19/08/2018

மரபுக்குத் திரும்புங்கள். அதுவே புவி முழுமைக்குமான தீர்வு - ம.செந்தமிழன்...


வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்வது குற்றம் இல்லை. ஆனால் அரசின் பதிவு பெறாத நபர்கள் பிரசவம் பார்ப்பது குற்றம். பயிற்சியில்லாத நபர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை மருத்துவம் என்று கூறி பிரசாரம் செய்வது குற்றம்.

தமிழக சுகாதாரத் துறைச் செயலர், மரு.இராதாகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்.

பி.பி.சி தமிழ் இணையச் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் இந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

எனது கருத்துகளையும், செம்மைச் செயற்பாட்டாளர் கலாநிதியின் கருத்துகளையும் கூட இதே கட்டுரையில் பதிவு செய்துள்ளார் அவர்.

வீட்டுப் பிரசவமே குற்ற நடவடிக்கை. இதைப் பற்றிப் பேசுவோரைக் கைது செய்ய வேண்டும் என்ற பொய் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

பகுத்தறிவின் ஊனப் பார்வைக்குச் சட்டமும், நடைமுறையும் தெரியாது.

எல்லாப் பிரசவங்களும் அலோபதி முறைப்படி, மருத்துவமனையில்தான் பிறக்க வேண்டும் என்பது மேற்கத்திய நிறுவனமயப்பட்ட அடிமைகளின் பேராசை.

மரபுவழியில் பயணிப்போருக்கு பேராசை இல்லை. விருப்பம் உள்ளது. நாம் நம் விருப்பத்தில் நிலைக்கிறோம். ஆழ்ந்த வேண்டுதலுடன் உள்ளோம். மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுள்ளன.

மரபுவழிகளில் பிள்ளைப் பேறு எட்டும், கல்வி முறை வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துகிறேன். இக்கல்வி ஏட்டுக் கல்வியாக மட்டுமில்லாமல், மரபு நுட்பங்களின் நடைமுறைகளின் தொகுப்பாக இருக்க வேண்டும்.

நகரமயப்பட்ட புதிய தலைமுறையினருக்கு இக்கல்வி எளிதில் கிடைக்க வேண்டும். அவர்கள் விரும்பினால், இக்கல்வி வழிகாட்டலோடு வீட்டில் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை வேண்டும். இதைச் செய்வதும் அரசின் கடமைதான்.

இந்த நிலத்தில் வாழும் அனைவருக்கும் இந்த நிலத்தின் மரபுகளைப் போற்றவும், பற்றவும் உரிமை உண்டு.

இவ்வுரிமையைச் செயலாக்குவதில் சிக்கல் நேர்ந்தால், அச்சிக்கலைச் சரி செய்ய வேண்டுமே தவிர, உரிமையைப் பறிக்கக் கூடாது.

போலி வாக்குறுதி அளிப்போரும், பழமைவாதிகளும், வணிக மருத்துவ நிறுவனங்களும் சமூகத்தின் கேடுகள். இக்கேடுகளைக் களையும் தீர்வு, தற்சார்பான வாழ்வியலில் மட்டுமே உள்ளது. மரபுதான் தற்சார்பின் தாய். ஆகவே, மரபுக்குத் திரும்புங்கள்.

ஹீலர் பாஸ்கர், வீட்டுப் பிரசவத்திற்காக எவ்வித வாக்குறுதியும் அளித்து, அதற்கான பணம் பெறவில்லை. நான் புரிந்துகொண்டவரை, அவர் அவ்வாறான மனிதர் அல்ல. அவர் மீது, புகார் அளித்தவர்கள் பகுத்தறிவுவாதத்தின் பித்துப் பிடித்த நிலையில் உள்ளோர். அவரைப் புரிந்துகொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.

சட்டப்படி அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. நியாயப்படி அவர் நன்மைகள் பல செய்துள்ளார். அவரை விடுவிக்க வேண்டும். மரபுச் சமூகத்திற்கு வருகை தரும் நம் மக்கள் அனைவரும் தொடர்ந்து செயல்படுங்கள். அவர் விடுதலை நம் விருப்பம்.

இச்செய்திக் கட்டுரையை, இதில் உள்ள உண்மைகளைப் பரவலாக எடுத்துச் செல்லுங்கள். பகுத்தறிவாளர்களுக்குப் பதில் கூறாதீர்கள். அவர்கள் அடுத்த பொய்களை உருவாக்க உழைப்பார்களே தவிர, சட்டத்தையும் மதிக்க மாட்டார்கள், நியாயத்தையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

ஆங்கிலமே அறிவு மொழி, அறிவியல் என்றாலே மேற்கிலிருந்து வருவதுதான் என்பவை எல்லாம் பகுத்தறிவின் மூடநம்பிக்க்கைகள். நாம் ஆங்கிலமும் அறிவோம் தமிழும் அறிவோம் ஆரியமும் அறிவோம். நமக்கு எம்மொழி மீதும் வெறுப்பில்லை. மேலை நாட்டு நுட்பங்களை நாம் வெறுப்பதில்லை. நம் நாட்டு நுட்பங்களை விட்டுக் கொடுப்பதுமில்லை.

நாம் பழமைவாதிகள் அல்ல, மரபுவாதிகள். மரபு என்பது காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்துகொண்டு, தொன்மையின் மெய்மையில் நிலைத்து வளர்வதாகும்.

நமக்குக் கருவிகளைப் பயன்படுத்தவும் தெரியும், அக்கருவிகள் இல்லாமல் வாழவும் தெரியும்.

நாம் பகுத்தறிவாளர்களை விட மேலான தகுதி பெற்றோர். அவர்களுக்கு இருப்பது ஒற்றைத் தன்மை. நம்மிடம் இருப்பது பன்மயம். தமிழ் போற்றிய அப்பாத்துரையார் 18 மொழிகள் அறிந்தவர். ’பன்மொழிப்புலவர்’ என்று அவருக்கு அடைமொழி உண்டு.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன் அவர் இயற்றிய, ‘குமரிக்கண்டம்’ எனும் நூலில் டைனோசரஸ் எனும் விலங்கு குறித்த தகவல்களை, மேலை நாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் பதிவு செய்தவர் அவர். இந்த பகுத்தறிவாளர்களுக்கு அந்தக் காலத்தில் இவ்வாறான கல்வியே கிடையாது. ஆங்கிலத் திரைப்படம் பார்த்த பிறகுதான், டைனோசரஸ் எனும் விலங்கை இவர்கள் அறிந்து கொண்டார்கள்.

நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லர். நாம் எந்தக் கண்டுபிடிப்பிற்கும் எதிரிகள் அல்லர். மாற்றங்களை நிராகரிப்பவர்கள் அல்லர்.

இயற்கைக்கும், பல்லுயிர் வாழ்க்கைக்கும் பொருந்தாதவற்றை நிராகரிக்கிறோம். இந்த மெய்யறிவை நமக்கு நம் மரபு வழங்கியுள்ளது.

மரபுக்கொள்கையில் நிலைப்பதே இறை அருள்தான்.

மரபு வாழ்வியலே புவிமுழுமைக்குமான தீர்வு. நாம் நம் மரபில் வாழத் துவங்குவோம்...

பி.பி.சி கட்டுரைச் சுட்டி:
https://www.bbc.com/tamil/india-45074210

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.