24/04/2018

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள்...


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றக் கோரி  உண்ணாவிரத  அறப்போராட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பல்லடம் பகுதிவாழ் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. காரணம் இதுவரை பல்லடம் நகரில் நடைபெற்ற உண்ணாவிரத அறப்போராட்டங்களில் இதுபோல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதில்லை.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை ஒருமித்த குரலில் வலியுறுத்தி பேசினர்.

அதேபோல் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தின் செயல்வடிவம் பற்றியும் இத்திட்டத்தினால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இந்நிகழ்வில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக அவினாசி அத்திக்கடவு திட்டக்குழுவினர் செய்ததுபோல ஆனைமலையாறு நல்லாறுத் திட்டம் உடனடியாக வேண்டும் என்ற நோக்கில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப் பகுதியைச் சேர்ந்த அனைத்து கிராமங்களிலும் பெயர் பலகைகள் திறக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

பாசனப் பகுதிகளின் முதல் மடை முதல் கடை மடைவரை அனைத்து விவசாயிகளையும் பொதுமக்களையும் கட்சி , அரசியல் சார்பற்று ஒருங்கிணைத்து அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதிகளில் திண்ணைக் கூட்டங்களையும் அறப்போராட்டங்களையும் நடத்துவது என்றும் பின்னர் சென்னை மாநகரத்தில் மிகப்பெரிய போராட்டம் ஆனைமலையாறு நல்லாறு திட்டத்திற்காக நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் ஏர்கொடி ஏந்தி *வேண்டும் வேண்டும்* *ஆனைமலையாறு* *நல்லாறு* *வேண்டும்* என்று கோஷமிட்டபடி பேரணியாக  வருகை தந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

சிறப்பான முறையில் இந்த அறப்போராட்டத்தை ஏற்பாடு செய்த ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினருக்கு அனைத்து பரம்பிக்குளம் ஆழியாறு  பாசன விவசாயிகள் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.