10/10/2018

பிராமணருக்கு தேவதாசிகள் இலவசம்: திராவிட அரசர் காலத்தின் பதிவுகள்...


விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் முதன்முறையாக, நால்வருணக் கோட்பாட்டின்படி ஆட்சி செய்தது.

விஜயநகரப் பேரரசின் சமூக அமைப்பைப் பற்றி வரலாற்றாசிரியர் குறிப்பிடுவது, ‘சமுதாயத்தில் உயர்குடி மக்களாகக் கருதப்பட்டவர்கள் பிராமணர்களாவர். இரண்டாவதாகச் சத்ரியர். மூன்றாவதாக வைசியர்கள், இறுதியாகச் சூத்திரர்கள்’ (தமிழகத்தில் விஜயநகர ஆட்சி / பக் – 98/முனைவர் அ.சிங்காரவேல்/ சரசுவதி மகால் நூலக வெளியீடு 2007)

தமிழ் அரசர் ஆண்ட காலத்து வரலாற்றில் பிராமணருக்கான முக்கியத்துவம் குறித்து பூதக் கண்ணாடி வைத்துத் தேடும் ’முற்போக்கு’க் கோட்பாட்டாளர்கள், வெகு அண்மைக் காலத்தில் ஏற்பட்ட இந்த சீரழிவுகளைப் பற்றி வாயே திறப்பதில்லை.

மரபு வழியாகவே எச்சாதியினரும் பூசை செய்யலாம் என்ற நிலையிலிருந்த பழனிக் கோயிலில் பிராமணர் அல்லாதோர் பூசை செய்யக்கூடாது எனத் தடுத்தவர் ’திராவிடர்’ திருமலை நாயக்கர்.

இதற்கான செப்பேட்டுச் சான்று,

`பிராமணர் அல்லாத பண்டாரங்கள் பழனி கோயிலில் பூசை செய்வதை ஏற்றுக்கொள்ளாமல் புதிதாகப் பிராமணர்களை நியமித்து அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிட்டு இராமப்பய்யன் செப்பேடு வழங்கியுள்ளார். புலிப்பாணி பாத்திர மரபில் வந்த பண்டாரங்களுக்கும் சிவப்பிராமணர்களுக்கும் எந்த எந்த வேலை என்பதை இராமப்பய்யன் வரையறுத்துள்ளார். திருமலை நாயக்கர் செப்பேடு என்பதில் ஐயமில்லை. செப்பேட்டில் திருமலையின் பெயரும் உள்ளது. தற்போது பழனிக் கோயிலில் இச்செப்பேடு உள்ளது.’ (தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி-2/ ச.கிருக்ஷ்ணமூர்த்தி/மெய்யப்பன் தமிழாய்வகம் 2002/ பக் – 81)

தமிழர்கள் மரபுவழியாகவே, தம் கோயில்களில் தமிழர்களைத்தான் பூசாரிகளாகக் கொண்டிருந்தனர், தமிழில்தான் வழிபாடு செய்துவந்தனர். இந்த முறையை மாற்றியது திராவிடர் ஆட்சிதான். விஜயநகர, நாயக்கர் அரசுகளின் ஆட்சி மொழி, தெலுங்கு, வழிபாட்டு மொழி, சமஸ்கிருதம். தமிழ் புறந்தள்ளப்பட்டது. இதற்கான மிக முக்கியச் சான்றுதான், பழனி கோயிலில் பிராமணர்தான் பூசை செய்ய வேண்டும் என்ற திருமலை நாயக்கரின் ஆணை.

’திராவிட’ அரசர்கள் பிராமணருக்கு இந்தளவு முக்கியத்துவம் அளித்தமைக்கு அடிப்படைக் காரணம், ‘திராவிடர்’ என்பது தென்னிந்திய பிராமணரின் தொகுப்புப் பெயர் என்பதே ஆகும். விஜயநகரப் பேரரசு, நாயக்கர் அரசு ஆகியவற்றின் அரசர்கள் பிறப்பால், முழு சத்ரியர்கள் அல்லர். பிராமணக் கலப்பாளர்கள். இதற்கான பல சான்றுகளை முந்தைய பதிவுகளில் கண்டோம்.

’திராவிடர் என்போர் தென்னாட்டு பிராமணரே’ என்ற கருத்துக்கான சான்றுகள் இவை. இவைபோல இன்னும் ஏராளமான சான்றுகள் வரலாற்றுப் பக்கங்களில் கொட்டிக்கிடக்கின்றன.

’திராவிடர்’ என்றால்தான் ’பிராமணர் வரமாட்டார்’ என்று கூறுவது, வரலாற்றை அறியாமல் முன் வைக்கும் கருத்து அல்லது அறிந்தே ஏதோ உள் நோக்கில் வெளிப்படுத்தும் கருத்து.

தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசரும் நாயக்கரும் சீரழித்ததில், தமிழரின் மதிப்பீடுகள் பெருமிதங்கள் வாழ்வியல் நெறிகள் அனைத்தும் நிலைகுலைந்தன. தமிழரின் சமூக அமைப்பு முறையே தலைகீழ் மாற்றத்தைக் கண்டது. தமிழ்க் குலங்கள், சாதிகளாக மாறி தமக்குள் சண்டையிட்டுக்கொள்ளத் தொடங்கின. இவ்வாறான ஏற்றத் தாழ்வை சாதிய அடுக்கை பிராமணர்கள்/ திராவிடர்கள் திட்டமிட்டு உருவாக்கினர்.

ஆங்கிலேயர் வருகையின்போது தமிழகம் இருந்த நிலையைப் பார்க்கலாம்.

புக்கானன் என்ற ஆங்கிலேய அதிகாரி தான் ஆய்வு செய்த ஊர்களில் எந்தச் சாதியினர் நிலவுடைமையாளராக இருந்தனர் என்பதைப் பட்டியலிடுகிறார். கொங்குப் பகுதித் தரவுகளில் சில கீழே தரப்படுகின்றன.

1. ’கடம்பூர் – விளைநிலங்களை வைதிகப் பிராமணரே பயிரிடுகின்றனர். அவர்களுக்கு வரி குறைவு. ஊரில் உள்ள மற்ற வீடுகளையும் தமதாக்கி வாழ்ந்தனர். அவர்களுக்கு வீடு இலவசம். உணவு இலவசம். தேவதாசிகள் இலவசம்.

2. கரூர் – பெரும்பகுதி நிலம் பிராமணருக்கு சொந்தம்.

3. நல்லராயன்பாளையம் – பிராமணரே இங்கு நஞ்சை பூமிக்குச் சொந்தக்காரர்.அது அவர்களுக்கு வழங்கப்பட்ட இனாம்.

4. கிராமத்துக் கால்வாய் 200 காணி நிலத்திற்குப் பாய்கிறது (265 ஏக்கர்). இங்குள்ள நஞ்சை யாவும் பிராமணருக்கே சொந்தம். மீதி நிலம் யாவும் பொட்டல்.இதுவும் நான்கு பிராமணருக்கே சொந்தம்

5. பெருந்துறை – இவ்வூரில் பிராமணருக்கும் முகமதியருக்கும் இனாம் நிலங்கள் உள்ளன. முகமதியர் சில கடமைகளைச் செய்ய வேண்டும். பிராமணருக்கு அது இல்லை.’

(கொங்குநாடும் கிழக்கிந்தியக் கம்பெனியும் 1792-1858/தமிழ்நாடன்/புதுமலர் பதிப்பகம் 2009/ பக் – 9)

இது ஒரு சிறிய சான்று அவ்வளவே. தமிழகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் பிராமணர் நிலவுடைமையாளராக இருந்தனர். அவர்கள் தமிழ்க் குலங்களை அடிமைகள் போல் நடத்தினர். இந்தக் காலத்தில்தான், திராவிட/ தென்னிந்திய பிராமணர் ஆட்சிக்காலத்தில்தான் தீண்டாமை உருவெடுத்தது.

நிலம், சாதி ஆதிக்கத் தனியாருக்கு முழு உடைமை ஆகிய பிறகு, பிற குலத்தவருக்குப் பிழைப்புக்கு வேறு வழியில்லை என்றான பிறகு, சாதியக் கொடுமைகள் உருவாகத்தான் செய்யும். இத்தகைய நிலவுடைமை, தமிழர் அரசாண்ட எந்தக் காலத்திலும் நிலவவில்லை.

ஆங்கிலேயர் வந்தபோது எடுக்கப்பட்ட மற்றொரு கணக்கு இது.

கொங்கு மண்டலத்தின் குறிப்பிட்ட பகுதியின் ஜமீன்கள்/ பாளையங்கள் எந்தெந்த சாதியினரிடம் இருந்தன என்பதைப் பட்டியலிடுகிறது.

பாளையங்கள் – 17
ஜமீன்கள் – 6
பட்டக்காரர் – 6
மற்றவர் – 9
மொத்தம் – 38
இவற்றில்,
நாயக்கர் உரிமை – 20
கவுண்டர் காணி -12
மற்றவர் – 6
(மேலது நூல்)

பாளையங்கள், ஜமீன்கள்தான் சுரண்டலின்கொடூர வடிவங்கள். இம்முறையை முதலில் அறிமுகம் செய்தவர் விசுவநாத நாயக்கர் எனக் கடந்த பதிவில் கண்டோம். பிராமணரை மட்டுமே தனது உயர் அதிகாரிகளாக வைத்திருந்து, அதை நியாயப்படுத்தி – அர்த்த சாத்திர நெறிப்படி அரசாண்ட கிருக்ஷ்ணதேவராயரின் அதிகாரி இவர் எனது குறிப்பிடத்தக்கது.

இந்த விசுவநாத நாயக்கர் வகுத்துகொடுத்த பாளையக்காரப் பாதையில், அவருக்குப் பின்னர் வந்த நாயக்க மான்னர்கள் பீடு நடைபோட்டனர்.

தொல் தமிழ்க் குலங்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றை, பிராமணர் - வைசியர் – சத்ரியர் - சில தமிழ் வேளாளக் குலத்தவர் -ஆகிய பிரிவினருக்கு வழங்கினர் நாயக்க மன்னர்கள். இதன் விளைவுகளே மேற்கண்ட பாளையப்பட்டுப் பட்டியல்.

இவற்றில் பெரும்பான்மையை நாயக்கர் எடுத்துகொள்ள, தமிழ்க் குலங்களில் ஒன்றான கவுண்டர்களும் பிற தமிழ்க் குலத்தவர் சிலரும் இப்பாளைய முறையில் ஈடுபட்டுச் சொந்த மக்களையே சுரண்டினர். இதுதான், சாதி வடிவத்தின் ஊற்றுக் கண் ஆகும்.

திராவிட / பிராமணருக்கு சேவகம் செய்த, பாதுகாப்பளித்த பல தமிழ்க் குலங்களை அப் பிராமணர், ஆதிக்கச் சாதிகளாக்கினர். அதாவது, அச் சாதிகள் தம்மோடு மோதாமல் அவற்றுக்குள்ளேயே மோதிக் கொள்ளும்படிப் பார்த்துக்கொண்டனர். இதற்காகவே, அவர்கள் தமிழ்க் குலத்தினர் சிலரையும் நிலவுடைமைச் சுரண்டல்காரர்களாக வளர்த்துவிட்டனர் எனலாம்.

மேலும் தென்னிந்திய பிராமணரான திராவிட ஆட்சியாளருக்கு, தமிழ்நாட்டு உழைக்கும் மக்கள் தமக்கெதிராகத் திரும்பிவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அடுத்த நாட்டில் சுரண்டும் எந்தப் பிரிவுக்கும் உள்ள அச்சமே இது. இந்த அச்சத்தைப் போக்கிக்கொள்ளவும், இவ்வாறு செய்தனர் எனலாம்.

இந்தத் திராவிடக் கொள்ளை நடத்தப்பட்டபோது, தமிழர்களின் பெரும்பகுதி மக்கள் அனுபவித்த கொடுமைகள் வார்த்தைகளில் விளக்க இயலாதவை. அதுவரை, அறிவார்ந்த குலமாக இருந்த பறையர், பள்ளர், வள்ளுவர், பாணர், கணியர், அம்பட்டர்,சானார் உள்ளிட்டவை கடுமையாக ஒடுக்கப்பட்டன.

உண்மையில், இந்தக் குலங்கள் அனைத்துமே சாதிகளாக மாற்றப்பட்டது, ’திராவிட’ ஆட்சியில் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.