25/10/2018

சாகும் தறுவாயில் இருக்கும் சனாதனம், வேறு வழியின்றி, மோடி அரசின் மூலம், தனக்கே உரிய சதி அஸ்திரங்களை பல முனைகளிலும் தொடுத்துப் பார்க்கிறது...


ஒருபக்கம் மார்க்சிஸ்ட் அரசை அகற்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக சபரிமலையை ரணகளப்படுத்திக் கொண்டு; மறுபக்கம், முல்லைப்பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி இதோ என்கிறது.

ஏதோ ஏழு நிபந்தனைகளுடன் அனுமதியாம்; யாரை ஏமாற்றுகிறது மோடி அரசு? அப்பட்டமான சட்டமீறல் இதனைப் புரிந்துகொள்ளாதிருக்க, தமிழ்நாடு ஒன்றும் முட்டாளில்லை; அதேபோல் கேரளாவும்தான்.

செல்லுபடியாகாத இந்தத் தில்லுமுல்லு வேலைகளை நிறுத்திக்கொள்ளுமாறு மோடி அரசை எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

முல்லைப்பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டிக்கொள்ள கேரள அரசுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது ஒன்றிய பாஜக மோடி அரசு. அதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் கணக்கீட்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கேட்டிருக்கிறது. இந்த அனுமதியை 7 நிபந்தனைகளுடன் வழங்குவதாகவும் சொல்லியுள்ளது.

நாம் கேட்கிறோம், இந்த 7 நிபந்தனைகள் என்ன மோடி அரசாகப் பார்த்து விதிப்பனவா? இது சட்டப்படியான நடைமுறையல்லவா! இதற்கு முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தத்தில் சாத்தியமே இல்லாதபோது, ஏதோ நியாயவான் போலவும் கேரளாவின் நண்பன் போலவும் காட்டிக்கொள்வது ஏன்? இதனால், ‘மோடி அரசு ஒரு வேடதாரி’ என்பதை மறைத்துவிட முடியாது.

நாம் எழுப்பும் கேள்வி இதுதான்: அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகவும் முல்லைப்பெரியார் அணை ஒப்பந்தத்திற்கு எதிராகவும் எப்படி இந்த அனுமதியை மோடி அரசு வழங்க முடியும்?
முல்லைப்பெரியார் அணை விடயத்தில் ஒப்பந்தத்தைத் தாண்டி ஒன்றிய அரசு பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. பிரச்சனை என்றால், அதுவும் கேரள அரசு எழுப்பினால், அதையும் நீதிமன்றம்தான், ஒப்பந்த விதிகளுக்கு உட்பட்டே பேச முடியும். அதை விடுத்து முல்லைப்பெரியார் அணை விடயத்தில் மோடி அரசு மூக்கை நுழைப்பதை கடுமையாக எச்சரிக்கிறோம்.

தமிழ்நாட்டையும் தமிழக அரசையும் ஒரு பொருட்டாகக் கருதாமல், ஒன்றிய சுற்றுச்சூழல் துறையையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, அதிகார அத்துமீறல் செய்து, பாசிச-சனாதனப் போக்கில் இந்த அனுமதியைத் தயாரித்திருக்கிறது மோடி அரசு.

சட்டப்படி செல்லுபடியாகாத இந்தத் தில்லுமுல்லு அனுமதியை ஏற்கப்போகிறதா கேரள மார்க்சிஸ்ட் அரசு?

தமிழக அரசு இதில் என்ன செய்யப்போகிறது? இந்த வெற்றுவேட்டு அனுமதியைக் காட்டி தமிழக, கேரள இரு அரசுகளையுமே மடையர்களாக்கும் மோடி அரசின் கபடத்தைத் தோலுரித்துக் காட்டுவதுடன், அதனைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

7 நிபந்தனைகளில் 5ஆவது நிபந்தனை, ‘தற்போது வழங்கப்பட்டுள்ள ஆய்வு எல்லைகள் உச்ச நீதிமன்ற/பசுமைத் தீர்ப்பாய உத்தரவுற்கு கீழ்பட்டவை’ என்பது; இதுவும் அணை ஒப்பந்தத்தைக் கட்டுப்படுத்தாது என்பதை மோடி அரசுக்கு உறைக்கும்படிச் சொல்கிறோம்.

மக்களாட்சி முறை உள்ள நாடு இது; இதில் சூழ்ச்சி, சதி, மோசடி, தில்லுமுல்லு இவற்றையே செயல்முறையாகக் கொண்டு நடக்கும் மோடியின் பாசிச-சனாதன ஆட்சிமுறை சட்டவிரோதமாகும். நிரந்தரமாக இதனைக் கைவிடுவதுடன், போலியான இந்தச் சுற்றுச்சூழல் அனுமதியையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.