05/05/2018

கைக்குழந்தையுடன் பேருந்தில் நூதன முறையில் திருட்டு; தங்கை கணவருடன் பெண் கைது: 42 சவரன் நகை பறிமுதல்...


பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணம் செய்வது போல நடித்து பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிய பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 42 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டையில் வசிப்பவர் விஜயா (38), இவர் வடபழனி பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். விஜயா நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல் பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்கு மாநகரப் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார். இடையில் விஜயாவிடம் பேச்சு கொடுத்துள்ளார். குழந்தையை விஜயா கொஞ்சியபோது அதை அவரது கையில் கொடுத்துள்ளனர். பின்னர் பேருந்து வடபழனி பேருந்து நிறுத்தம் வரும் முன்பு அந்தப் பெண் பேருந்திலிருந்து அவசரமாக இறங்கச் சென்றுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த விஜயா தான் வைத்திருந்த கைப்பையை பார்த்ததில், கைப்பை திறக்கப்பட்டு, பையில் வைத்திருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ 700 ரொக்கப் பணத்தைக் காணவில்லை. உடனே, விஜயா குழந்தையுடன் வந்த பெண்ணை பார்த்து நிற்கும் படி கூறியுள்ளார்.

அந்த நேரம் பேருந்தும் நின்றதால், அந்தப் பெண்ணும், அவருடன் வந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரும் பேருந்திலிருந்து அவசரமாக இறங்கி வேகமாக நடந்து சென்றனர். உடனே, விஜயா சத்தம் போடவே, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த வடபழனி காவல் நிலைய போலீஸார் அந்தப் பெண்ணையும் உடன் வந்த அந்த நபரையும் பிடித்தனர்.

பின்னர் அவர்களை சோதனை செய்தபோது, விஜயாவின் நகை மற்றும் பணத்தை திருடி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வடபழனி காவல் நிலையம் கொண்டுசென்ற போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிபட்ட இருவரும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரதி (32) என்பதும் உடன் வந்தவர் அவரது தங்கை கணவர் பிரபாகர் (30) என்பதும் தெரியவந்தது. ரதி இவ்வாறு குழந்தையுடன் பேருந்தில் பயணம் செய்து, பெண்களின் பர்ஸ் மற்றும் கைப்பையைத் திறந்து, நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்துள்ளனர்.

ரதியின் தங்கை கணவர் பிரபாகரும் இவருடன் பேருந்தில் பயணம் செய்து திருடிய பொருட்களை உடனுக்குடன் கைமாற்றி எடுத்துச் சென்று தப்பி வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் 2 பேரும் சேர்ந்து, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், மாம்பலம், வடபழனி, தேனாம்பேட்டை, கே.கே.நகர் ஆகிய காவல் நிலைய எல்லைகளில் இவ்வாறு பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது.

சுமார் 12 வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரதி மற்றும் பிரபாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 42 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.