26/07/2018

குதம்பை சித்தர் பாடலின் சில வரிகள்...


அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப்
பிண்டத்துள் பார்ப்பாயடி - குதம்பாய்
பிண்டத்துள் பார்ப்பாயடி...

தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மைபோல்
பார்க்கப் படாதானடி குதம்பாய்
பார்க்கப்படா தானடி.

வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை
இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்
இட்டமாய்ப் பார்ப்பாயடி.

பெண்ணாலே வாதம் பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி குதம்பாய்
மண்ணாலே இல்லையடி..

விந்து விடார்களே வெடிய சுடலையில்
வெந்து விடார்களடி குதம்பாய்
வெந்து விடார்களடி.

காமனை வென்று கடுந்தவஞ் செய்வோர்க்கு
ஏமன் பயப்படுவான் குதம்பாய்
ஏமன் பயப்படுவான்..

கள்ளங்கட் காமம் கொலைகள் கபடங்கள்
பள்ளத்திற் தள்ளுமடி குதம்பாய்
பள்ளத்திற் தள்ளுமடி.

பொருளாசையுள்ள இப் பூமியில் உள்ளோருக்கு
இருளாம் நரகமடி குதம்பாய்
இருளாம் நரகமடி.

தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
நாடி வருவதுண்டோ? குதம்பாய்
நாடி வருவதுண்டோ?

போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
சாம்போது தான்வருமோ? குதம்பாய்
சாம்போது தான்வருமோ?

விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
மண்ணாசை ஏதுக்கடி?

தந்தைதாய் செய்வினை சந்ததிக்கு ஆமென்பார்
சிந்தை தெளிந்திலரே குதம்பாய்
சிந்தை தெளிந்திலரே.

பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய்
ஏழாம் நரகமடி.

மாரணஞ் செய்துபல் மாந்தரைக் கொல்வது
சூரணம் ஆக்குமடி குதம்பாய்
சூரணம் ஆக்குமடி.

காசி ராமேச்சுரம் கால் நோவச் சென்றாலும்
ஈசனைக் காணுவையோ? குதம்பாய்
ஈசனைக் காணுவையோ?

சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன்
தேவன் அவனாமடி குதம்பாய்
தேவன் அவனாமடி.

ஆதியும் அந்தமும் ஆன ஒருவனே
சோதியாய் நின்றானடி குதம்பாய்
சோதியாய் நின்றானடி.

எல்லார்க்கும் மேலான ஏகனைப் பற்றிய
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய்
வல்லார்க்கு முத்தியடி.

பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய்
கற்றார்க்கு முத்தியடி.

பந்தத்தை விட்டொளிர் பந்தத்தைப் பற்றினால்
சந்தத முத்தியடி குதம்பாய்
சந்தத முத்தியடி.

ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற
ஊமைக்கு முத்தியடி குதம்பாய்
ஊமைக்கு முத்தியடி.

தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு
பின்னாசையேதுக்கடி குதம்பாய்
பின்னாசையேதுக்கடி.

எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை
அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய்
அங்கத்துள் பார்ப்பாயடி...

என்றும் அழியாம எங்கும்
நிறைவாகி
நின்றது பிரம்மமடி குதம்பாய்
நின்றது பிரம்மமடி...

என்றும் அழியாம எங்கும்
நிறைவாகி
நின்றது பிரம்மமடி குதம்பாய்
நின்றது பிரம்மமடி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.