02/11/2017

பண்டார வன்னியன்...


தாய் மண் மீது அடங்காப் பற்றுக் கொண்டு இறுதி வரை போராடி வீர மரணம் அடைந்த வன்னி மண்ணின் இறுதி மன்னன்  மாவீரன் பண்டார வன்னியன்...

ஆகஸ்ட் 25 ஆம் நாள்..

மன்னனின் நினைவு நாளாக நினைவு கூரப்படுகிறது..

அடங்கா மண்ணின் வணங்கா முடி மன்னன் அவனது முழுப்பெயர்
குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்..

பெரிய மெய்யனார், கயிலாய வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்ல நாச்சாள்.

காதலுக்கு உரியவளாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதை ஒருத்தியும் இருந்திருக்கிறாள்.

பண்டாரக வன்னியனும், அச் சமயம் கண்டி மண்ணை அரசாட்சி செய்து கொண்டிருந்த தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

பனங்காமத்தை மையமாக வைத்து பண்டார வன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்திருக்கிறது.

போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு, அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மெய்யனாரையும் கொண்ட குழுவை அமைத்து எதிரிகள் எவருக்கும் அடங்கிப் போகாத குணமும், அன்பு பாசமும் கலந்த இரக்கத்தில் ஊறிய வீரத்தோடு ஒரு அரச நிர்வாக இயந்திரத்தை இயக்கி, பேணி மக்களைப்  பரிபாலித்து வந்தான்.

இதே நேரத்தில் வன்னி நிலத்தின் வேறொரு பகுதியை ஆண்டு வந்தான் இன்னொரு குறுநில மன்னன். அவன் பெயர் தான் காக்கை வன்னியன்..

இவன் பண்டார வன்னியனின் தங்கை நாச்சாள்ளை திருமணம் செய்ய ஆசைப்பட்டான் . ஆனால் நாச்சாள், அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவை புலவன் மீது காதல் கொண்டிருந்தாள்.

இவர்களின் காதல் பற்றி பண்டார வன்னியன் அறிந்த வேளை, புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதையும் அறிந்து கொள்கிறான்.

இதனால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிடுகிறான்.

ஆனால் காக்கை வன்னியன் கடுங் கோபம் கொண்டு வெகுண்டான்.  தன் ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க, அறம் சாராத தன் வீரத்தால் முடியாத நிலையில் சதி செய்து பண்டார வன்னியனை தோற்கடிக்க திட்டமிட்டான்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கி.பி. 1796ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பமாகின்றது.

ஆங்கிலேயர்கள் கோட்டை இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியங்களை இலகுவாக கைப்பற்றிக் கொண்டனர்.

டச்சுக்காரர்கள் அனைவரையும் விரட்டியடித்தனர்.

குறுநில மன்னர்களை அடக்கி அடாவடிகளில் ஈடுபட்டு வட்டி, வரி, கிஸ்டி என்று வசூல் வேட்டை நடத்தினார்கள், அடிமை - துரைத்னங்களை அரங்கேற்றினார்கள்..

வன்னியிலும் வசூலிப்பை ஆரம்பிக்கும் நோக்கில், பண்டார வன்னியனிடமும் அவன் குடிமக்களிடம் அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் பின்னர் 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை அனுப்பினார்கள் . மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டு அடாவடிகளில் ஈடுபடுவதால் பண்டார வன்னியன் கோபம் கொண்டான் எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளைக்காரர்கள் பண்டாரக வன்னியன் மீது போர் தொடுத்தனர்.

முள்ளியவளை, கற்பூரப்புலவெளி என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின.

பண்டாரக வன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

வன்னி மறவர் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது

தாய் மண் மீது அடங்காப் பற்றுக் கொண்ட பண்டார வன்னியன் அடிமைத் தனத்துக்கு அடங்க மறுத்தான், ஆவேசமாக போரிட்டான்.

தாய் மண்ணில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் திகதி பண்டார வன்னியன் தாக்கி அப்படைத் தளத்தை நிர்மூலமாக்கியுள்ளான்.

அந்நேரம் காப்டன் ரிபேக் தலைமையில் கோட்டைப் பாதுகாப்பில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரக வன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்துள்ளது.

இதன் பின்னர் வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியிருக்கிறது.

இத் தாக்குதலில் பண்டார வன்னியன் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிச் சென்றிருக்கிறான்.

இவ்வாறான பண்டார வன்னியனின் சில செயல்கள், சம்பவங்களுக்கான நிரூபண வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகிறது.

பண்டார வன்னியன் தொடர்ந்து மேலும் பல பாரிய படையெடுப்புக்களை மேற்கொண்டு வடபகுதி வன்னி முழுவதையும் தனது ஆட்சியின்கீழ் கொண்டு வந்ததுடன் முல்லைத் தீவையும் கைப்பற்றினான்.

மேலும் அவனது படையினர் கொட்டியாரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.


பண்டார வன்னியன் அங்கும் சில தனது படை வீரர்களை நிலை கொள்ளச் செய்தான். இவ்வாறான சூழ்நிலைகளில் பண்டாரவன்னியன் 1803ஆம் ஆண்டு கற்சிலை மடுவில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இச் செய்தியை காக்கை வன்னியனின் ஒற்று தகவல்கள் மூலம் நன்கு ஊர்ஜிதம் செய்து கொண்ட ஆங்கிலேயத் தளபதி கப்டன் டிறிபேர்க்கின் தலைமையிலான ஆங்கிலப் படைகள் கி.பி. 1803ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் மன்னாரில் இருந்து கற்சிலைமடுவுக்கு வந்து கடுமையான தாக்குதல்களைக் தொடுத்தன.

இச் சமயம் உதவிக்கு திருகோணமலையில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஆங்கிலப் படைகள் வருவிக்கப்பட்டன.

சற்றும் எதிர்பாராத பண்டார வன்னியனும் அவன் சார்ந்த படைகளும் இதனால் அதிர்ச்சியடைந்தன.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரக வன்னியனின் படை மிகச் சிறியது.

இருப்பினும், அஞ்சாமல் வீர மரணம் என்பது வெற்றிக்கு நிகரான பரிசுதான் எனத் துணிந்து இறுதி வீரப்போரினில் விவேகம் காட்டினான்.

என்ன முயன்றும் காக்கை வன்னியனின் உளவு தகவல்களால் போரில் பண்டாரக. வன்னியன் திட்டங்கள் தோவியடைந்தன.

இதனால் போரில் படுகாயம் அடைந்தான்.

அவனுடைய வீரர்கள் போர்க்களத்தில் இருந்து பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரக வன்னியனை தூக்கிச் சென்றனர். அங்கு உயர் சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் கிடைக்கவில்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியன் உயிர் பிரிந்தது.

எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக் பண்டார வன்னியன் காயப்பட்ட இடத்தில் பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும், நடுகல் சின்னமும் வைத்து போற்றினான்.

குறிப்பிட்ட இந்த நடுகல்லில்...

இந்த இடத்தில் 1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரக வன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நாளைத் தான் நீண்டகாலமாக பண்டார வன்னியனின் நினைவு நாளாக தமிழர்கள் கொண்டாடி வந்தார்கள்..

இவ்வாறு எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டார வன்னியனுடைய சிலை.

இதனாலேயே இச்சிலை அமைந்திருக்கும் பகுதி கற்சிலைமடு என்ற காரண சிறப்புப் பெயருடன் இன்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாறான சிறப்புகளோடு இன்றழவில் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக காலத்தை வென்று நின்றிருந்த அந்த மறத்தமிழனின் நடுகல்லை தான் தற்போது சிங்கள இன மத வெறி ஓநாய்கள் உடைத்து சேதப் படுத்தியிருக்கின்றன.

பண்டார வன்னியனை போரிலே தோற்கடித்தமைக்கு கப்டன் டிறிபேர்க்கிற்கு வவுனியாவில் உள்ள பண்டாரக்குளம் பரிசாக வழங்கப்பட்டது என்ற கூடுதல் தகவல்களும் உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.