07/11/2017

சிலைகள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது - ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் குழுவினர் அதிரடி...


சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருடன் கூட்டு சேர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைசெய்த மூவரை, ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் கைதுசெய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் கிராமத்தில் மூன்றீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்ச லோக சிலைகளும், கற்சிலைகளும் இருந்தன. சரியான வருமானம் இல்லாததால், கோயில் பராமரிப்பின்றி பாழடைந்துகிடந்தது. இந்தக் கோயிலின் வெளிப்பிராகார வாயிலில் இருந்த தொன்மையான ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள, 4 அடி உயரம்கொண்ட துவாரபாலகர் கற்சிலைகள், கடந்த 1994-ம் ஆண்டு காணாமல் போயின. இதுகுறித்து, அப்போது வழக்குப்பதிவு செய்த போலீஸார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், கண்டுபிடிக்க முடியாத வழக்கு என முடித்துவைக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைத் திருட்டு மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணையில் களமிறங்கியது. அந்த விசாரணையில், அத்தாளநல்லூர் கோயிலிலிருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகள், ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இந்தச் சிலைகளை மகாபலிபுரத்தைச் சேர்ந்த நரசிம்மன், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஊமைத்துரை, தஞ்சாவூரைச் சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்டோர் சிலைகளைத் திருடி, இந்தச் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்றது தெரியவந்தது. அதனையடுத்து, அச்சிலைகளை கடத்தி விற்ற மூவரும் திருச்சியில் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர்.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி கனகராஜ், 23 ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த துவாரபாலகர் சிலைகளை லெட்சுமி நரசிம்மன், இவரது சகோதரர்கள் ஊமைத்துரை, அண்ணாதுரை ஆகியோர் கடத்தி, தற்போது சிறையில் இருக்கும் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள கேன்பரா அருங்காட்சியகத்துக்கு ரூ. 4.98 கோடிக்கு சட்டவிரோதமாக விற்றுள்ளார்கள். இதுகுறித்து ஆஸ்திரேலியா போலீஸாரிடமிருந்து பெறப்பட்ட திருட்டு சிலைகள் பட்டியலின்படி, மூன்றீஸ்வரமுடையார் கோயிலிலிருந்து திருடப்பட்ட துவாரபாலகர் சிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் ஏற்கெனவே சிலை கடத்தல் வழக்கில் கைதாகி இருக்கும் நிலையில், அந்த வழக்கு தொடர்பாக திருச்சிக்கு இன்று கொண்டுவரப்படும் தகவல் கிடைத்து, அவர்களைக் கைக்செய்தோம். கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என்றார் அவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.