08/11/2017

புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கத் தடை, - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...


தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கறிஞர் பாலு பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழக அரசு செயல்படுவதாகவும் மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி புதிய டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு திறந்துவருவதாகவும் கூறப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் 3000-த்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்ட நிலையில், தமிழக அரசு 1,800 கடைகளைத் திறந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், தமிழகத்தில் 1800 கடைகள் திறக்கப்பட்டிருப்பதாகக் கூறுவது தவறு. இதுவரை 800 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவில் விளக்கம் கேட்டுப் பெற தமிழக அரசுக்கு நவம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் அளித்த நீதிமன்றம், அதுவரை தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகளைத் திறக்கத் தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.