான செய்தியே இதுவாகும் என்று இந்த தீர்க்க தரிசனப் பகுதி எடுத்துக் கூறுகிறது.

அதாவது வல்வில்ஓரி என்கிற மன்னன் ஒரு சித்தன் என்பது எவருக்கும் தெரியாத ஒரு புதுச்செய்தி என்றும், அவன் ஆண்ட குறுநிலப் பகுதி கொல்லிமலை என்றாலும், அவனின் இருப்பிடம் ஒரு மகாதவம் பொருந்திய இருட்டு குகையாகும். அந்த குகை கொல்லிமலையில் அரபளிஸ்வர் சந்நதியின் தென் திசையில் உள்ள ஒரு சாய்வான மலைப் பகுதியில் உள்ளது என்றும், அந்த மன்னன் பகலில் அரசனாகவும் இரவில் சித்தனாகவும் வாழ்ந்து வந்தான் என்றும், அந்த இருட்டு குகைக்கும் அவன் வாழ்ந்த பகுதிக்கும் ஒரு இரகசிய குகை இருந்தது என்றும், இந்த மன்னன் இரவில் சித்தனாக சிவபக்தனாக வலம் வந்தவன் என்றும், வில்வித்தையில் தலைசிறந்தவன் என்றும் இந்த நான்காம் தீர்க்க தரிசனப் பகுதி தனது  செய்திக் குறிப்பை இங்கு பதிவு செய்கிறது.


வல்வில் ஓரி போகர் என்ற சித்தரை தனது குருவாக ஏற்று தவமியற்றியவன் என்பதும், போகர் அவருக்கு மச்சமுனி என்று பெயரிட்டு ஆசிர்வதித்து வாழ்ந்த கதை இதுவரை உலகம் அறியாத ஒன்றாகும் என்று தீர்க்க தரிசனக் குறிப்புகள் இங்கு குறிப்பை தருகின்றன.

இந்த மச்சமுனி என்கிற வல்வில்ஓரி மரணித்த கதை இதுவரை யாரும் அறியாத சரித்திரம் என்றும், புராணக் கதையாக இவரைப் பற்றி பல குறிப்புகள் இருப்பினும் அதற்க்கான சான்றுகள் ஏதுமில்லை என 4-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகிறது.


போகரின் இரண்டாம் பிரவேசம் தமிழகத்திற்குள் நடந்த சமயத்தில் சதுரகிரியில் போகர் அகத்திய முனிவரை சந்தித்து தனது இரசவாதக் கலையின் இரகசியங்களை எடுத்துக் கூறி அதற்கான அங்கீகாரம் சித்தர் சபையில் பெற விண்ணப்பம் செய்த போது, மச்சமுனி தனது குருவான போகரை அச்சமயத்தில் சந்திக்க எண்ணி சூட்சும சரீரத்தில் பயணம் செய்து சதுரகிரியை அடைகிறார். மச்சமுனியை ஆசிர்வதித்த போகர் உமது ஜீவன் முக்தி பெற்றது. இனி கொல்லிமலையில் மச்ச அவதாரம் கொண்டு அரபளீஸ்வரர் சந்நதி அருகே ஓடும் ஓடையில் வீற்றிருப்பாய் என்றும், சித்த புருஷர்கள் இனி உனது வழியில் அங்கு மச்ச உருவம் கொண்டு பல காலம் வாழ்ந்து வருவார்கள். கலிகாலம் முடிவடையும் சமயத்தில் நான் மீண்டும் கொல்லி மலை வந்து சித்தர்களின் மாநாட்டை ஒரு பௌர்ணமி அன்று துவக்கி நடத்தும் சமயத்தில் நீங்கள் அனைவரும் மச்ச அவதாரத்தை துறந்து தூய ஆத்மாக்களாக எழுந்து எம்மோடு இறைவனின் கட்டளையை ஏற்று பணி செய்வீர்கள். அப்பொழுது உலகமே வியக்கும் அதிசயமாக இங்கு நீ வாழ்ந்த அந்த இருட்டு குகை வெடித்து பிளந்து அதிலிருந்து ஒரு நவபாசான சிவலிங்கம் வெளிப்படும். இதனை உலக மக்கள் யாவரும் அறியும் சமயத்தில் உன்னுடைய ஜீவசமாதி அப்பொழுது பூமியிலிருந்து எழும். அங்கு கிடைக்கப் பெறும் குறிப்புகள் உன் வரலாற்றை சொல்லும். மன்னவன் ஆண்ட மலை கொல்லி மலை என்றும், சித்தன் ஆண்ட மலை மச்ச மலை இந்த சிவன் மலை என்று புதிய பெயர் இந்த  கொல்லி மலைக்கு கிடைக்கும் என்றும் இந்த 4-ம் தீர்க்க தரிசனம் மச்சமுனி எனும் சித்தரே “வல்வில்ஓரி“ என்ற இரகசியத்தை கூறுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இதனை ஏற்க மறுத்தாலும் வரும் காலம் அதற்கான காலமாக இருக்கும் என்று இந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இந்த 4-ம் தீர்க்க தரிசனப் பகுதியில் அடுத்ததாக “ஆகாயத்தில் ஒரு ஒளி“ என்ற நமது தீர்க்க தரிசனப் பகுதியில் வெளியிடப்பட்ட 28-ம் தீர்க்க தரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் நாட்டில் நடக்க உள்ளதாகவும்  மே மாதம் 30ந் தேதிக்கு பிறகே இவைகள் தொடர் சம்பவமாக நடக்க உள்ளதாக “உண்மைகள் உறங்குவதில்லை“ என்ற தீர்க்க தரிசனப் பகுதி தனது கருத்தை இங்கு பதிவு செய்கிறது.


மகாபலிபுரம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய குறிப்பு என்றும், கடற்கரை கோவில் ஒன்று வரும் கடல் கொந்தளிப்பால் உள்ளே செல்ல உள்ளதாகவும், அந்த கடல் கொந்தளிப்பால் கடலில் முழ்கிய வரலாற்று சின்னத்தை ஆய்வாளர்கள் கடலில் தேடும் சமயத்தில் பல அதிசயங்கள் அப்பகுதியிலிருந்து மக்களும், வரலாற்று அறிஞர்களும் கண்டறிவார்கள் என்றும், அப்பொழுது விமானம் போன்ற ஒரு வினோத இயந்திரத்தை கண்டு உலகமே வியப்பில் மூழ்கும் சம்பவம் நடைபெறுவதாக இந்த நான்காம் தீர்க்க தரிசனப் பகுதி ஒரு முக்கிய செய்தியினை பதிவுச் செய்கிறது.


அடுத்ததாக மன்னார் வளைகுடாவில் உருவாகும் புயல் சின்னம் பல கொடுமையான பாதிப்புகளை உருவாக்க உள்ளதாகவும், புத்தனின் சிலை ஒன்று கடல் கரையில் ஒதுங்கும் சமயத்தில் தமிழகத்தில் பல இன்னல்கள் நடக்க உள்ளதாகவும், இதுவே அதற்கான முன் அறிவிப்பாக மக்கள் கருத வேண்டும் என 4-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கு பதிவுச் செய்கிறது.


வான் மண்டல ஆராய்ச்சியில் இந்திய விஞ்ஞானிகளுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்து உள்ளது என்றும், அந்த ஆச்சர்யமான செய்திக் குறிப்பை அவர்களே உலக மக்களுக்கு தெரிவிப்பார்கள் என்ற குறிப்பை இந்த 4-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


மதம் கொண்ட யானை ஒன்று நிகழ்த்தும் விபத்து ஒன்று இதுவரை வரலாற்றில் நடந்திராத துயரச் சம்பவமாக கேரளாவில் நடக்க உள்ளதாகவும், அச்சமயத்தில் திறக்காத கதவு ஒன்றை கள்ளர்கள் திறக்கும் சம்பவம் நடந்தேறி இருக்கும் என்றும் இது உலகத்திற்கான ஒரு எச்சரிக்கை செய்தியாக மக்கள் பேசிக் கொள்ளும் சம்பவம் ஒன்று நடந்தேறிட உள்ளதாக இந்த 4-ம் தீர்க்க தரிசனக் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

 நிகழ்வுகள் நிச்சயம் நிகழும் அதுவரை “உண்மைகள் எப்பொழுதும் உறங்காது” அது கண்விழித்து எழுவதை காண நாம் காத்திருப்போம்.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.