22/08/2018

கன்னடர்களின் தாயகத்தில் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறதா..? இல்லை...


காவிரி ஆறு கன்னடர்களின் தாயகத்தில் உற்பத்தி ஆவதாக ஒரு தவறான கருத்து நிலைநிறுத்தப் பட்டுள்ளது. காவிரி வரும் வழியில் பயன்படுத்திக் கொள்பவர்கள் தாம் கன்னடர்களும். குடகு இன மக்களின் தாயகத்தில்தான் காவிரி உற்பத்தியாகிறது.

கர்நாடகத்தில் குடகு ஒரு மாவட்டமாக உள்ளது. அவர்கள் மொழி குடகு. அவர்கள் தனித் தேசிய இனம். அவர்கள் கன்னட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். குடகு இன மக்கள் தனியரசு நடத்தி வந்தவர்கள். குடகு மொழி தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

1956 மொழிவாரி மாநிலம் பிரிக்கப் பட்டபோது குடகு மக்கள், தங்களுக்குத் தனிமாநிலம் கேட்டுப் போராடினார்கள். அம்மக்களின் தலைவர்கள் அப்போது தில்லி சென்று இந்தியத் தலைமையமைச்சர் நேருவிடம் விண்ணப்பம் கொடுத்துத் தனி மாநிலம் கோரினார்கள். தங்களைக் கன்னடர்களுடன் இணைத்து மைசூர் மாநிலத்தில் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

இப்பொழுதும் வழக்குரைஞர் நாச்சப்பா தலைமையில் குடகு இன மக்கள் மொழி அடிப்படையில் தங்களுக்கு தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகிறார்கள். குடகு மக்கள் தாயகம் இப்பொழுது கர்நாடகத்தில் ஒரு மாவட்டமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

மைசூருக்கு மேற்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் பசுமை மிக்க மேற்கு தொடர்ச்சி மலையின் மடியில் உட்கார்ந்திருக்கிறது குடகு மாவட்டம். குடகு மாவட்டத்தின் தலைநகரம் மடிக்கரை. கன்னடர்கள் இத்தமிழ்ச் சொல்லை "மடிக்கெர" என்று சொல்கிறார்கள். ஆங்கிலேயன் இதை "மெர்க்காரா" என்று உச்சரித்தான். மடிக்கரையிலிருந்து 34 கி.மீ. மலைமீது ஏறினால் தலைக்காவேரி, "தலக் காவேரி" என்று கன்னடத்திலும், குடகிலும் சொல்கிறார்கள். அந்தத் தலைக் காவிரியின் முகப்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையின் இப்பகுதிக்கு "சோழர்கள் காடு" என்று பெயர். சோழர்கள் காட்டில் உள்ள பிரம்மகிரி மலையில் தலைக்காவிரி உற்பத்தியாகிறது என்பதே அந்த பெயர்ப்பலகையில் உள்ள செய்தி. சோழப்பேரரசின் கீழ் இருந்ததுதான் அப்பகுதி.

சோழர்கள் காட்டில் தலைக்காவிரி உற்பத்தியாகி இரண்டு சிற்றாறுகளாக ஓடிவந்து கீழே உள்ள பாக மண்டலா என்ற இடத்தில் இணைந்து காவிரி ஒரு ஆற்றின் உருவம் பெறுகிறது. அங்கிருந்து ஓடி குசால் நகரைக் கடக்கும்போது, முழு ஆறாகி விடுகிறது. அதன் பிறகு, குசால் நகருக்கு வடமேற்கே ஓடிவரும் ஏரங்கி காவிரியில் கலக்கிறது. ஆரங்கியும் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

கபிலா ஆறு கேரளத்தில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கிறது. கபிலாவை மறித்து கன்னடர்கள் கட்டிய அணைதான் கபினி. கன்னடர் பகுதியிலும் சில துணை ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. ஆனால் பெரும்பகுதி நீர் குடகிலும், கேரளத்திலும் உற்பத்தியாகி ஓடி வருகிறது என்பதே உண்மை.

வேற்று தேசிய இனமக்களின் தாயகத்தில் உற்பத்தியாகிப் பெருகி ஓடிவரும் காவிரியைக் கன்னடர்கள் வழிமறித்துத் தடுத்து வைத்துக் கொண்டு, தங்கள் தாயக மண்ணில் உற்பத்தியான நீர் என்று போலி வாதம் பேசுகின்றனர்.

காவிரி நீரைத் தங்களுக்குப் பயன்படும்படி கர்நாடகம் திட்டங்கள் தீட்டவில்லை என்பதே குடகு இன மக்களின் குறைபாடு. காவிரிச் சிக்கல் எழும்போதெல்லாம் குடகு மக்கள் தமிழகத்திற்காகவே குரல் கொடுக்கின்றனர். கன்னடர்கள் தங்களையும் ஏமாற்றுகிறார்கள்; தமிழர்களையும் ஏமாற்றுகிறார்கள் என்பதே குடகு இன மக்களின் குற்றச்சாட்டு.

மொழி அடிப்படையில் குடகுத் தனி மாநிலம் அமையத் தமிழ்நாடு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். காவிரிப் போராட்டத்தின் வியூகமாக இதைக் குறுக்கிப் பார்க்காமல் ஒரு தேசிய இன மக்களுக்குச் செய்ய வேண்டிய சகோதர உதவி என்று கருத வேண்டும்".

ஐயா பெ.மணியரசன் அவர்கள்
காவிரி உரிமை மீட்புக்குழு

காவிரி - நேற்று, இன்று, நாளை நூலில் எடுத்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.