09/03/2018

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? -3...


ஐரோப்பிய அரசியல் மதம்...

கான்சுடன்டைன் தன் எதிரிகளை அழிக்க, சிலுவை அடையாளத்தை முதன்முதலில் பயன்படுத்தினான்.

எதிரிகளை அழிக்கச் சிலுவை அடையாளத்தைக் கான்சுடன்டைன் பயன்படுத்தியதில் தவறு ஒன்றும் இல்லை. 

ஏனென்றால் அது ஐரோப்பிய அரசியல் கொலைக்கருவியே ஆகும்.

ஆனால் ஆசியாவில் தோன்றிய ஆன்மீக இயக்கமாகிய கிறித்தவம், கான்சுடன்டைன் வழியில் சென்று சிலுவை அடையாளத்தை ஏற்றுக்கொண்டமையால், அது ஆன்மீக இயக்கம் என்னும் நிலையில் இருந்து தவறி “ஐரோப்பிய அரசியல் மதம்” என்னும் நிலைக்கு வீழ்ந்துவிட்டதை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். 

அதனால் தன்னைக் கொலை செய்த பகைஞர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆன்மீக இயக்கம்  மறைந்து சிலுவை அடையாளத்தை மாட்டிக் கொண்டு மற்றவர்களைக் கொலை செய்த, சிலுவைப் போர் நடத்திய ஐரோப்பிய வழிக் கிறித்தவ மதத்தை நாம் வரலாற்றில் பார்க்கின்றோம். 

சிலுவைப் போர்...

ஆகவே, பகைவர்களுக்கும் மன்னிப்பை அருளிய இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கத்திற்கு எதிராக, போர்க்கருவியினால் பகைவர்களை அழிக்கும் ஐரோப்பியக் கிறித்தவ மதத்தின் அடையாளமாகச் சிலுவை விளங்கிக் கொண்டிருக்கிறது. 

சிலுவை கிறித்தவ மதத்தின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் முதல் இன்று வரை இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீகம், ஐரோப்பியர்களின் தலைமையின் கீழ்  ஐரோப்பிய அரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஐரோப்பிய அரசியல்...

கான்சுடன்டைன் காலம் வரை உரோமப் பேரரசு, கிறித்தவர்களை வேட்டையாடிய நிலையை நாம் திருச்சபை வரலாற்றில் மிகத் தெளிவாகப் பார்க்கிறோம்.  ஆனால்...

1.    கான்சுடன்டைன் காலத்தில் தொகுக்கப்பட்ட புதிய ஏற்பாட்டில் அந்த வரலாறு இல்லையே! ஏன்?

2.    திருச்சபை வரலாற்றைக் கூறும் அப்போத்தல நடபடிகளில் பெளல் உரோமபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டதைக் கூறும் இருபத்தெட்டாம் அதிகாரத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது ஏன்?

என்னும் கேள்விகளை எழுப்பினால் இயேசு கிறித்துவின் ஆசிய ஆன்மீக இயக்கம் ஐரோப்பிய அரசியலுக்கு அடிமைப்படுத்தப்பட்டு சிலுவை அடையாளம் சிறப்பிக்கப்பட்டதன் வரலாறு தெளிவாக விளங்கும்.

ஐரோப்பியர்களிலும் ஐரோப்பிய அரசியல் சிந்தனைகளைத் தாண்டிக் கிறித்துவின் ஆன்மீக அனுபவத்தின் அடிப்படையில் செயல்படும் கிறித்துவின் அடியார்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  ஆனால் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே! 

- பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகத்தின் கருத்துகளில் இருந்து பதியப்பட்டவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.