22/09/2018

நாடி நிலை...


சென்ற பதிவில் தேகதத்துவம் பற்றி பார்த்தோம். இனி நாடிநிலையினை எவ்வாறு அறியலாம் என பார்க்கலாம்.

வாதமானது உந்தியிலும் பித்தம் மார்பிலும் கபம் உச்சியிலும் குடிநிலையாக அமர்ந்துள்ளன. இவற்றை அறிய கரத்தைப் பிடித்து பார்க்கவேண்டும்.

ஆண் மக்களுக்கு வலக்கரத்திலும் பெண்களுக்கு இடக்கரத்திலும் நாடி பார்க்க வேண்டும்.

மணிக்கட்டுக்கு கீழே ஒரு அங்குலம் தள்ளி மூன்று விரல்களால் அழுத்தியும் தளர்த்தியும் பார்க்கும் போது ஆள்காட்டி விரலில் உணர்வது வாதம் என்றும் நடுவிரலில் உணர்வது பித்தம் என்றும் பவுத்திர விரலில் உணர்வது கபம் என்றும் அறியலாம்.

அதிகமாகப் பசியினால் வருந்தும் போதும் வெயிலில் திரிந்தபோதும் பயந்திருக்கும் போதும் மற்றும் ஸ்திரிபோகம் அனுபவித்த பின்னும் ஆற்றமுடியாத கோபம் உண்டாயிருக்கும் போதும் நாடியின் நடை நன்றாகப் புலப்படாது.

அதேபோல் லாகிரிகள் கொண்டபோது, விஷம் தீண்டியிருக்கும் போது,  தவம் பூண்டிருக்கும் போது, ஸ்நானம் செய்த போது போன்ற சந்தர்ப்பங்களில் நாடியின் நடையைக்கண்டு சொல்ல முடியாது.

கண்டத்திற்கு மேலாகிய சிரசில் வரும் நோய்களையும் இடையின் கீழாகிய கால்களில்வரும் நோய்களையும் நாடியினால் பரீட்சித்துக் கூறமுடியாதென்று பெரியோர் உரைத்துள்ளதை அறியலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.