13/01/2018

உங்கள் கட்சிக்கு சுயத்தன்மையே கிடையாதா? -ஸ்டாலினுக்கு பாமக அன்புமணி கண்டனம்...


பாமகவின் சாதனைகளையெல்லாம் திமுகவின் சாதனைகளாக சட்டப்பேரவையில் பட்டியலிடுகிறீர்களே உங்கள் கட்சிக்கு சுயத்தன்மையே கிடையாதா? என மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்...

தமிழக சட்டப் பேரவையில் பேசும் போது பாமகவின் சாதனைகளையெல்லாம் திமுகவின் சாதனைகளாக பட்டியலிட்டு மகிழ்ந்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். எதிரணியினர் இல்லாத விளையாட்டுத் திடலில் இஷ்டம் போல கோல் அடிப்பதைப் போன்று சட்டப்பேரவையில் பாமக இல்லாததை பயன்படுத்திக் கொண்டு அதன் சாதனைகளை சொந்தம் கொண்டாடியது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசுடன் நெருக்கமாக இருக்கும் அதிமுக அரசு அதன் மூலம் சாதித்தது என்ன? என்று வினா எழுப்பியதுடன், எதிர்தரப்பில் தரப்பில் எவரும் கேட்காத போதிலும், மத்திய அரசில் திமுக இருந்த போது சாதித்த திட்டங்கள் என்று கூறி ஒரு பட்டியலை படித்துள்ளார். அதில் இடம்பெற்றுள்ள சாதனைகளில் பெரும்பாலானவை பாமகவின் சாதனைகளாகும். பாமக படைத்த சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் உள்ளது. ஸ்டாலின் கூறியது மிகவும் அப்பட்டமான, அருவறுக்கத்தக்க பொய்யாகும்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.120 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது ஆகியவை மத்திய அரசில் அங்கம் வகித்த போது திமுக படைத்த சாதனைகள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவையெல்லாம் திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது படைக்கப்பட்ட சாதனை தான்... ஆனால், திமுக படைத்த சாதனைகள் அல்ல, பாமகவின் சாதனைகள் என்பதை நண்பர் ஸ்டாலின் வரலாற்றைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், அதன் பணிகளை ரூ.49 கோடி செலவில் விரைவுபடுத்தி, 03.09.2005 அன்று அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை அழைத்து திறப்பு விழா நடத்தியது நான்தான். திறப்பு விழா வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே மக்களுக்கு மருத்துவம் அளிக்க ஏற்பாடு செய்ததும் நானே. அதேபோல், சேலத்தில் ரூ.139 கோடியில் டெல்லி எய்ம்ஸுக்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தியதும் எனது அமைச்சகம் தான். இந்த திட்டத்தை செயல்படுத்த பல வழிகளில் தடை போட்ட திமுக, இப்போது அந்த திட்டத்திற்கு சொந்தம் கொண்டாடுவதை எந்த வகையில் சேர்ப்பதோ?

பாமகவின் சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடுவது இது முதல் முறையல்ல. ஒட்டுமொத்த இந்தியாவும் போற்றும் 108 அவசர ஊர்தித் திட்டத்தை எனது அமைச்சகம்தான் கொண்டு வந்தது என்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால், அந்தத் திட்டத்தை தாங்கள் கொண்டு வந்ததாக மிகப்பெரிய பொய்யைக் கூறி விளம்பரம் தேட திமுக முயன்றது கடந்த கால வரலாறாகும்.

அதுமட்டுமின்றி, மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸுக்கு இணையான அதி உயர்சிறப்பு மருத்துவமனை, சென்னையில் ரூ.100 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அதி உயர் சிறப்பு மையம், சென்னையில் ரூ.250 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம், ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எனது தலைமையிலான மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கி, அவற்றுக்கு நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் அப்போது தமிழகத்தை ஆண்ட அதிமுகவும், திமுகவும் அவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்தன.

இது தான் திமுக, அதிமுக ஆட்சிகளின் சாதனையாகும். மேலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் மேற்கொண்ட புகையிலைத் தடை தொடர்பான பல திட்டங்களுக்கு அப்பட்டமான எதிர்ப்பு தெரிவித்தவர் கருணாநிதி. இது தான் திமுகவின் சாதனை. மத்திய உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது திமுகதான் என்ற இமாலயப் பொய்யையும் ஸ்டாலின் கூறியுள்ளார். 27% இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்காக 23.05.2005 அன்று சோனியா காந்தி இல்லத்தில் நடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் மண்டல் ஆணையப் பரிந்துரைப்படி கல்வியில் 27% இட இதுக்கீடு வழங்கும் திட்டத்தை முடக்கிப் போட முயற்சிகள் நடந்தன.அதற்கு ராமதாஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மற்ற கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்த போதிலும், திமுக பிரதிநிதிகள் 27% ஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்காமல் வேடிக்கைப் பார்த்தனர்.

இதையடுத்து ராமதாஸை சமாதானப்படுத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாலையில் மீண்டும் கூடி இதுபற்றி விவாதிக்கலாம் என்று உறுதியளித்தார். இடைப்பட்ட நேரத்தில் லாலு பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், சீதாராம் யெச்சூரி, பரதன், டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அக்கூட்டத்திற்கு வராமல் சென்னையில் இருந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை, தயாநிதி மாறனின் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு 27% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிக்கும்படி ராமதாஸ் வலியுறுத்தினார். அதன்பின்னர் மாலையில் தொடங்கி, இரவு வெகுநேரம் வரை நடைபெற்ற கூட்டத்தில் ராமதாஸின் நிலைப்பாட்டை மற்ற அனைத்து தலைவர்களும் ஆதரித்ததன் பயனாகவே 27% ஒதுக்கீடு சாத்தியமானது. இந்த வரலாறு நண்பர் ஸ்டாலினுக்கு தெரியாமல் இருக்கலாம். இதற்கெல்லாம் சாட்சியாக இருந்த அவரது மருமகன் தயாநிதி மாறனிடம் கேட்டு 27% இடஒதுக்கீட்டு போராட்ட வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்.

சேலம் ரயில்வே கோட்டம், தமிழ்நாட்டில் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளையும் அகலப்பாதையாக மாற்ற அனுமதி அளித்தது ஆகியவையும் திமுகவின் சாதனைகள் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இவையும் பாமகவின் சாதனைகளாகும்.

ரயில்வே இணையமைச்சராக அரங்க.வேலு பொறுப்பேற்றவுடன் அவரை அழைத்த ராமதாஸ், தமிழ்நாட்டில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர் கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது. அனைத்தும் அகலப்பாதைகளாக மாற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதை குறைந்தது 100 முறையாவது அவரிடம் வலியுறுத்தியிருப்பார் ராமதாஸ். இத்தகைய அறிவுரைப்படித் தான், பாமகவைச் சேர்ந்த அரங்க.வேலு தான் கடுமையாக போராடி இத்திட்டங்களைக் கொண்டு வந்தார்.

பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே அமைச்சர்களாக இருந்த போது அறிவிக்கப்பட்ட தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அடுத்த 5 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்தும் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்காதது தான் தமிழ்நாட்டிற்காக திமுக செய்த பெரிய சாதனை ஆகும். எந்த ஒரு கட்சிக்கும் சுயம் தேவை. தங்களின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமை கொள்வதில் தவறில்லை. மாறாக அடுத்தக் கட்சியின் சாதனைகளை தங்களின் சாதனைகளாக பட்டியலிடுவது சாதனைத் திருட்டாகவே பார்க்கப்படும்.

2015-ம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்காக பொதுமக்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டு வந்த உதவிப் பொருட்களை ஆளுங்கட்சியினர் பிடுங்கி ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டி கொடுத்ததற்கும், ஸ்டாலினின் செயலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

கடந்த காலங்களில் பாமக அறிக்கை மற்றும் தேர்தல் அறிக்கைகளை காப்பியடித்த திமுக, இப்போது பாமகவின் சாதனைகளைக் காப்பியடித்திருக்கிறது. இனியாவது மக்களுக்கு ஏதேனும் நன்மைகளை செய்யவும், அவ்வாறு செய்த நன்மைகளை மட்டும் திமுகவின் சாதனைகளாக பட்டியலிடவும் நண்பர் ஸ்டாலின் முயல வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.