தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, 2015-ம் ஆண்டில் நடந்த விபத்துகளில் 1.5 சதவீதம் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியதால் விபத்து நடந்துள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவதால், சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 பேர் உயிரிழக்கின்றனர் என அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மும்பையில் மட்டும் மதுஅருந்தி வாகனம் இயக்கியதால் கடந்த 2015-ம் ஆண்டில் 84 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்கள் ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து மது விநியோகிக்கும் வகையிலான புதிய திட்டம் ஒன்றை மஹாராஷ்ட்ரா அரசு செயல்படுத்த ஆலோசித்து வருகிறது.
பொதுவாக மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. .
இதுதொடர்பாக மாநில அரசின் கலால்வரித்துறை அமைச்சர் சந்திரசேகர் பவான்குலே ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமே விபத்துக்களைக் குறைப்பதுதான். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் இயக்குபவர்கள் மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் விபத்தில் சிக்குகிறார்கள். ஆகவே மதுவகைகள் வீட்டிலேயே குடித்தால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் உண்டாகும் விபத்துக்களைக் குறைக்கலாம்.
அதேசமயம் மதுவகைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு நாங்கள் கொண்டுவரும் திட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். நாட்டிலேயே முதன்முறையாக இத்தகைய திட்டத்தை மகாராஷ்ட்ரா அரசுதான் கொண்டுவருகிறது.
ஆன்-லைனில் காய்கறிகள், மளிகைபொருட்களை ஆர்டர் செய்வதுபோல், இனிமேல் மதுவகைகளையும் ஆர்டர் செய்து மக்கள் பெற முடியும். ஆனால் ஆர்டர் செய்யும் மக்களுக்குக் கண்டிப்பாக ஆதார் கார்டு இருக்க வேண்டும். அத்துடன் விற்கப்படும் மதுபாட்டில்களில் ஜியோ டாக் பொருத்தப்பட்டு இருக்கும். இதனைக் கொண்டு பாட்டில்களை வாங்குவோர் யார், விற்போர் யார் எனத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதன் மூலம் சட்டவிரோதமாக மது விற்பனையையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.