01/10/2018

வள்ளுவர் கோட்டம்...


வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காக கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும்.

இந்நினைவகம், சென்னையில் 1976 ஏப்ரல் 15 ஆம் தேதி அமைக்கப்பட்டது..

இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும்.

இதன் அடிப்பகுதி 25 x 25 அடி அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது.

7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன.

கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை.

நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது.

எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது.

இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன.

இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும்.

இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது.

அரங்கம்..

220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது.

இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன.

இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ்வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம்.

இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்க முடியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.