13/10/2018

ஆன்மாக்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் இறைவன் கைப்பற்றுகிறான்...


எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.

சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளது.. குர்ஆன் 39: 42..

இந்த வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மைகளை மனிதர்களுக்கு கூறிக் கொண்டுள்ளது.

பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கும். உயிர் என்பது என்ன? ஆன்மா என்பது என்ன?

இந்த குழப்பம் நீண்ட நாட்களாக எனக்கும் இருந்தது. மேலே உள்ள வசனத்தை வாசித்து உள் வாங்கிக் கொண்டவுடன் எனக்கு ஓரளவு உயிருக்கும் ஆன்மாவுக்குமுள்ள வித்தியாசம் புரிய ஆரம்பித்தது.

நாம் பழக்கத்தில் உபயோகிக்கும் உயிர் என்றால் என்ன?

சுவாசத்தை சீராக்குதல், உணவு செரிக்கப்படுதல், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படுதல், இரத்தம் சுத்தமாக்கப்படுதல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்படுதல், தேவையற்ற பொருள்கள் கழிவுகளாக வெளியேற்றப்படுதல், உடலுக்கு தீங்கு வராமல் அனிச்சைச் செயல்கள் நிகழ்த்தப்படுதல் ஆகிய இந்த செயல்களை, உடலின் உறுப்புக்களை இயக்குவதன் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டு இருப்பதையே உயிர் என்கிறோம்..

உயிர் இருக்கும் வரை அந்த செயல்கள் நடந்துக் கொண்டே இருக்கின்றன.... உடலும் அழியாது இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

ஆனால் உயிர் எப்பொழுது உடலினைப் பிரிகின்றதோ அப்பொழுது அந்த செயல்கள் எல்லாம் நிறுத்தப் பட்டு உடலும் அழியத் துவங்குகின்றது.

மனிதன் தூங்கும் போதும் மரணிக்கும் போதும் ஆன்மாக்களை கைப்பற்றுவதாக இறைவன் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் கூறுகிறான்.

நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது உடலின் மற்ற அங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை இறைவன் கைப்பற்றினால் நாம் இறந்து விடுவோம்.

ஆனால் இங்கு இறைவன் தூக்கத்தில் கைப்பற்றி திரும்பவும் விட்டு விடுவதாக குறிப்பிடுகிறான்.

எனவே இறைவன் கைப்பற்றுவது நமது உயிரை அல்ல. நமது ஆன்மாவை என்ற முடிவுக்கு வருகிறோம். குழப்புகிறதா? 

இதனை ஒரு சிறு உதாரணத்தின் மூலம் விளங்க முயற்சிப்போம்.

அன்றாடம் நாம் பயன் படுத்தும் வாகனத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

உடல் = வாகனம்
ஓட்டுனர் = ஆன்மா
என்ஜின் = மனம்
பெட்ரோல் = உயிர்

வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் போது எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். மனிதன் இறந்து விடுகிறான்.

எரி பொருள் தீர்ந்ததால் ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு இறங்கி விடுகிறார். இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேறி விடுகிறது..

ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது? என்றால் ஆன்மா தான்.

ஆன்மாவிற்கு அழிவில்லை. இந்த ஆன்மாவைத்தான் இறைவன் உறங்கும் போது தன் கைவசம் எடுத்துக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் நமது உடலுக்கு திரும்பவும் அனுப்புகிறான்.

இப்போது உயிருக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதல்லவா?

இனி ஆதாரபூர்வமான நபி மொழி ஒன்றை பார்போம்.

நபியவர்கள் கூறினார்கள்...

ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பி வைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்து விடுகின்றார். (முஸ்லிம்).

இந்த நபி மொழியின் படி குழந்தையின் 40 வது நாளில் ஒரு வானவர் இறை கட்டளைபடி ஊதுகிறார் அல்லவா? அதுதான் இறைவன் அனுப்பும் ரூஹ். அதாவது ஆன்மா.

அதற்கு முன்னால் விந்தணுவும் கரு முட்டையும் சேர்ந்து சதைக் கட்டியாக 40 நாள் வரை வளருகிறதே அதுதான் உயிர்.

ஒரு பொருளுக்கு உயிர் இல்லை என்றால் அது நாற்பது நாள் தாயின் வயிற்றில் வாழ முடியாது. வளர்சியும் இருக்காது.

ஆன்மாவுக்கும் உயிருக்கும் உள்ள வித்தியாசங்களை இப்போது நாம் புரிந்து கொண்டோம்.

இந்த ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே சிறப்புத் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது.

நன்மை எது தீமை எது என்பதை பகுத்தறியும் பகுத்தறிவை இறைவன் மனிதனுக்கு மட்டுமே விஷேசமாக வழங்கியுள்ளான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.