02/09/2018

விரும்புவது தான் நடக்கும் - WORLD IS A MIRROR...


நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியே தான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.

இது கதையல்ல…

சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் ஜூலியோ டயஸ் என்கிற சமூக ஆர்வலருக்கு உண்மையில் ஏற்பட்ட அனுபவம்.. அமெரிக்க ஊடகங்களில் இந்த செய்தி பெரிதும் பேசப்பட்டது...

ஜூலியோ டயஸ் நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

ஒரு சுரங்கபாதையை கடக்கும் போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியை காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல் வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டுகிறான்.

திருடனை பார்க்கிறார் இவர். அவனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும். டீன் ஏஜ் வயது.

அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைக்கிறார் இவர். அவன் தப்பியோட முயற்சிக்கும் தருணம், அவனை கூப்பிடுகிறார்.

“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியை காட்டி எல்லார்கிட்டேயும் பணம் பறிக்கிறதா இருந்தா இந்த கோட் உனக்கு தேவைப்படும். இதை போட்டுக்க. ஏன்னா… வெளியிலே ரொம்ப குளிரா இருக்கு!” கூறியவாறே தனது கோட்டை கழட்டுகிறார்.

திருடனுக்கு ஒரு கணம் குழப்பம். இவரை வித்தியாசமாக பார்த்தான்.

“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?”

இவர் ஒரு படி மேலே போய் … “நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு ஒ.கே. என்றால் நாம் இருவரும் பக்கத்தில் ஏதாவது கடையில் டின்னர் சாப்பிடலாம்” என்றார்.

அவன் இன்னும் அவரை நம்பாமாலே பார்த்தான்.

“இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ ரிஸ்க் எடுத்து உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் டின்னருக்கு வா…”

திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரை சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.

அருகில் சாலையோரம் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறார்கள்.

மேனேஜர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து இவருக்கு விஷ் செய்கிறார்கள்.

“என்ன இது உங்களுக்கு இப்படி ராஜ மரியாதை தருகிறார்கள்? நீங்கள் தான் ஒருவேளை இந்த இடத்திற்கு சொந்தக்காரரோ?”

“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு சாப்பிடுவது வழக்கம்… எனவே எனக்கு அனைவரும் நல்ல அறிமுகம்”

“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்து கொள்கிறீர்களே…?”

“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று உனக்கு பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”

“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று நினைத்தேன்”

சாப்பிட்டு முடிக்கும்போது, அவனிடம், “என்னிடம் கொடுக்க பணம் இல்லை. பர்ஸ் தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்கு பணத்தை செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.

நியாயமாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமே திருப்பித் தந்தான்.

அடுத்து இவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு ஒ.கே. என்றால் இந்த கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்த கத்தியை திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.

ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக் கொண்டது போலவும் ஆச்சு.

வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… டயம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதலயும் அவன் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டதலயும் எந்த ஆச்சரியமும் இல்லை” என்றார்.

குறிப்பு :

ஜூலியோ டயஸுக்கு சாத்தியப்பட்ட இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா……..? படும். படும்..

* எதையும் பாஸிட்டிவ்வாக பார்ப்பவர்களுக்கு.

* எந்த சூழலிலும் இன்சொல்லே பேசுபவர்களுக்கு.

* இடியே விழுந்தாலும் நிலைகுலையாத மனப்பக்குவம் இருப்பவர்களுக்கு..

* தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படாமல் மற்றவர்களை பற்றியும் கொஞ்சம் யோசிப்பவர்களுக்கு..

நம்பிக்கையும் நல்லெண்ணமும் நேர்மறை சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். இந்த பக்குவத்தை நீங்கள் வளர்த்துக்கொண்டால்… அட நீங்கள் விரும்புவது தான் நடக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.