17/09/2018

நேரு சிலை அகற்றிய உ.பி.அரசு....


உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் கும்பமேளா நடைபெற இருப்பதால் நகரை அழகுப்படுத்தும் பணிக்காக ஜவஹர்லால் நேருவின் சிலை அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய உருவாக்கத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் ஆளுமையை குறைத்து மதிப்பிடுவதற்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நேருவிற்கு எதிராக சர்தார் வல்லபாய் படேலை பாஜக முன்னிறுத்தி வரும் நிலையில், படேலுக்கு உலகிலேயே மிக பிரமாண்டமான சிலையை நிறுவுவதற்கான வேலைகளையும் செய்துவருகிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவு இல்லமான தீன் மூர்த்தி பவனை, முன்னாள் பிரதமர்கள் அனைவருக்கும் பொதுவான நினைவு இல்லமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், இதனை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் வரும் ஜனவரி மாதம் கும்பமேளா நடைபெறவுள்ளது. இதற்காக நகரை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக அலாகாபாத்தில் பல்சான் சௌராஹாவில் உள்ள ஜவஹர்லால் நேருவின் சிலை நேற்று முன்தினம் (செப்டம்பர் 13) அகற்றப்பட்டது. இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது முன்னாள் பிரதமரை அவமதிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர்களும், சமாஜ்வாதி கட்சியினரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிரேனை சாலையில் நிறுத்தி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். மேலும் அவர்கள், நேரு சிலை அமைந்திருந்த அதே சாலையில் உள்ள ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் தீனதயாள் உபாத்யாயா சிலை ஏன் அகற்றப்படவில்லை என கேள்வி எழுப்பினர். நேருவின் சிலையை அகற்றுவதன் மூலம், அவரின் சிந்தனைகளை அழிக்க முடியாது. இந்த செயல் சகித்துக்கொள்ள முடியாது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, சிபிஐ அலுவலகத்தை அடித்து நொறுக்கியது மட்டுமில்லாமல், அங்கிருந்த விளாடிமிர் லெனின் சிலையையும் புல்டோசரை வைத்து தகர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.