26/12/2017

தமிழகத்தில் பாடகர்களும் வந்தேறிகளே...


ஏன் தமிழ் திரைப்பட உலகத்தில் அதிகம் தமிழ் பாடகர்கள் வருவதில்லை?

தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்?

விரல் விட்டு எண்ண கூடிய சிலரே.

பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு.

ஏன் இந்த நிலை?

1937 - 1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது.

அதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான்.

அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய அளவில் நடைபெற்றன.

நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.

1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள்.

டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக தெரியவில்லை.

பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா, ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான்.

நடுவில் ஏ. எம். ராஜா, பீ. பி. ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல முடியாது. பீ. பி. ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.

பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை சேர்ந்தவர். தமிழர்.

ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல முடியாது.

இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். டி. எம். எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே அறிமுகமாகிய எஸ். பி. பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே. ஜே. இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.

இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான் இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது.

ஒரே படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் நடிகர்களே பாடுகிறார்கள்.

ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? நல்ல தமிழ் பாடகர்கள் இல்லையா? அல்லது ஆந்திரர், கேளரர், கர்நாடகர் நிறைந்த தமிழ் திரைப்பட உலகம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.