12/02/2018

தாலியும் தமிழரும்...


ஆரியத்துக்கும் பெரியாரியத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது..

தமிழ்நாட்டில் ஆரியமும் பெரியாரியமும் போடும் பங்காளிச் சண்டையில் தமிழர்களின் பாரம்பரியமும், பண்பாடும் பணயம்  வைக்கப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் எதிர்க்கவும், கண்டிக்கவும் வேண்டியது உலகத் தமிழர்களின் கடமையாகும்.

ஆரியம் ஒருபோதும்  தமிழினத்தின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டதில்லை. அதன் வாதமெல்லாம் தமிழர்களுக்கென்று தனித்துவமான பாரம்பரியமோ, பண்பாடோ எதுவும் கிடையாது. எல்லாமே இந்திய உபகண்டத்தில், இந்துக் கலாச்சாரத்திலிருந்து இரவல் வாங்கியவை தான் என்பது தான். 

தமிழ் மொழியின் தொன்மையையும், தனித்துவத்தையும் கூட அவர்களில் பலர் ஏற்றுக் கொள்வதில்லை, தமிழை விட உயர்வாக  சமக்கிருதத்தை தூக்குவது தான் ஆரியத்தின் வழக்கம்.

தமிழர்கள் தாலி அணிவதும், இந்துக் கலாச்சாரத்தின்  ஒரு அங்கம் தான், அதுவும் ஆரியத்தின் தொடர்ச்சி என்கிறார்கள். இந்துத்துவா பார்ப்பனீயவாதிகள் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள் பெரியாரியவாதிகள்.

திருமணத்தில் தாலியணியும் வழக்கம் இன்று இந்தியா முழுவதும் காணப்பட்டாலும், தமிழ்ப்பெண்கள்  சங்க காலத்திலேயே  ‘ஈகை அரிய இழையணி’ அணிந்திருந்தனர் என்பதற்கு புறநானூற்றிலேயே ஆதாரமுண்டு.

ஆரியப் பார்ப்பனீயம் தமிழர்களிடமிருந்து தாலி அணியும் பாரம்பரியத்தை இரவல் வாங்கியிருக்கலாமே தவிர, அது தமிழர்களின் பாரம்பரியம், அது பெண்ணடிமைச் சின்னம் அல்ல என வாதாடுவதற்குப் பதிலாக..

புறநானூற்றுக் காலம் தொட்டு, தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக, ஒருவனுக்கொருத்தி என்ற தமிழர்களின் கொள்கைக்கு அடையாளமாக  இருந்த  தாலியணியும் வழக்கத்தை, ஆரியப் பார்ப்பனீயத்திடமிருந்து  தமிழர்கள் இரவல் வாங்கியதாகக் கூறி தாலி அறுக்கும் போராட்டமும் நடத்தும் பெரியாரியத்துக்கும், பார்ப்பனீயத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது, என்று தான் எண்ணத் தோன்றுகிறது..

ஏனென்றால் இரண்டு குழுவினரது நோக்கமுமே தமிழர்களைத் தனித்துவமான கலை, கலாச்சாரம் அற்றவர்களாக்குவதும். அவர்களைத் தமிழர்களாக, தமிழ்த்தேசியத்தின் கீழ் ஒன்றுபடாமல் தடுப்பதும் தான். 

இந்த விடயத்தில் பார்ப்பனீயத்துக்கும், பெரியாரியத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

தமிழ்நாட்டிலுள்ள தமிழ் இந்துப் பெண்கள்  மட்டும் தாலியணிவதில்லை. மாறாக சாதி, மத வேறுபாடின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமது வாழ்க்கைத் துணைவிக்கு தமிழ்க் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக, தமது அன்பைக் காட்டும், தமது  மணவாழ்க்கையின் அடையாளமாகத் தான்  தாலியை அணிவிக்கிறார்களே தவிர, எந்த தமிழனும் மணவறையில்  தனது எதிர்கால வாழ்க்கைத் துணைவிக்கு, தனது வருங்கால வாரிசுகளின் தாய்க்கு, தாலியைக் கட்டும்போது, இந்தப் பெண் எனது அடிமை அந்த அடிமைத்தனத்தின் சின்னமாக இந்த தாலியைக் கட்டி, இவளை இன்று முதல் நான் அடிமையாக்கிக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டு தாலி கட்டுவதில்லை.

தாலியை அணிந்து கொள்ளும் எந்த தமிழ்பெண்ணும் இன்றைக்கு முதல் நான் இவனுக்கு அடிமை, இது அடிமைத்தனத்தின் சின்னம் என்று நினைத்துக் கொண்டும் தாலியை அணிவதுமில்லை.

தாலி அணிவது தமிழர்களின் மரபே தவிர இந்துக்களுக்கு மட்டும் உரிய வழக்கமல்ல.

இன்றும் ஈழத்தமிழர்களில் இந்துக்களும், கிறித்தவர்களும் தாலியணிகின்றனர்..

அது மட்டுமன்றி, தீவிரவாத இஸ்லாமிய வஹாபிசம் வேரூன்றும் வரை தமிழ் முஸ்லீம்கள் கூட திருமணத்தில் பிறை வடிவிலான பதக்கத்தை சங்கிலியில் கோர்த்து பெண்ணுக்கு தாலியாக அணிந்தனர். அவ்வாறு சாதி, மத வேறுபாடின்றி, தமிழர்கள் அனைவரினதும் பாரம்பரியங்களில் ஒன்றாகிய தாலியணியும் வழக்கத்தை, பெண்ணுரிமை என்ற போர்வையில்,  இந்துக்களின் சடங்காக, பார்ப்பனர்களிடமிருந்து தமிழர்கள் இரவல் வாங்கிய வழக்கமென எண்ணி, அது விட்டொழிக்கப்பட வேண்டுமென்று போராடும் பெரியாரியமும், பார்ப்பனீயமும்  ஒன்றிணைந்து தமிழர்களுக்கெதிராக சதி செய்கின்றனவோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக, இக்காலத்தில் சாதாரண தொழில் செய்கிற தமிழ் ஆண்கள் கூட, தமது திருமணத்துக்கு கஷ்டப்பட்டு வேலை செய்து காசைச் சேர்த்து அதிகளவு தங்கத்தில்  தனது எதிர்கால மனைவிக்குத் தனது அன்பின் அடையாளமாக அணிவிக்கும் பொற்தாலிக் கொடியை, அடிமைச் சின்னமாக்கி, அவன் தனது மனைவியை  அடிமையாக்கத் தான் ஓடியோடி உழைத்தான் என்று கருத்துப்படும் படி  கூறுவது எவ்வளவு இரக்கமற்ற செயல் என்பதை பெரியாரிஸ்டுகள் நினைத்துப் பார்ப்பதில்லை போல் தெரிகிறது..

அவர்களின் நோக்கமெல்லாம் தமிழர்களின், பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் அழித்து.. திராவிடனின் தாசி கலாச்சாரத்தை தமிழனிடம் திணிப்பது மட்டும் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.