10/01/2018

கோவை மாணவர்கள் நடத்திய ரேக்ளா ரேஸ்...


அப்போது தெரியவில்லை கிளம்பும் போது அப்படியோர் அதிர்ச்சி காத்திருக்கிறது என்று. அதை ஓட்டிக் கொண்டு வந்தவர்களை ஓரங்கட்டி பேசினேன்.

என்னப்பா ஃபோட்டோ புடிச்சு கேஸ் போடப்போறியா? அந்த கேமராவக் கொண்டுவா..  என்று கோபமாக வந்தவர்கள், பந்தயம் நடத்தும் கிளப்காரர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேசத் தொடங்கினர்.

உங்கள் எல்லாருக்கும் ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்று தெரியும். ஆனால் ரேக்ளா பந்தயம் பற்றி உங்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. நாட்டு மாடுகள் மற்றும் பசுக்களை காப்பதில் இந்த ரேக்ளா பந்தயத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்பதை, இந்தப் பந்தயம் தடை செய்யப்பட்ட பிறகுதான் தெரிந்துகொண்டோம். அதுவரை நாங்கள் உண்டு, எங்கள் மாடுகள் உண்டு என்றிருந்தோம். என்றவரிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டோம்.

11AA என்று எழுதிக்கொள்ளுங்கள் என்றார். அது அவருடைய வண்டியின் பந்தய எண்.

ரேக்ளா பந்தயம் என்பது மாட்டு வண்டி ரேஸ்தான். ஆனால், அதை அவ்வளவுதான் என்று எளிதாக விட்டுவிடமுடியாது. ஏனெனில் ஜல்லிக்கட்டுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய விளையாட்டு இந்த ரேக்ளா பந்தயம்.

நீதிமன்றம் இதை தடை செஞ்சவுடன், காளை வளர்க்க முடியாதவன்லாம் அடிமாட்டுக்கு வித்தான். ஆசை ஆசையா வளர்த்த காளைய கறிக்கடைக்குக் கூட்டிப்போறத பார்த்தா சாகத்தோணும். பல பேரு பல்லக்கடிச்சிட்டு , தனக்கு இல்லைனாலும் மாட்டுக்கு மூனு வேளையும் பருத்திப் புண்ணாக்குன்னு போட்டு வளர்த்தான். இப்ப இந்தா நிக்குது பாருங்க, இது ரேக்ளா ரேஸ்ல 5வது பரிசு வாங்கிச்சு. இந்த வருஷமும் தடை இருந்திருந்தா நானும் மாட்டை வித்துட்டுதான் போயிருக்கணும்” என்று சொல்லிவிட்டு மாட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினார் 11AA.

கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது நாட்டு மாடுகள் கண்காட்சியும், ரேக்ளா பந்தயமும். இந்த ரேக்ளா பந்தயத்தின் வரலாறு மிக சுவாரஸ்யமானது. பொதுவாக காளைகளை வளர்ப்போர் பொங்கல் திருநாளன்று தங்களது காளைகளை ஊருக்கே காட்சிப்படுத்துவர். ஒரு குடும்பத்தின் கம்பீரம் என்பது அவர்கள் வளர்க்கும் காளைகளின் கம்பீரத்தை பொருத்தே கணிக்கப்படும். அப்படி இருக்கும்போது, தங்களுடைய காளைகளை கவுரவப்படுத்தும் விதமாக ஒரு பந்தயம் நடத்தி, அதில் தங்கள் காளைகளின் வீரத்தை வெளிப்படுத்தும் வழக்கமும், அம்மாடுகளுக்கு நன்றி சொல்லும்விதமாக மாட்டுப்  பொங்களன்று அந்த விளையாட்டுகளை நடத்துவதும் தமிழர்களின் வழக்கமாக இருந்துவந்துள்ளது. இது ஒரு விளையாட்டு என்பதைத்தாண்டி காளைகளை கவுரவப்படுத்தும் விழாவாகவே கடைபிடித்து வரப்பட்டது. விலங்குகளை காட்சிபடுத்துதல் சட்டத்தின் கீழ் காளைகளை கொண்டு வந்ததை சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதைப்போலவே, நாட்டு மாடுகள் சம்பந்தப்பட்ட மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் போன்ற அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டன. அதிலும் ஜல்லிக்கட்டைப் போலவே ரேக்ளா பந்தயங்களிலும் மாடுகளுக்குச் சாராயம் கொடுக்கப்படுகிறது, தார் முள் மற்றும் கரன்ட்டு பெட்டி வைத்து குத்தி துன்புறுத்துகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதை முறை படுத்தி மாடுகள் சோதிக்கப்பட்டு, தார் முள், கரன்ட் பெட்டி ஆகியன தடை செய்து ஒரு நெறிமுறைக்குள் கொண்டுவரப்பட்டது இந்த ரேக்ளா பந்தயம்.

ரேக்ளா : தற்போது ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கிய நிலையில், ரேக்ளா பந்தயத்துக்கு இன்னும் சிக்கல் நீடிக்கிறது என்றும் தொடர்ந்து ஸ்டே ஆர்டர் வாங்கி வழக்கு நடத்துவதே வேலையாக இருக்கிறது என்றும் வேதனைப்படுகிறார், ரேக்ளா பந்தயங்களுக்குக் குரல் கொடுத்துவரும் வக்கீல் செந்தில்குமார்.

அரசாங்கம் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அழிக்கிறது. மாடுகளை பற்றிய குறைந்தபட்ச அறிவுகூட இல்லாதவர்கள்தாம்  மாடுகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை இயற்றி வருகின்றனர். நீங்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பாரம்பர்ய விளையாட்டுகளை அழித்துக்கொண்டே வந்தால், அழிவது நாட்டுமாடுகள் மட்டுமல்ல. நம் பாரம்பர்யமும் ஆரோக்கியமும்தாம். 

நாங்கள் உங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்கள் மாடுகளை வளர்க்க பணம் கேட்கவில்லை. எங்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் இருந்தால் போதும். எங்கள் மாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம், என்றார்.

அவரைக் கடந்ததும் இளைஞர்களின் மறைவில் ஒரு பெரிய காளை கம்பீரமாக நடந்து வந்தது. 20களில் இருக்கும் அந்த இளைஞர்களின் பிடியில் ஒரு சிங்கத்தை வீழ்த்தும் கம்பீரத்துடன் நின்ற காளையைக் கண்டால் வியப்பை தவிர வேறு வார்த்தை வரவில்லை.
இந்தப் பொடியன்கள் வளர்த்த காளையா என்று ஆச்சர்யமாக இருந்தது. நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் அனைவரும் கோவையை சுற்றியுள்ள கல்லூரிகளில் படிக்கும் நண்பர்கள் எனத் தெரிந்தது.

இந்தத் தடை குறித்து விசாரித்தபோது, சும்மா போராட்டம் மட்டும் செஞ்சுட்டு எவனோ மாட்டை பாத்துக்குவான்னு விடக் கூடாது. அதை காப்பாத்தறதுல நமக்கும் பங்கு இருக்கு. அதான், நாங்க நண்பர்களா சேர்ந்து ஒரு ஜோடி நாட்டுக் காளைகளை வாங்கி வளர்த்துட்டுருக்கோம். ஏசி ரூம்ல உட்கார்ந்துட்டு என்னவேணாலும் பேசுவாங்க, சட்டம் போடுவாங்க. வந்து நம்ம மாட்ட தொடச் சொல்லுங்க பார்ப்போம். தடை சொல்லுறவங்க இந்த மாட்டை தொட்டுட்டா தடையை ஏத்துக்குறோம். இனியும் பார்த்துட்டே இருந்த நமக்கு அடுத்த ஜெனரேஷன் மாடுகளை போட்டோலதான் பாத்துட்டு இருக்கும் ப்ரோ..” என்றனர்.

சிலிர்த்துவிட்டது. ஒரு யுகம் களத்தில் இறங்கிவிட்டது. இதற்கும் தடை என்று தீர்ப்பு வந்தால், தயாராகிக் கொள்ளுங்கள். பொங்கலில் இனியொரு போராட்டத்திற்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.