07/10/2018

ஊசியும் நூலும்...


தையல் வேலைக்கு மிகவும் அவசியமானது ஊசியும் நூலுமே ஆகும்.  ஊசியானது மூன்று அம்சங்களை உடையதாய் இருத்தல் வேண்டும்.  அவையாவன் ஒன்று முனை கூர்மையாய் இருக்க வேண்டும். இரண்டு, உறுதியாய் இருத்தல் வேண்டும்.  மூன்று, காது  இருத்தல் வேண்டும்.  பிறகு நூலும் நல்ல நூலாக இருத்தல் அவசியமாகும்.

மேற்சொன்ன மூன்று அம்சங்களும் நன்கு அமைந்த ஊசியின் காதில் நல்ல நூலினை நுழைத்து, இரு துண்டாக உள்ள துணிகளை நூலின் உதவியால் நன்கு இணைத்து ஒன்று படுத்த முடியும்.

ஒரு மனிதன் சாஸ்திரங்களைக் கற்று வல்லவன் ஆவதற்கு மூன்று  குணநலன்கள் வேண்டுவது அவசியம்.  அம்மூன்று குணங்களும் அவன் உள்ளதிலேயே அமைந்திருத்தல் வேண்டும்.  ஒன்று, ஞான நூல்களின் உட் பொருள்களை நன்கு சிந்தித்து அறிதற்கு மிகக் கூர்மையான அறிவு.  இரண்டு, கல்வி கற்கும் போது வேறு பயனற்ற வழிகளில் மனத்தைச் செல்ல விடாமல் நல்ல வழியில் ஒரே சிந்தனையால் குருகுலு வாசமாக இருந்து சாதிக்கவல்ல திடமான உறுதி.  மூன்று, அறிவிலும், அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோரை அணுகிக் கீழ்படிந்து, அவர் உபதேசிக்கும் அறவுரைகளையும், மிக நுட்பமான பொருள்களையும் செவியாரக் கேட்டு மனங்குளிர வாங்கி, உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.  கல்வி, கேள்வி இரண்டும் அறிவின் வளர்சிக்கு மிக அவசியமாகும்.  ஆதலால் கல்வி, கேள்விகளைக் கிரகிக்கக் கூடிய காதும் வேண்டும்.

ஆகையால், கல்வி கற்பதற்கு வேண்டிய சாதனங்கள், நல்ல ஞான நூல்கள், அவற்றைக் கற்க மிகக் கூர்மையான அறிவு, அசையாத திட வைராக்கியம், கல்வி கேள்விகளை நன்கு கிரகித்துப் பலன் அளிக்கவல்ல காது, இவையாம்.  இதற்குப் பொருத்தமான உவமை ஊசியும் நூலும்.  இது சூட்சும ஞானத்தை விளக்கக் கூடியதாகவும் உள்ளது

ஐஸ்வரியவான் கடவுள் ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஓட்டகம் ஊசியின் காதில் நுழைவது எளிது. என்று இயேசு கூறினார் – லூக்கா 8 – 25.

ஒட்டகம் என்ற பதத்தை ஒட்டு + அகம் எனப் பிரித்துப் பொருள் கொண்டால், புறத்தில் அலையும் மனத்தை அகத்தில் ஒட்டவை என்பதாகும்.  மனத்தை அகத்தில் ஓட்ட வைக்க (ஒருமைப் படுத்த) பிராண வாயுவானது, ஊசியின் காது போன்ற சிறிய துவாரத்தின் வழியாய்ச் சென்று, சிரசின் உச்சியை அடையும்.  அகத்தில் மனத்தை ஒட்ட வைத்தவர்கள் சிரசின் உச்சி ஸ்தானம் ஆகிய கடவுள் ராஜ்யத்தில் பிரவேசிப்பது எளிது என்ற கருத்தின் அவ்வாறு கூறினார்.

“காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று பட்டினத்தார் அருளியுள்ளார்.

அருளாளர்களின் அருள் மொழிகளைச் செவி மடுத்து உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டவர்களே வாழ்வின் பயனாகிய திருவடி ஞானத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆவர்.  செவி மடுக்காதவர்கள், திருவடி ஞானத்தைப் பெறார் என்பது தோன்ற வாராது காண் கடை வழிக்கே என்றார்.  உள்ளத்தில் உறுதியும் இலட்சியமும் இல்லாதவர்களைக் காதற்ற ஊசிக்கு உவமையாகக் கூறினார்.

ஊசியின் காதில் நல்ல நூல் நுழைந்து இருதுணிகளை ஒன்று படுத்தும் புறநிலையில் காணப்படுகின்ற ஊசியும் நூலும்..

அகநிலையில், ஒளிமயமான சிவத்தை உள்ளத்தில் அறிந்து, அந்த எல்லையிலேயே நின்று தியானிக்க, ஊசியின் காது போன்ற சிறிய துவாரத்தின் வழியாய் (திருக்க தவந் திறந்து ) மனம் உட்சென்று ஒடுங்க, *நாதகலை, விந்து கலை ஆகிய இரு திருவடிகளும்* ஒன்றாகி, கடைவழிக்குச் செல்லும்.  ஞான இரகசியங்களை குரு முன்பாக உணராதவர்கள் கடை வழிக்கு வாரார்கள் என்பது தோன்ற “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்றார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.